கோபாலபுரம் இல்லத்தில் பிரதமர் மோடி, கருணாநிதியை சந்தித்து நலம் விசாரித்தார்
சென்னை கோபாலபுரம் இல்லத்தில் கருணாநிதியை, பிரதமர் நரேந்திர மோடி நேற்று சந்தித்து நலம் விசாரித்தார்.
சென்னை,
சென்னையில் நேற்று நடந்த ‘தினத்தந்தி’ பவளவிழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று சிறப்புரை ஆற்றினார். அதனைதொடர்ந்து அவர் காரில் கோபாலபுரத்தில் உள்ள தி.மு.க. தலைவர் கருணாநிதி வீட்டுக்கு சென்றார். அங்கு பிரதமர் நரேந்திர மோடியை சட்டசபை எதிர்க்கட்சி துணைத்தலைவர் துரைமுருகன், கனிமொழி எம்.பி. வரவேற்று வீட்டுக்குள் அழைத்து சென்றனர்.
பிரதமர் மோடியை சால்வை அணிவித்து வரவேற்ற தமிழக சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், கருணாநிதியிடம் அவரை அழைத்து சென்றார். கருணாநிதியை சந்தித்த மோடி, அவரை தொட்டு உடல்நலம் விசாரித்தார். அப்போது மோடி கூறியவற்றை கருணாநிதிக்கு மு.க.ஸ்டாலின் எடுத்துக்கூறி, அவர் கூறிய பதிலை மோடியிடம் தெரிவித்தார். இந்த சந்திப்பின்போது ‘முரசொலி’ பவளவிழா மலரை கருணாநிதி, மோடியிடம் வழங்கினார். பின்னர் அங்கேயே கருணாநிதி மனைவி தயாளு அம்மாளையும் மோடி சந்தித்து நலம் விசாரித்தார்.
இந்த சந்திப்பின்போது தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித், மத்திய மந்திரிகள் நிர்மலா சீதாராமன், பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக பா.ஜ.க. தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், கருணாநிதியின் துணைவியார் ராஜாத்தி அம்மாள், மகள் செல்வி ஆகியோர் உடன் இருந்தனர். தொடர்ந்து சில நிமிடங்கள் கருணாநிதியின் உடல்நலம் விசாரித்த பின்னர், மோடி அங்கிருந்து காரில் புறப்பட்டு சென்றார்.
கருணாநிதியை, பிரதமர் மோடி சந்தித்து உடல்நலம் விசாரித்துக்கொண்டு இருந்த நேரத்தில் கோபாலபுரம் இல்லத்துக்கு வெளியே திரளான தி.மு.க. தொண்டர்கள் கூடி, தொடர்ந்து கோஷமிட்டபடி இருந்தனர்.
தி.மு.க. தலைவர் கருணாநிதியை பிரதமர் மோடி சந்திக்கும் தகவல் சிறிது நேரத்துக்கு முன்பாகத்தான் வெளியிடப்பட்டது. இந்த தகவலை பா.ஜ.க. தமிழக பொறுப்பாளர் முரளிதரராவ் தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த சந்திப்பு குறித்து கனிமொழி எம்.பி. கூறியதாவது:-
தி.மு.க. தலைவர் கருணாநிதியை சந்தித்து பிரதமர் மோடி உடல்நலம் விசாரித்தார். அப்போது அவருக்கு கைகொடுத்து விரைவில் உடல்நலம் பெறவேண்டும் என்று மோடி கூறினார். மேலும் ‘டெல்லியில் உள்ள எனது வீட்டுக்கு ஓய்வெடுக்க வாருங்கள்’, என்று மோடி அழைப்பு விடுத்தார்.
தன்னை சந்திக்க வந்த பிரதமருக்கு புத்தகங்களை கருணாநிதி பரிசாக வழங்கினார். அதனை மகிழ்ச்சியோடு வாங்கிக்கொண்ட மோடி, கருணாநிதிக்கு நன்றி தெரிவித்தார். இது உண்மையிலேயே ஒரு நல்ல சந்திப்பு.
அரசியல் பேசவில்லை
தான் மரியாதை வைத்திருக் கும் ஒரு மூத்த அரசியல் தலைவரை சந்தித்து, உடல்நலம் விசாரிப்பதற்காக மோடி வந்திருக்கிறார். கருணாநிதியை சந்தித்தும் உள்ளார். இந்த சந்திப்பில் எந்தவித அரசியலும் யாருமே பேசவில்லை. இது ஒரு மரியாதை நிமித்தமான நல்ல சந்திப்பு. எனவே இந்த சந்திப்பில் தேவையில்லாத அரசியலை யாரும் பரப்பிட வேண்டாம்.
தி.மு.க. தலைவர் கருணாநிதியின் உடல்நிலை முன்பைவிட வேகமாக முன்னேற்றம் அடைந்து வருகிறது. விரைவிலேயே தொண்டர்களை உற்சாகமாக சந்திக்கும் நிலைக்கு அவர் வருவார்.
இவ்வாறு அவர் கூறினார்.
பிரதமர் நரேந்திர மோடி சந்தித்துவிட்டு சென்றபிறகு, கருணாநிதி கோபாலபுரம் இல்லத்தின் வாசலுக்கு வந்தார். அவரை மு.க.ஸ்டாலின், துரைமுருகன், செல்வி உள்ளிட்டோர் அழைத்து வந்தனர். கருணாநிதியை பார்த்த தொண்டர்கள் உற்சாகம் அடைந்து வாழ்த்து கோஷங்களை எழுப்பினர். இதையடுத்து கருணாநிதி தொண்டர்களை பார்த்து கை அசைத்து சிரித்தார். அப்போது மு.க.ஸ்டாலின், துரைமுருகன் உள்ளிட்டோர் கட்டை விரலை உயர்த்தி காண்பித்தனர். இதை பார்த்த தொண்டர்கள் தொடர்ந்து வாழ்த்து கோஷங்களை எழுப்பினர். சில நிமிடங்களில் கருணாநிதி மீண்டும் வீட்டுக்குள் சென்றுவிட்டார்.
உடல்நலக்குறைவு காரணமாக தொடர்ந்து ஆஸ்பத்திரியிலும், வீட்டிலும் கருணாநிதி ஓய்விலேயே இருந்து வந்தார். இந்த நிலையில் கடந்த மாதம் ‘முரசொலி’ அலுவலகத்துக்கு கருணாநிதி வந்தார். சில நாட்களுக்கு முன்பு தனது கொள்ளுப்பேரன் திருமணத்திலும் பங்கேற்றார். தற்போது தனது வீட்டில் தொண்டர்களை சந்தித்து உற்சாகமாக கை அசைத்து சிரித்து இருக்கிறார். இந்த சந்திப்பால் தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
Related Tags :
Next Story