ஜெயலலிதாவுக்கு நினைவிடம் அமைக்கும் பணி அமைச்சர்களுடன் முதல்வர் ஆலோசனை


ஜெயலலிதாவுக்கு நினைவிடம் அமைக்கும் பணி அமைச்சர்களுடன் முதல்வர் ஆலோசனை
x
தினத்தந்தி 24 Oct 2017 3:24 PM IST (Updated: 24 Oct 2017 3:24 PM IST)
t-max-icont-min-icon

ஜெயலலிதா நினைவிடம் கட்டுமானப்பணி தொடர்பான ஆலோசனை கூட்டம் தலைமைச் செயலகத்தில் இன்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடந்தது.

சென்னை, 

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா சமாதி மெரினா கடற்கரையில் எம்.ஜி.ஆர்.-அண்ணா சமாதிகளுக்கு நடுவில் அமைந்துள்ளது. தமிழ்நாடு முழுவதும் இருந்து நாள்தோறும் ஏராளமான தொண்டர்கள், பொதுமக்கள் ஜெயலலிதா சமாதிக்கு வந்து பார்வையிட்டு செல்கிறார்கள். விடுமுறை நாட்களில் கூட்டம் அதிகரிக்கிறது.

அங்கு ஜெயலலிதாவுக்கு நினைவிடம் அமைக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினர்களிடம் இருந்து கோரிக்கைகள் வந்ததைத் தொடர்ந்து ஜெயலலிதா சமாதி அமைந்துள்ள இடத்தில் ரூ.15 கோடி செலவில் அழகிய நினைவிடம் அமைக்கப்படும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி  பழனிசாமி அறிவித்தார்.

கட்டுமானப் பணிகளை மாநில அரசின் பொதுப்பணித்துறையே மேற்கொள்ள இருக்கிறது. இதற்கான வடிவமைப்புகளை தேர்வு செய்வதற்காக தனியார்களிடம் கோரியிருந்தது. பொதுப்பணித் துறையும் சில வடிவமைப்புகளை உருவாக்கி உள்ளது.

இதையடுத்து ஜெயலலிதா நினைவிடம் கட்டுமானப்பணி தொடர்பான ஆலோசனை கூட்டம் தலைமைச் செயலகத்தில் இன்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடந்தது.இதில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செங்கோட்டையன், ஜெயக்குமார், எஸ்.பி. வேலுமணி, தங்கமணி, கே.பி.அன்பழகன், கடம்பூர் ராஜூ மற்றும் நிதித்துறை, பொதுப்பணித்துறை, செய்தித்துறை செயலாளர்கள், அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் ஜெயலலிதா நினைவிடத்தை எந்த வடிவில் அழகுற கட்டுவது, கட்டுமானப் பணிகளுக்கு ரூ.15 கோடி நிதி ஒதுக்கீடு போதுமா? கூடுதல் நிதி ஒதுக்கீடு தேவையா என்பது பற்றி ஆலோசிக்கப்பட்டது. டிசம்பர் மாதம் முதல் வாரத்தில் ஜெயலலிதா மறைவு முதலாம் ஆண்டு நினைவு தினம் வருவதால் அதற்குள் கட்டுமானப் பணிகளை தொடங்கி 1 வருடத்தில் கட்டி முடிக்கவும் முடிவு செய்யப்பட்டது.

ஜெயலலிதா நினைவிடம் தொடர்பான வடிவமைப்புகள் ஏற்கனவே அரசுக்கு வந்துள்ளன. அதில் சிலவற்றை அரசு தேர்வு செய்துள்ளது. அந்த வடிவமைப்புகள் இன்றைய ஆலோசனை கூட்டத்தில் வைக்கப்பட்டது. அதில் சில திருத்தங்கள் செய்வது பற்றியும் இறுதி வடிவம் கொடுத்த பின்பு வடிவமைப்பு தேர்வு செய்வது என்றும் முடிவு செய்யப்பட்டது.

ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை சித்தரிக்கும் வகையில் நினைவிடம் அமைக்கப்பட உள்ளது. இதில் ஜெயலலிதாவின் சினிமா-அரசியல் சாதனைகளை விளக்கும் வகையில் அரிய புகைப்படங்களின் தொகுப்பு இடம் பெறுகிறது. அனைவரையும் கவரும் வகையில் அழகிய பசுமை புல்வெளிகளுடன் அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

Next Story