திருவண்ணாமலை: தீபத் திருவிழாவின்போது பக்தர்கள் மலையேற தடை
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் தீபத் திருவிழாவின்போது பக்தர்கள் மலையேற தடை விதிக்கப்பட்டுள்ளது என்று கலெக்டர் கந்தசாமி கூறினார்.
சென்னை,
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் அடுத்த மாதம் (டிசம்பர்) 2–ந் தேதி கார்த்திகை தீபத்தையொட்டி மலை மீது தீபம் ஏற்றப்படுகிறது. இந்த விழா வருகிற 23–ந் தேதி அதிகாலை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. விழாவை முன்னிட்டு கோவிலில் பல்வேறு முன்னெச்சரிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
முன்னதாக கலெக்டர் கந்தசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
அருணாசலேஸ்வரர் கோவிலில் வருகிற 2–ந் தேதி கார்த்திகை தீபத் திருவிழா நடக்கிறது. மேலும் 14 இடங்களில் தற்காலிக பஸ் நிலையங்கள் அமைக்கப்பட உள்ளது.
கிரிவலம் செல்லும் பெண்கள், முதியோர்கள், குழந்தைகளுக்காக தற்காலிக பஸ் நிலையங்களில் இருந்து கிரிவலம் செல்லும் பாதைக்கு செல்வதற்கு இலவச சிறப்பு பஸ்கள் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளன.
தீபத்திருவிழாவின் போது மலையேற தடை விதிக்கப்பட்டு உள்ளது. மலையில் மருத்துவ வசதிகள், பாதுகாப்பு அம்சங்கள் இல்லை. எனவே, திருவிழாவின் போது அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க மலையேற பக்தர்களுக்கு தடை செய்யப்பட்டு உள்ளது. மேலும் மலைப்பாதைகளும் மூடப்பட உள்ளன.
திருவிழாவில் 9 ஆயிரத்து 400 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். மேலும் வனத்துறை சார்பில் 250–க்கும் மேற்பட்டோர் ஈடுபட உள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story