டெங்கு காய்ச்சல் உயிரிழப்பை மறைக்க நிறுவனங்களுக்கு அபராதம் விதிப்பு முத்தரசன் குற்றச்சாட்டு


டெங்கு காய்ச்சல் உயிரிழப்பை மறைக்க நிறுவனங்களுக்கு அபராதம் விதிப்பு முத்தரசன் குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 23 Oct 2017 1:39 AM IST (Updated: 23 Oct 2017 1:38 AM IST)
t-max-icont-min-icon

டெங்கு காய்ச்சல் உயிரிழப்பை மறைக்க வீடு-நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருவதாக இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் குற்றம் சாட்டியுள்ளார்.

சேலம்,

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் சேலத்தில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் டெங்கு காய்ச்சலை தடுப்பதற்கு மத்திய, மாநில அரசுகள் தவறிவிட்டன. டெங்குவுக்கு தினமும் 10 முதல் 15 பேர் உயிரிழக்கிறார்கள். சேலம் மாவட்டத்தில் இதுவரை 16 பேர் டெங்குவால் உயிரிழந்து இருக்கிறார்கள். இதனை மூடி மறைக்க அதிகாரிகள் ஆய்வு நடத்தி வீடு, நிறுவனங்கள், ரெயில் நிலையத்திற்கு அபராதம் விதிக்கிறார்கள்.

டெங்கு காய்ச்சலுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டு இருந்தால் உயிரிழப்பை பெருமளவு தடுத்திருக்கலாம். டெங்கு காய்ச்சலுக்கு எத்தனை பேர் இறந்து இருக்கிறார்கள் என்ற உண்மையை ஜெயலலிதா மரணத்தை போல அரசு மூடி மறைக்கிறது. இதனால் டெங்கு காய்ச்சல் குறித்து வெளிப்படையான வெள்ளை அறிக்கையை அரசு வெளியிட வேண்டும்.

டெங்கு காய்ச்சல் குறித்து ஆய்வு செய்ய வந்த மத்திய குழு தமிழக அரசை பாராட்டவும், விமர்சனமும் செய்தது. இது வெறும் கண்துடைப்பு தான். பொறையூரில் போக்குவரத்து பணிமனை கட்டிடம் விழுந்து 8 பேர் இறந்தனர். அரசிடம் பல முறை தொழிலாளர்கள் கோரிக்கை மனு கொடுத்தும் அந்த கட்டிடத்தை சீரமைக்காமல் மெத்தனமாக இருந்துள்ளனர். ஆனால், இந்த உண்மையை மறைப்பதற்காக மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் தி.மு.க. ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட கட்டிடம் என்ற ஒரு பொய்யான தகவலை தெரிவித்துள்ளார்.

மெர்சல் படத்தில் ஜி.எஸ்.டி. வரி குறித்தும், மருத்துவமனைகளின் செயல்பாடுகள் குறித்தும் உள்ள காட்சியை நீக்க வேண்டும் என பா.ஜ.க. தலைவர்கள் கூறி வருகிறார்கள். மேலும் விஜய் எந்த மதத்தை சேர்ந்தவர் என்று ஆராய்வது கண்டிக்கத்தக்கது. இது பா.ஜ.க. குறித்து விமர்சனம் செய்பவர்களை மிக கடுமையாக மிரட்டி அடி பணிய வைப்பதாகும்.

ஒரு ஆட்சியை விமர்சிப்பது என்பது இந்திய அரசியல் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமையாகும். இதை பறிக்கும் முயற்சியில் பா.ஜ.க. இறங்கியுள்ளது. பா.ஜ.க. தமிழக தலைவர்களின் இதுபோன்ற செயல்கள் மிகவும் கண்டனத்துக்கு உரியதாகும். தமிழகத்தில் நடந்து வரும் ஆட்சி மக்களின் நம்பிக்கையை இழந்து வருகிறது.

நெடுஞ்சாலை துறையில் ஆயிரம் கோடி ரூபாய் தார் ஊழல் நடந்துள்ளது. இதில் நேர்மையான விசாரணை நடைபெற வேண்டும். நிதி ஆயோக்கில் உள்ளவர்கள் வேளாண்மையை மாநில பிரிவில் இருந்து மத்திய பிரிவுக்கு மாற்ற வேண்டும் என கூறியிருப்பது கண்டிக்கத்தக்கது.

பேரறிவாளனுக்கு கூடுதலாக ஒரு மாதம் பரோல் வழங்க வேண்டும்.

இவ்வாறு முத்தரசன் கூறினார்.

Next Story