மத்திய பா.ஜ.க. அரசிடம் இரட்டை இலை சின்னத்தை பெறவே அ.தி.மு.க. அடிமையாக உள்ளது மு.க.ஸ்டாலின்


மத்திய பா.ஜ.க. அரசிடம் இரட்டை இலை சின்னத்தை பெறவே அ.தி.மு.க. அடிமையாக உள்ளது மு.க.ஸ்டாலின்
x
தினத்தந்தி 22 Oct 2017 11:30 PM GMT (Updated: 22 Oct 2017 8:02 PM GMT)

இரட்டை இலை சின்னத்தை பெறவே மத்திய பா.ஜ.க. அரசிடம் அ.தி.மு.க. அடிமையாக இருக்கிறது என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

சென்னை,

தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கத்தரிக்காய் முற்றினால் கடைத்தெருவுக்கு வந்து தானே ஆகவேண்டும் என்பார்கள். அதுபோல தமிழகத்தை ஆளும் அ.தி.மு.க.வினர் மத்திய பா.ஜ.க. அரசுக்கு செய்யும் அடிமைச் சேவகம் குறித்து தி.மு.க. மற்ற எதிர்க்கட்சிகளும் மட்டுமின்றி பொதுமக்களும்கூட, இன்னும் சொல்லவேண்டுமென்றால் அ.தி.மு.க.,வின் அடிமட்டத் தொண்டர்களேகூட பேசிவந்த நிலையில், இப்போது அ.தி.மு.க.,வின் அமைச்சர்களே அதுப்பற்றி பொது மேடைகளிலேயே ஒப்புதல் வாக்குமூலம் அளிக்கத் தொடங்கியிருக்கிறார்கள்.

பால் கலப்பட விவகாரத்தில் திடீர் ஞானோதயம் பெற்று பரபரப்பு குற்றச்சாட்டுகளை வைத்து, நீதிமன்றத்தால் வாய்ப்பூட்டு போடப்பட்டிருக்கும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பெரியகுளத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் தங்களுடைய கட்சியும் ஆட்சியும் யாரை நம்பி இருக்கிறது என்ற உண்மையை உரைத்திருக்கிறார். யாராலும் நமது இயக்கத்தை அழிக்க முடியாது. பிரதமர் நரேந்திரமோடி நமக்கு ஆதரவாக உள்ளார். எல்லாவற்றையும் மேலே உள்ளவர் பார்த்துக்கொள்வார். எனவே எங்களுக்குத்தான் இரட்டை இலைச்சின்னம் கிடைக்கும் என்று வெளிப்படையாகப் பேசியிருப்பது ஏடுகளில் பதிவாகியுள்ளது.

பிரதமர் மோடியின் தயவில் தான் இந்த ஆட்சியும் கட்சியும் நடைபெறுகிறது என்பதுடன், தேர்தல் ஆணையம் தீர்மானிக்க வேண்டிய இரட்டை இலை சின்னம் குறித்த முடிவை, மோடியின் தயவால் பெறுவோம் என்கிற அதிகாரமீறலையும் ஒப்புதல் வாக்குமூலமாக தந்திருக்கிறார் அமைச்சர். தேர்தல் ஆணையத்தின் ஒருபக்க சார்பு நிலை குறித்து தி.மு.க. பல முறை எடுத்துக் கூறியிருக்கிறது. தற்போது குஜராத் மாநிலத் தேர்தல் தேதி அறிவிப்பினை காலதாமதம் செய்து, தேர்தல் நடத்தை விதிமுறைகள் அந்த மாநிலத்தில் அமலுக்கு வராதபடி செய்து, பிரதமர் மோடி அங்கே பல நிகழ்ச்சிகளில் பங்கேற்கவும், திட்டங்களை அறிவிக்கவும் வாய்ப்பு அளித்திருக்கிறது இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையம் என்பதை பல அரசியல் கட்சிகளின் தலைவர்களும் சுட்டிக்காட்டியிருக்கிறார்கள்.

தன்னாட்சிமிக்க தேர்தல் ஆணையத்தின் பணியில் பிரதமர் தலையிடுகிறார் எனச் சொல்வதுபோல அமைந்திருக்கிறது மாநில அமைச்சரின் பொதுக்கூட்டப் பேச்சு. அதுமட்டுமல்லாமல், தமிழகத்தின் நலன் சார்ந்த திட்டங்களுக்காகத்தான் மத்திய அரசுடன் இணக்கமாக இருக்கிறோம் என மேடைக்கு மேடை பேசிவரும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் கருத்துக்கும் மறுப்பு தெரிவிப்பதுபோல அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசியிருப்பதன் மூலம், தங்கள் சொந்தக் கட்சியின் உள் விவகாரங்களைத் தீர்த்துக்கொண்டு, இரட்டை இலை சின்னத்தைப் பெறுவதற்காகத்தான் அ.தி.மு.க அரசு, மத்திய பா.ஜ.க. அரசிடம் அடிமையாக இருக்கிறது என்பது உறுதியாகிறது.

பதவி ஆசைக்காக பா.ஜ.க அரசிடம் மாநிலத்தை அடகுவைத்திருக்கும் அ.தி.மு.க. ஆட்சியாளர்களைப் பற்றி அந்தக் கட்சியினரே வெளிப்படையாக சொல்லும் நிலையில், மாநில அரசின் நலனுக்காகவும் மக்களுக்கானத் திட்டங்களுக்காகவும் மத்திய அரசுடன் இணக்கமாக இருப்பதாக மேடைக்கு மேடை பச்சைப்பொய் சொல்கிறார் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி. இணக்கம் என்ற பெயரில் அ.தி.மு.க ஆட்சியாளர்கள் செய்கின்ற அடிமைச் சேவகத்தின் காரணமாக மக்களுக்கு எந்த நன்மையும் விளையவில்லை.

இவர்களின் சுயநலத்திற்கு தமிழகம் அடிமையாக்கப்பட்டிருக்கிறது. சுய மரியாதையை இழந்து நிற்கும் குதிரை பேர ஆட்சியை அகற்றும் நாளை தமிழக மக்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். அவர்களின் ஒரே நம்பிக்கை, நம்முடைய தி.மு.க. தான். இருளடைந்த தமிழகத்தில் சூரிய ஒளி எப்போது தன் வெளிச்சத்தைப் பாய்ச்சும் என்ற எதிர்பார்ப்புடன் இருக்கிறார்கள்.

மக்களின் மனநிலையை ஆட்சியாளர்களும் அறிவார்கள். அதனால்தான், ஆட்சி நீடிக்கின்ற அவகாசத்திற்குள் அள்ளிச் சுருட்டிவிடவேண்டும் எனத் தீர்மானித்து வாரிக் குவித்துக்கொண்டிருக்கிறார்கள். அதை மறைப்பதற்கு, தி.மு.க மீது சேற்றை வாரி இறைக்கிறார்கள். தலைமைப் பொறுப்புக்கு என்னால் வரமுடியவில்லை என்று ஆரம்பித்து, குடும்ப அரசியலின் வாரிசாக இருக்கிறேன் என்பது வரை பலவித அவதூறுகளை அள்ளி வீசுகிறார்கள் ஆளுங்கட்சியின் அமைச்சர்கள்.

தி.மு.க என்பது அ.தி. மு.க.வைப் போன்ற அடிமைக் கூடாரமல்ல. கட்சியின் அடிப்படை உறுப்பினராகப் பதிவு செய்து, கிளைக் கழகப் பொறுப்புகளில் தொடங்கி மாநிலப் பொறுப்பு வரை உயர்வதற்கான உழைப்பும் முனைப்பும் மட்டுமே தி.மு.க தொண்டனின் மூலதனம். அதன் மூலம் கிடைக்கின்ற பதவிகளை, பொறுப்பு என்றும், வாய்ப்பு என்றும் உணர்ந்து செயல்படுவதே பேரறிஞர் அண்ணா காலத்தில் தொடங்கி, தலைவர் கருணாநிதி காலத்திலும் தொடர்கின்றது. 50 ஆண்டுகளுக்கும் மேலான அரசியல் வாழ்வில், தி.மு.க.,வின் அடிப்படைப் பொறுப்புகளிலிருந்து ஒவ்வொரு படியாக ஏறி, செயல் தலைவர் என்கிற நிலைக்கு வந்திருப்பவன் தான் உங்களில் ஒருவனான நான்.

ஓர் இரவில் முதல்வர் நாற்காலியை அடைவதோ, இன்னொரு இரவில் அதனைப் பறிகொடுத்துவிட்டு தர்மயுத்தம் நடத்தவேண்டியதோ தி.மு.க.,வில் கிடையாது. இங்கே எல்லோரும் ஒரே குடும்பம். எங்கள் குடும்பத்தின் தலைவர் கருணாநிதி. குடும்பத்தில் உறவு தான் முக்கியமே தவிர, பதவியல்ல. 30 ஆண்டுகளுக்கும் மேலாக குனிந்த முதுகுடன் புதுப்புது எஜமானர்களின் காலைத்தொட்டு அடிமை வாழ்வு வாழும் அ.தி.மு.க.,வினரில் ஒருவருக்கு கூட, ஆலமரம் போல உயர்ந்தும் நிமிர்ந்தும் நிற்கும் சுயமரியாதை இயக்கமாம் தி.மு.க.,வை நோக்கி விமர்சனம் செய்ய அருகதை கிடையாது.

தி.மு.க. என்பது சூரியன். அதை நோக்கி குரைப்போரின் குரல் ஒருபோதும் எடுபடுவதில்லை. இருளை நோக்கிப் பாயும் கதிரொளியாக லட்சியப் பாதையில் எழுச்சி பயணத்தை தொடர்வோம்.

இவ்வாறு அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.

Next Story