நாளை நடக்கும் தி.மு.க. ஆர்ப்பாட்டம் 8 மாவட்டங்களில் ஒத்திவைப்பு


நாளை நடக்கும் தி.மு.க. ஆர்ப்பாட்டம் 8 மாவட்டங்களில் ஒத்திவைப்பு
x
தினத்தந்தி 7 Nov 2017 4:30 AM IST (Updated: 7 Nov 2017 1:46 AM IST)
t-max-icont-min-icon

மழை நிவாரணப் பணிகளில் தொண்டர்கள் ஈடுபடுவதால் நாளை (புதன்கிழமை) நடக்கும் தி.மு.க. ஆர்ப்பாட்டம் 8 மாவட்டங்களில் ஒத்திவைக்கப்படுவதாக கட்சி தலைமை அறிவித்துள்ளது.

சென்னை,

தி.மு.க. தலைமைக் கழகம் சார்பில் நேற்று வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

கண்டன ஆர்ப்பாட்டம்

மத்திய பா.ஜ.க. அரசை கண்டித்து வருகின்ற நவம்பர் 8-ந் தேதி (நாளை) அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும், கட்சியின் மாவட்ட செயலாளர்கள் தலைமையில் கருப்புச் சட்டை அணிந்து நிர்வாகிகளும், தொண்டர்களும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

தற்போது பெய்து வரும் கனமழையின் காரணமான வெள்ள பாதிப்புகளின் நிவாரணப் பணிகளில் கட்சித் தொண்டர்கள் ஈடுபட்டு வருகின்ற காரணத்தால், இந்த ஆர்ப்பாட்டத்தை கடும் மழையால் பாதிக்கப்பட்டுள்ள சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை, வேலூர், கடலூர், நாகப்பட்டினம், திருவாரூர் ஆகிய 8 மாவட்டங்களில் மட்டும் ஒத்திவைக்கப்படுகிறது.

கருப்பு சட்டை அணிந்து...

தமிழகத்தில் உள்ள மற்ற மாவட்ட தலைநகரங்களில் பண மதிப்பிழப்பு தினம் “கருப்பு தினமாக” அனுசரித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். ஒத்திவைக்கப்பட்ட 8 மாவட்டங்கள் மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் மற்ற மாவட்டங்களில் உள்ள கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கருப்புச் சட்டை அணிந்து தங்கள் எதிர்ப்பினை காட்டிட வேண்டும் என கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் பாதிக்கப்பட்டுள்ள வணிக பெருமக்கள், விவசாயிகள், நெசவாளர்கள், திரைத்துறையினர் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களும் இந்த ஆர்ப்பாட்டத்தில் “கருப்பு பேட்ஜ்” அணிந்து பெருமளவில் கலந்துகொள்ளச் செய்து, இப்போராட்டத்தை வெற்றிபெறச் செய்திட வேண்டும் என மாவட்ட செயலாளர்களை தலைமைக் கழகம் கேட்டுக்கொள்கிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

Next Story