இனி வரும் தேர்தல்களில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுவோம் ஓ.பன்னீர்செல்வம் பேச்சு


இனி வரும் தேர்தல்களில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுவோம் ஓ.பன்னீர்செல்வம் பேச்சு
x
தினத்தந்தி 22 Oct 2017 10:45 PM GMT (Updated: 22 Oct 2017 7:49 PM GMT)

இனி வரும் தேர்தல்களில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெறுவோம் என்று துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசினார்.

பொன்னேரி,

பொன்னேரியில் திருவள்ளூர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் 46-ம் ஆண்டு தொடக்க விழா மற்றும் அ.தி.மு.க. அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு திருவள்ளூர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும் பொன்னேரி எம்.எல்.ஏ.வுமான சிறுணியம்பலராமன் தலைமை தாங்கினார். தமிழ் ஆட்சி மொழி மற்றும் தமிழ்பண்பாட்டு துறை அமைச்சர் பாண்டியராஜன் கலந்து பேசினார்.

துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொண்டு பேசியதாவது:-

அண்ணாவின் நம்பிக்கை நாயகனாக எம்.ஜி.ஆர். விளங்கினார். இவர் நாடகங்கள். சினிமாவில் நடித்து புகழ் பெற்று விளங்கிய நேரத்தில் திராவிட முன்னேற்ற கழகத்திற்காக பாடுபட்டார். அண்ணா மறைவுக்கு பின் அ.தி.மு.க. உருவாக கருணாநிதி தான் காரணமாக இருந்தார்.

கருணாநிதி தி.மு.க.வை ஒரு குடும்பத்தின் பிடியில் கொண்டு வந்ததை எதிர்த்து தான் எம்.ஜி.ஆர். அ.தி.மு.க.வை தொடங்கி 1977-ம் ஆண்டு தமிழகத்தில் ஆட்சியை பிடித்தார்.

மக்கள் சக்தி மூலம் 1980, 1984-ம் ஆண்டுகளில் தொடர்ந்து ஆட்சியை அமைத்து முதல்-அமைச்சராக ஆனார். ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் ஆட்சியும் கட்சியும் ஒரு குடும்பத்தின் பிடியில் செல்லக்கூடாது என்பதற்காக மீண்டும் இணைந்துள்ளோம் 2016-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று முதல்-அமைச்சர் ஆவதற்காக மு.க.ஸ்டாலின் பல விதமான வேடங்களில் நடித்தார். சைக்கிள், மோட்டார்சைக்கிள், டிராக்டர் ஓட்டி மக்களை கவர நினைத்தார்.

அவரது எண்ணம் ஈடேறவில்லை ஜெயலலிதா மீது மக்கள் வைத்திருந்த அன்பு, பாசம் பற்று காரணமாகவே மீண்டும் ஆட்சியை அமைத்தார். 2006-2011-ம் ஆண்டு தி.மு.க. ஆட்சி செய்த போது நில அபகரிப்பு, சட்டம் ஒழுங்கு சீர்குலைவு, அராஜகங்கள் மூலமாகவே அவர்கள் மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது என தி.மு.க.வுக்கு மக்கள் முற்றுப்புள்ளி வைத்தனர்.

உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றதில் முறைகேடுகள் நடந்ததாக தொடர்ந்த வழக்கில் சென்னை மாநகராட்சியில் 100 வார்டுகளுக்கு மறு தேர்தல் நடத்த சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது தி.மு.க. ஆட்சியில்தான். இரட்டை இலை சின்னத்தை கண்டிப்பாக பெற்று விடுவோம். வருகிற தேர்தல்களில் நாம் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெறுவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story