தமிழறிஞர் மா.நன்னன் உடல் நலக்குறைவால் காலமானார்


தமிழறிஞர் மா.நன்னன் உடல் நலக்குறைவால் காலமானார்
x
தினத்தந்தி 7 Nov 2017 11:40 AM IST (Updated: 7 Nov 2017 11:40 AM IST)
t-max-icont-min-icon

தமிழறிஞர் நன்னன் உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். மூத்த தமிழறிஞர் நன்னனுக்கு வயது 94 ஆகும். திராவிட இயக்கத்தின் மீது மிகுந்த பற்று கொண்டவர்.

சென்னை

தமிழ்ப் பேராசிரியர் மா.நன்னன்,சென்னை சைதாப்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் இன்று காலை காலமானார். அவருக்கு வயது 94.

கடலூர் மாவட்டம் சாத்துக்குடலில் பிறந்த நன்னன், தொடக்கப்பள்ளி ஆசிரியராகத் தமிழ்ப் பணியைத் தொடங்கிய அவர், தொடர்ந்து சென்னை பல்கலைக்கழகத்தில் எம்.ஏ. பட்டம் பெற்றார். தொல்காப்பியப் பேராசிரியர் பற்றி ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றார். உயர்நிலைப் பள்ளி, பயிற்சிக் கல்லூரி, கலைக்கல்லூரி, மாநிலக் கல்லூரிகளில் பணியாற்றியுள்ளார். தமிழ் வளர்ச்சித் துறையின் இயக்குநராகவும் பணியாற்றி உள்ளார்.

‘உரைநடையா? குறைநடையா?’, ‘எல்லார்க்கும் தமிழ்’, ‘தவறின்றி தமிழ் எழுதுவோம்’, ‘வாழ்வியல் கட்டுரைகள்’, ‘தமிழ் எழுத்தறிவோம்’, ‘கல்விக்கழகு கசடற எழுதுதல்’  மற்றும் தமிழ்க் கட்டுரை, பாட நூல்கள் உள்ளிட்ட 70-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். தொலைக்காட்சியில் பல்வேறு தமிழ் தொடர்பான நிகழ்ச்சிகளை நடத்தியிருக்கிறார்.

பெரியார் விருது, தமிழ்ச் செம்மல் விருது, திரு.வி.க. விருது ஆகிய விருதுகளைப் பெற்றவர். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் புலவர் பட்டம் பெற்ற நன்னன், எழுத்து அறிவித்தலில் 'நன்னன் முறை' என்ற புதிய முறையை உருவாக்கியவர். வெள்ளையேன வெளியேறு, இந்தி எதிர்ப்பு உள்ளிட்ட போராட்டங்களில் பங்கேற்றுள்ளார். நன்னனின் இவரது இயற்பெயர் திருஞானசம்பந்தன் ஆகும்.

மா.நன்னன் மறைவுக்கு ஏராளமான தமிழறிஞர்கள், அரசியல்வாதிகள் தங்கள் இரங்கலை தெரிவித்துவருகின்றனர்.

பேராசிரியர் நன்னன் மறைவுக்கு கவிஞர் வைரமுத்து இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், "பேராசிரியர் மா.நன்னன் இழப்பு ஈடு செய்யப்பட வேண்டிய இழப்பு. அவரது இழப்பை 100 பேராசிரியர்கள் சேர்ந்து நிரப்ப வேண்டும். பல்கலைக்கழகமாக இருந்து நாட்டுக்கு தமிழ் அறிவித்தவர் பேராசிரியர் நன்னன். பக்தி இலக்கியங்களை படித்த பிறகும் பகுத்தறிவு பாசறையில் நின்றவர் மா.நன்னன்" என்று கூறியுள்ளார்.

Next Story