நெல்லையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தீக்குளிப்பு: கந்து வட்டி நபர்களை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்


நெல்லையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தீக்குளிப்பு:  கந்து வட்டி நபர்களை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்
x
தினத்தந்தி 24 Oct 2017 3:15 AM IST (Updated: 23 Oct 2017 7:16 PM IST)
t-max-icont-min-icon

நெல்லையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தீக்குளித்ததற்கு காரணமான கந்து வட்டி நபர்களை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

சென்னை,

தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அண்ணா அறிவாலயத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:–

கேள்வி:– போலி வாக்காளர்களை நீக்க வேண்டும் என்று நீங்கள் கூறியுள்ள நிலையில் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் நியாயமாக நடக்குமா?.

பதில்:– இதுபற்றி நான் ஏற்கனவே சொல்லியிருக்கிறேன், நான் எழுதிய கடிதத்திலும் தெளிவாக குறிப்பிட்டு இருக்கிறேன்.  ஆர்.கே.நகர் வாக்காளர் பட்டியலில் ஏறக்குறைய 45,000 போலி வாக்காளர்கள் இணைக்கப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக, கடந்த தேர்தலில் தி.மு.க. சார்பில் புகார் அளித்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, வழக்கறிஞர் அணி அமைப்பாளர் கிரிராஜன் ஆகியோரும் புகார் மனு அளித்திருக்கிறார்கள். அவர்களிடம், இரட்டை பதிவு ஆகியுள்ள வாக்காளர்களின் பெயர்கள் பட்டியலில் இருந்து நிச்சயமாக நீக்கப்படும் என்று தேர்தல் ஆணையர் ராஜேஷ் லக்கானி உறுதியளித்துள்ளார். அப்படி நீக்கவில்லை என்றால் அதற்காக நீதிமன்றத்தை நாடவும் நாங்கள் தயாராக இருக்கிறோம்.

கேள்வி:– நெல்லையில், கந்துவட்டி கொடுமை காரணமாக ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தீக்குளித்து இருக்கிறார்களே?.

பதில்:– இந்த குதிரை பேர ஆட்சியில் நிர்வாகம் மட்டுமல்ல சட்டம்–ஒழுங்கும் எந்தளவுக்கு மோசமான நிலையில் இருக்கிறது என்பதற்கு இதுவும் ஒரு எடுத்துக்காட்டாக உள்ளது.

நெல்லையில் கந்துவட்டி கொடுமையால் ஒரு குடும்பமே தீ வைத்துக்கொண்டிருப்பது மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்துகிறது. இந்த கொடுமைக்கு காரணமான கந்துவட்டி நபர்களை கண்டுபிடித்து அவர்கள் மீது இந்த அரசு உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

கேள்வி:– அமைச்சர் ஜெயகுமாருக்கு எதிராக மீனவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி கொண்டிருக்கிறார்களே?

பதில்:– தான் ஒரு மீன்வளத்துறை அமைச்சர் என்பதை மறந்து ஜெயகுமார் ஒரு சூப்பர் முதல்–அமைச்சராக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். எனவே, மீன்வளத்துறையில் உள்ள பிரச்சினைகள் பற்றியெல்லாம் சிந்திப்பதற்கு அவருக்கு நேரமில்லை. அதனால் தான் மீனவர்கள் போராடும் நிலை வந்துள்ளது.

அப்படி ஜனநாயக முறையில் போராடிய மீனவ சமுதாயத்தினை சேர்ந்த பெரியோர்களையும், தாய்மார்களையும் காவல்துறையை விட்டு கொடூரமாக தடியடி நடத்தி, அதனால் பலபேர் கடுமையாக பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாக செய்திகள் வந்திருக்கின்றன. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. அரசு உடனே இதில் தலையிட்டு, மீனவர்களுக்கு உரிய பரிகாரம் செய்ய வேண்டும்.

கேள்வி:– பேரறிவாளனுக்கு பரோலை நீட்டிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளதே?

பதில்:– பேரறிவாளனின் தந்தை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவரது உடல்நலனை பொறுத்து அவரது பரோலை நீட்டிக்க வேண்டும் என்று ஏற்கனவே எதிர்க்கட்சித் தலைவர் என்றமுறையில் தி.மு.க. சார்பில் நான் இந்த அரசுக்கு கோரிக்கை வைத்திருக்கிறேன். தற்போது அவரது பரோல் முடியவுள்ள நிலையில், அதனை நீட்டிக்க வேண்டும் என்று தி.மு.க. சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.  இவ்வாறு அவர் பதில் அளித்தார்.


Next Story