சி.பா.ஆதித்தனார் இலக்கிய விருதுகளை பிரதமர் மோடி வழங்கினார்


சி.பா.ஆதித்தனார் இலக்கிய விருதுகளை பிரதமர் மோடி வழங்கினார்
x
தினத்தந்தி 7 Nov 2017 3:45 AM IST (Updated: 7 Nov 2017 2:43 AM IST)
t-max-icont-min-icon

தினத்தந்தி பவள விழாவில் நேற்று சி.பா.ஆதித்தனார் இலக்கிய பரிசு மற்றும் விருதுகளை பிரதமர் நரேந்திரமோடி வழங்கினார்.

சென்னை,

‘தினத்தந்தி’யின் பவள விழா நேற்று உற்சாகமாக கொண்டாடப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் சி.பா.ஆதித்தனார் பிறந்தநாள் விழா அன்று வழங்கப்படும் சி.பா.ஆதித்தனார் இலக்கிய பரிசு மற்றும் விருதுகள், இந்த ஆண்டு ‘தினத்தந்தி’யின் பவள விழாவையொட்டி இரட்டிப்பு மகிழ்வுடன் நேற்று வழங்கப்பட்டது.

தினத்தந்தி பவள விழா நிகழ்ச்சிக்காக டெல்லியில் இருந்து வந்த பிரதமர் நரேந்திரமோடி காலை 10 மணிக்கு விழா மேடைக்கு வந்தார். அவருடன் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மத்திய மந்திரிகள் நிர்மலா சீதாராமன், பொன்.ராதாகிருஷ்ணன், துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரும் விழா மேடைக்கு வந்தனர். அவர்களை தினத்தந்தி இயக்குநர் சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தன், மாலை மலர் இயக்குநர் பா.சிவந்தி ஆதித்தன் ஆகியோர் வரவேற்று, பொன்னாடை அணிவித்தனர்.



இலக்கிய பரிசு-விருதுகள்

விழாவில் தலைமை உரை நிகழ்த்துவதற்கு முன்னதாக பிரதமர் நரேந்திரமோடி ‘தினத்தந்தி’ பவள விழா மலரை வெளியிட்டார். அதனை தொடர்ந்து சி.பா.ஆதித்தனார் இலக்கிய பரிசு மற்றும் விருதுகளை பிரதமர் நரேந்திரமோடி வழங் கினார்.

சிறந்த இலக்கிய நூலுக்கான இலக்கிய பரிசு ‘இலக்கியத்தில் மேலாண்மை’ என்ற புத்தகத்தை எழுதிய ஐ.ஏ.எஸ். அதிகாரி வெ.இறையன்புவுக்கு வழங்கப்பட்டது. அவருக்கு ரூ.2 லட்சம் இலக்கிய பரிசையும், கேடயத்தையும் பிரதமர் நரேந்திரமோடி வழங்கி கவரவித்தார்.

மூத்த தமிழறிஞர் விருது ஈரோடு தமிழன்பனுக்கு வழங்கப்பட்டது. அவருக்கு ரூ.3 லட்சத்திற்கான காசோலையையும், கேடயத்தையும் பிரதமர் நரேந்திரமோடி வழங்கினார்.



சாதனையாளர் விருது

சாதனையாளர் விருது தொழில் அதிபர் வி.ஜி.சந்தோஷத்துக்கு வழங்கப்பட்டது. ‘தினத்தந்தி’ பத்திரிகையை சைக்கிளில் சென்று விற்பனை செய்து தொழில் அதிபராக உயர்ந்தமைக்காக வி.ஜி.சந்தோஷத்துக்கு சாதனையாளர் விருது வழங்கப்பட்டுள்ளது. இந்த விருதையும் பிரதமர் நரேந்திரமோடி வழங்கினார். அவரிடம் இருந்து வி.ஜி.சந்தோஷம் விருதை பெற்றுக்கொண்டார்.

சி.பா.ஆதித்தனார் இலக்கிய பரிசு மற்றும் விருதுகளை பெற்றவர்கள் பிரதமர் நரேந்திரமோடியுடன் நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டனர். அவர்களிடம் பிரதமர் நரேந்திரமோடி புன்னகையுடன் சில வார்த்தைகள் பேசினார். அந்த மகிழ்வுடன் விருது பெற்றவர்கள் மேடையில் இருந்து விடை பெற்றனர். 

Next Story