ஹெலிகாப்டரில் பயணம் செய்தபோது மழை பாதிப்பு பகுதிகளை மோடி பார்வையிட்டார்
ஹெலிகாப்டரில் பயணம் செய்தபோது மழையால் பாதிக்கப்பட்ட இடங்களை பிரதமர் மோடி பார்வையிட்டதாக பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.
ஆலந்தூர்,
மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-
தினத்தந்தி பவள விழாவில் கலந்துகொள்வதற்காக பிரதமர் மோடி சென்னை விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டரில் செல்லும்போது கவர்னர், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர், தமிழகத்தில் கனமழையால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து தெரிவித்தனர்.
2015-ம் ஆண்டு வெள்ளம் ஏற்பட்ட போது, தான் நேரடியாக வந்து பார்வையிட்டதை மனதில் கொண்டு, இப்போது ஹெலிகாப்டரில் சென்றபோது மோடி பார்வையிட்டார். கவர்னர், முதல்-அமைச்சர், துணை முதல்-அமைச்சர், தலைமை செயலாளர், மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன், நான் ஆகியோருடன் அமர்ந்து தமிழகத்தில் ஏற்பட்டு உள்ள வெள்ள பிரச்சினைகள் குறித்து பிரதமர் பேசினார்.
தமிழக அரசின் சார்பில் கேட்கக் கூடிய உதவிகளை செய்து தர மத்திய அரசு தயாராக இருப்பதாக அவர் தெரிவித்தார்.
மிகப்பெரிய பலன்
பிரதமர் மோடியின் வருகை தமிழகத்திற்கு மிகப்பெரிய பலனை தரும் என நம்புகிறேன். கடந்த முறை பிரதமர் வெள்ள பாதிப்புகளை பார்க்க வந்தபோது உடனடியாக ரூ.1,000 கோடியை வழங்குவதாக அறிவித்தார்.
தமிழகத்திற்கு மத்திய அரசு உதவிகளை தரவில்லை என்று எதிர்மறை பார்வையுடன் பார்ப்பது சரியல்ல. மழை வெள்ளம் வந்தாலும் கூட சென்னை மிதக்காமல் இருக்கவும், மக்கள் பாதிக்கப்படாமல் இருக்கவும் நிரந்தர தீர்வு காண பிரதமர் பரிசீலிக்கிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story