கேரளாவை போன்று கந்துவட்டியை ஒழிக்க தமிழகத்தில் நடவடிக்கை எடுக்கபடுமா?


கேரளாவை போன்று கந்துவட்டியை ஒழிக்க தமிழகத்தில்  நடவடிக்கை எடுக்கபடுமா?
x
தினத்தந்தி 24 Oct 2017 6:09 AM GMT (Updated: 24 Oct 2017 6:09 AM GMT)

கேரளாவை போன்று கந்துவட்டியை ஒழிக்க தமிழகத்திலும் ஆப்ரேஷன் குபேரா மேற்கொள்ளப்படுமா? என்ற கேள்வி வலுத்து உள்ளது.

சென்னை, 

நெல்லையில் கந்துவட்டி கொடுமையால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தீக்குளித்து உள்ளனர். தீக்குளித்தவர்களில் மூவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், கோபத்தையையும் எழ செய்து உள்ளது. கந்து வட்டி கும்பலுக்கு எதிராக கடும் நடவடிக்கையை அரசு மேற்கொள்ள வேண்டும் என அரசியல் கட்சிகள் சார்பில் வலியுறுத்தப்பட்டு வருகிறது. 

கேரளாவில் கடந்த 2014-ம் ஆண்டு கந்துவட்டி கும்பலிடம் கடன் வாங்கிய குடும்பம், கடனை திருப்பி செலுத்த முடியாத நிலையில் தவித்தது. கடன் வழங்கிய தனியாரிடம் இருந்து மிரட்டல்கள் தொடர்ந்த நிலையில் திருவனந்தபுரத்தை சேர்ந்த 5 பேர் அடங்கிய குடும்பம் தற்கொலை செய்துக் கொண்டது. இவ்விவகாரம் கேரளாவில் பெரும் கோபத்தை ஏற்படுத்தியது. அப்போது அங்கு ஆட்சியில் இருந்த காங்கிரஸ் அரசு கந்து வட்டி மற்றும் உரிமம் பெறாத தனியார் பைனான்சியர்களின் கொட்டத்தை அடக்கும் வகையில் ‘ஆப்ரேஷன் குபேராவை’ தொடங்கியது.

கேரளா முழுவதும் அதிரடி சோதனைகள், கைது நடவடிக்கைகள் மற்றும் பண பறிமுதல் தொடர்ந்தது. பொதுமக்கள் கந்துவட்டி தொடர்பான விபரங்களை அளிக்கவும் தொலைபேசி உதவி எண்கள் உள்ளிட்ட வசதிகள் செய்துக் கொடுக்கப்பட்டது.  

கேரள மாநில போலீஸ் சிறப்பு நடவடிக்கையில் இறங்கிய போது கோடிக்கணக்கில் பணம் சிக்கியது. ஆப்ரேஷன் குபேரா கேரளாவில் தொடங்கி ஒருவருடம் முடிந்த நிலையில் 2015 மே மாதம் கேரள மாநில உள்துறை மந்திரி ரமேஷ் சென்னிதாலா பேசுகையில், 13,863 சோதனைகள் நடைபெற்று உள்ளது. 12,056 பேர் காவலில் எடுக்கப்பட்டு உள்ளனர், பல்வேறு பகுதிகளில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ. 5 கோடி வரையில் பறிமுதல் செய்யப்பட்டது என்றார். இந்நடவடிக்கை தொடங்கும் எனவும் அவர் அறிவித்தார். போலீஸ் சோதனைக்கு எதிராக தனியார் நிதி நிறுவனங்கள் அம்மாநில ஐகோர்ட்டு சென்றன. 

அப்போது அரசு தரப்பில் உரிமம் பெற்ற தனியார் நிறுவனங்களில் சோதனை முன்னெடுக்கப்படவில்லை என்றது.

கேரளாவில் ஆப்ரேஷன் குபேராவை முன்னெடுப்பதற்கு தடை விதிக்க வேண்டும் என்ற வழக்கை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. தொடர்ந்து கந்து வட்டி வசூலில் தொடர்புடையவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்யவும் மாநில அரசு உத்தரவிட்டது.

தமிழகம்

கடந்த 2001-2006-ம் ஆண்டில் முதல்வராக ஜெயலலிதா இருந்த காலத்தில்தான் கந்து வட்டி தடை சட்டம் கொண்டுவரப்பட்டது. 

ஆண்டுக்கு 18 சதவீதத்துக்கு மேல் கந்துவட்டி வசூலிப்பவர்களுக்கு, அதிகபட்ச தண்டனையாக 3 ஆண்டுகள் கடுங்காவல் சிறை மற்றும் ரூ 30,000 அபராதம் விதிக்க இந்த சட்டத்தில் இடமுள்ளது. கந்து வட்டிக் கொடுமையால் பாதிக்கப்பட்ட ஏழை மக்களுக்கு கூட்டுறவு வங்கிகளில் சிறு தொழில் கடன் வழங்கப்பட்டது. இதன்பிறகே கந்து வட்டி கொடுமை குறைந்தது, கந்து வட்டி கும்பலின் அட்டகாசத்துக்கு முடிவு கட்டப்பட்டது. இருப்பினும் இது நீடிக்கவில்லை, மீண்டும் கந்துவட்டி கொடுமைகள் ஆங்காங்கே தலை தூக்கியது.

கடந்த 2014 செப்டம்பரில் கந்துவட்டி கொடுமை தொடர்பான வழக்கை விசாரித்த மதுரை ஐகோர்ட்டு, தமிழகத்தில் 2003-ல் கந்து வட்டி தடைச் சட்டம் கொண்டு வரப்பட்டது. இச்சட்டம் வந்த பிறகுதான் கந்து வட்டியின் தீமைகள் குறித்து பொதுமக்களுக்கு தெரியவந்தது. கடன் தொகையை வசூலிக்க குண்டர்களை அப்பாவி மக்கள் மீது கடன் கொடுத்தவர்கள் குண்டர்களை ஏவி விடும் நடவடிக்கையால்   ஏராளமானோர் தற்கொலை செய்து கொண்டு உள்ளனர். கேரளாவில் கந்து வட்டியை தடுக்க ‘ஆபரேஷன் குபேரா’ என்ற பெயரில் கடும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதனை தமிழகத்திலும் கந்து வட்டி வசூலிப்போர் மீது தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கு சரியான நேரம் இதுவே. தமிழகத்தில் கந்து வட்டி வசூல் செய்பவர்கள் மீதான புகாரை விசாரிக்க சிறப்பு பிரிவு ஏற்படுத்த வேண்டும் என உத்தரவிட்டது.

அதேபோன்று மற்றொரு வழக்கில் சென்னை ஐகோர்ட்டு, மேலும், கந்து வட்டி தடுப்பு சட்டத்தின்கீழ் பொதுமக்கள் கொடுக்கும் புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறதா? இதுபோன்ற புகார் மீது நடவடிக்கை எடுக்காமல் கந்து வட்டி கும்பலுடன், போலீசார் கூட்டு சேர்ந்து செயல்படுகின்றனரா? என்பதை கண்காணிக்காக மாவட்டம் மற்றும் தாலுகா அளவில் கண்காணிப்பு கமிட்டிகளை உருவாக்க அரசு பரிசீலிக்க வேண்டும்.

மேலும், கந்து வட்டி தொழிலில் முக்கிய நபர்களாக செயல்படுபவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுப்பது குறித்தும் தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும். கந்து வட்டி கொடுமை வழக்குகளின் விசாரணை மாநகர போலீஸ் கமிஷனர்கள், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள் நேரடி கண்காணிப்பில் நடத்தப்பட வேண்டும் என உத்தரவிட்டது.

Next Story