வங்க கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை தமிழகத்தில் இன்றும் மழை பெய்யும்


வங்க கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை தமிழகத்தில் இன்றும் மழை பெய்யும்
x
தினத்தந்தி 7 Nov 2017 5:15 AM IST (Updated: 7 Nov 2017 1:58 AM IST)
t-max-icont-min-icon

வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது. இதனால் தமிழகத்தின் அநேக இடங்களில் மழை பெய்யும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது.

சென்னை,

தென்மேற்கு வங்க கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது. இதனால் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களிலும், டெல்டா மாவட்டங்களிலும் இன்று (செவ்வாய்க்கிழமை) அநேக இடங்களில் மழை பெய்யும் என்று வானிலை மையம் அறிவித்து இருக்கிறது.

வடகிழக்கு பருவமழை

தமிழகத்தின் பல மாவட்டங்களில் கடந்த ஒரு வாரமாக வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கியது. இதனால் தாழ்வான இடங்களில் மழை நீர் தேங்கி நிற்கிறது.

இந்த நிலையில் ஏற்கனவே தமிழகத்தின் கடலோர பகுதியில் உருவான குறைந்த அழுத்த தாழ்வுநிலை தற்போது வலு இழந்து விட்டது. அதே நேரம் தமிழக கடலோர பகுதியில் புதிதாக காற்றழுத்த தாழ்வு நிலை ஒன்று உருவாகி இருக்கிறது.

இது குறித்து சென்னை வானிலை மைய இயக்குனர் எஸ்.பாலச்சந்திரன் கூறியதாவது:-

புதிய தாழ்வு நிலை

குமரி முதல் தென்மேற்கு வங்க கடல் வரை இருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை தனது வலுவை இழந்துவிட்டது. தற்போது இலங்கை அருகே தென்மேற்கு வங்க கடலில் புதியதொரு குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி இருக்கிறது.

இதன் காரணமாக நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் ஆணைக்காரன் சத்திரம் என்ற இடத்தில் 19 செ.மீ. மழை பெய்துள்ளது. அதற்கு அடுத்தபடியாக சிதம்பரத்தில் 15 செ.மீ. மழை அளவு பதிவானது.

இன்றும் மழை பெய்யும்

இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக இன்றும் (செவ்வாய்க்கிழமை) தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை பெய்யும். குறிப்பாக தென் மாவட்டங்களிலும், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களிலும், காரைக்கால் பகுதியிலும் அநேக இடங்களில் மழை பெய்யும்.

ஒரு சில இடங்களில் கனமழை பெய்யும். தமிழகத்தின் உட்புற மாவட்டங்களில் சில இடங்களிலும், வட மாவட்டங்களிலும் மிதமான அளவுக்கும் மழை பெய்யும். சென்னையை பொறுத்தவரை மாலை அல்லது இரவு நேரங்களில் மிதமான அளவுக்கு மழை இருக்கும்.

தமிழகத்தில் 8 மற்றும் 9-ந் தேதிகளில் மழையின் அளவு படிப்படியாக குறையும்.

இவ்வாறு பாலச்சந்திரன் தெரிவித்தார். 

Next Story