30 நானோ செயற்கைகோள்கள் டிசம்பர் மாதம் விண்ணில் ஏவப்படுகிறது; இஸ்ரோ விஞ்ஞானி டாக்டர் கே.சிவன் தகவல்
தொலைதூர உணர்திறன் செயற்கைகோள் ‘கார்ட்டோ சாட்’ மற்றும் 30 நானோ செயற்கைகோள்கள் டிசம்பர் மாதம் விண்ணில் ஏவப்படுகிறது என்று இஸ்ரோ விஞ்ஞானி டாக்டர் கே.சிவன் கூறினார்.
சென்னை,
தற்போது மீண்டும் டிசம்பர் மாதம் செயற்கைகோளை விண்ணில் செலுத்தும் பணியில் இந்திய விண்வெளி ஆய்வு மையம் (இஸ்ரோ) தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
இதுகுறித்து இஸ்ரோவின் கீழ் செயல்படும் திருவனந்தபுரம் விக்ரம் சாராபாய் விண்வெளி ஆய்வு மைய இயக்குனர் விஞ்ஞானி டாக்டர் கே.சிவன் கூறும்போது, ‘டிசம்பர் மாதம் முதல் தொடர்ச்சியாக செயற்கைகோள்களை விண்ணில் செலுத்துவதற்கான பணியில் இஸ்ரோ ஈடுபட்டு வருகிறது. குறிப்பாக டிசம்பர் 2–ம் வாரத்தில் வெளிநாடுகளை சேர்ந்த 30 நானோ செயற்கைகோள்களுடன், தொலைதூர உணர்திறன் செயற்கைகோளான இந்தியாவின் ‘கார்ட்டோ சாட்’ செயற்கைகோளும் விண்ணில் செலுத்தப்பட உள்ளது’ என்றார்.இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறியதாவது:–
தோல்வியடைந்த ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். 1–ஏ செயற்கைகோளுக்கு மாற்றாக விண்ணில் வேறொரு செயற்கைகோள் செலுத்தப்பட இருக்கிறது. இதற்கான பணிகள் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் நடந்துவருகிறது. அடுத்த ஆண்டு மார்ச் மாதம் ஏவப்பட உள்ள சந்திராயன்–2 உள்பட 3 ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட்டுகள் விண்ணில் செலுத்துவதற்கான பணிகளும் நடந்துவருகிறது.
‘கார்ட்டோசாட்’ செயற்கைகோளை பொறுத்தவரையில், வரைபடங்கள் தயாரிக்கவும், நகர்ப்புற, கிராமப்புற, கடலோர நில பயன்பாடு, சாலை அமைக்கும் பணி கண்காணிப்பு, நீர் விநியோகம், புவியியல் தகவல் அமைப்பு, ராணுவ பணிகள் ஆகிய பயன்பாடுகளுக்கு உதவும்.அதோடு கட்டுமான பணியை மதிப்பீடு செய்யவும், தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்ட வேலைகளை கண்காணிக்கவும், நகர திட்டமிடல் மற்றும் மணல் குவாரி கண்காணிப்பு ஆகிய பணிகளுக்கும் உதவும். இவ்வாறு விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story