எம்.ஜி.ஆர். நூற்றாண்டு நிறைவு விழாவில் சிறப்பு மலர், குறும்படம், அரிய புகைப்படங்கள் அடங்கிய தொகுப்பு வெளியிடப்படும்


எம்.ஜி.ஆர். நூற்றாண்டு நிறைவு விழாவில் சிறப்பு மலர், குறும்படம், அரிய புகைப்படங்கள் அடங்கிய தொகுப்பு வெளியிடப்படும்
x
தினத்தந்தி 8 Nov 2017 3:15 AM IST (Updated: 8 Nov 2017 1:01 AM IST)
t-max-icont-min-icon

சென்னையில் நடக்கவுள்ள எம்.ஜி.ஆர். நூற்றாண்டு நிறைவு விழாவில் சிறப்பு மலர், குறும்படம், அரிய புகைப்படங்கள் அடங்கிய தொகுப்பு வெளியிடப்படும் என்று அமைச்சர்கள் ஆர்.பி. உதயகுமார், கடம்பூர் ராஜூ தெரிவித்தனர்.

சென்னை,

சென்னை கலைவாணர் அரங்க கூட்ட அரங்கில் 7-ந் தேதியன்று (நேற்று) எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா தொடர்பான, விழா மலர் குழு கூட்டம், வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில், செய்தி விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ முன்னிலையில் நடைபெற்றது.

ஆலோசனை வழங்க வேண்டும்

அப்போது அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பேசியதாவது:-

கடந்த ஜூன் 30-ந் தேதி மதுரை மாவட்டத்தில் தொடங்கி இதுவரை 21 மாவட் டங்களில் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நூற்றாண்டு விழாவின் நிறைவு விழா, சென்னையில் சிறப்பாக நடத்தப்பட உள்ளது. அதையொட்டி எம்.ஜி.ஆர். திரைப்படத்தின் வாயிலாக தமிழ்ச் சமுதாயத்திற்கு தெரிவித்த அரிய பல கருத்துகளை சேகரித்தும், முதல்-அமைச்சராக அவர் ஆற்றிய பல சாதனைகள் குறித்தும் விழா சிறப்பு மலர், குறும்படம் மற்றும் அரிய புகைப்படங்கள் அடங்கிய தொகுப்பு தயாரித்து வெளியிடப்படவுள்ளது.

எனவே, திரைப்படத்துறையைச் சார்ந்த இயக்குனர்கள் பாரதிராஜா, பாக்யராஜ், உதயகுமார், நாஞ்சில் ப.க.அன்பழகன் மற்றும் விழா மலர்க்குழு உறுப்பினர்கள், அவரது புகழை அனைவரும் அறியும் வகையில் வெளியிட, கருத்துகளையும், ஆலோசனைகளையும் வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

பிரத்யேக கட்டுரைகள்

இக்கூட்டத்தில் அமைச்சர் கடம்பூர் ராஜூ பேசியதாவது:-

சிறப்பு மலரில் அனைத்துத் தரப்பினரின் வாழ்த்துரைகளும், முக்கிய பிரமுகர்கள் வழங்கிய பிரத்யேக கட்டுரைகள், வெளியிட்ட சிறப்பு செய்திகள் மற்றும் பேட்டிகள் போன்ற தகவல்கள் அடங்கியிருக்க வேண்டும், இச்சிறப்பு மலர் முக்கியத்துவம் பெறுவதற்காக விழா மலர் குழுவில் அரசு அதிகாரிகள், திரைப்படத்தை சார்ந்தவர்கள் முக்கிய பிரமுகர்கள் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

எனவே, எம்.ஜி.ஆரைப் பற்றிய தனிச்சிறப்புகள், தமிழ்நாட்டில் அவர் நிகழ்த்திய சாதனைகள், அரிய புகைப் படங்கள், அவரைச் சார்ந்த முக்கிய நிகழ்வுகள் குறித்த தகவல்களை இக்குழுவிற்கு உறுப்பினர்கள் வழங்கும்படி கேட்டுக்கொள்கிறேன். மேலும், எம்.ஜி.ஆரின் பொன்மொழிகள், சட்டமன்றத்தில் ஆற்றிய உரைகள் போன்ற செய்திகளோடும் இச்சிறப்பு மலர் அமைய உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

அதிகாரிகள்

முன்னதாக, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர் இரா.வெங்கடேசன் வரவேற்புரையாற்றினார். செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குனர் பொ.சங்கர், நூற்றாண்டு விழா தொடர்பாக வெளியிட இருக்கும் சிறப்பு மலரில் அமையவுள்ள வாழ்த்துரைகள், கட்டுரைகள் மற்றும் பேட்டிகள் குறித்து விரிவாக எடுத்துரைத்தார்.

இந்தக்கூட்டத்தில் எழுதுபொருள் அச்சுத்துறை இயக்குனர் ஜெ.ஜெயகாந்தன், தமிழ் வளர்ச்சித்துறை இயக்குனர்கள் அருள், விஜயராகவன், திரைப்பட இயக்குனர்கள் பாரதிராஜா, பாக்யராஜ், உதயகுமார், நாஞ்சில் ப.க.அன்பழகன், மருது அழகுராஜ், செய்தி மக்கள் தொடர்புத்துறை கூடுதல் இயக்குனர் உல.ரவீந்திரன், இணை இயக்குனர்கள், துணை இயக்குனர்கள், உதவி இயக்குனர்கள் மற்றும் மக்கள் தொடர்பு அலுவலர்கள் கலந்து கொண்டனர். செய்தி மக்கள் தொடர்புத்துறை கூடுதல் இயக்குனர் எஸ்.பி.எழிலழகன் நன்றி கூறினார்.

Next Story