தமிழகத்தில் கனமழையை எதிர்கொள்ள முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் அமைச்சர் தகவல்


தமிழகத்தில் கனமழையை எதிர்கொள்ள முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் அமைச்சர் தகவல்
x
தினத்தந்தி 8 Nov 2017 2:45 AM IST (Updated: 8 Nov 2017 1:09 AM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் கனமழையை எதிர்கொள்ள முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளதாக அமைச்சர் உதயகுமார் தெரிவித்தார்.

திருவொற்றியூர்,

சென்னையை அடுத்த திருவொற்றியூர் மேற்கு பகுதியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களை தமிழக வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நேற்று பார்வையிட்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழகத்தில் கடந்த 27-ந் தேதி முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. 12 மாவட்டங்களில் வழக்கத்தைவிட அதிக மழை பெய்துள்ளது. சென்னையில் இரவும், பகலுமாக நிவாரண பணிகள் முனைப்போடு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த பகுதியில் தேங்கிய மழை நீர் 15 ராட்சத மின் மோட்டார் மற்றும் பம்பிங் ஸ்டேசன் வழியாக வெளியெற்றப்பட்டு விட்டது. முன்எச்சரிக்கை நடவடிக்கையாக முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரண மற்றும் மருத்துவ உதவிகள் அளிக்கப்பட்டு வருகின்றன.

சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள நிவாரண முகாம்களில் 1,867 குழந்தைகள் உள்பட 9,290 பேர் தங்கவைக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு 3 வேளைகளும் உணவு வழங்கப்படுகிறது. 244 மருத்துவ முகாம்களில் 18,484 பேர் சிகிச்சை பெற்றுள்ளனர்.

சென்னையை பொறுத்தவரை சவாலாக போக்குவரத்து தடங்கல் இல்லாமல் செய்துள்ளோம். மழை விட்டு விட்டு பெய்யாமல் ஒரே நாளில் அதிக அளவில் பெய்வதால் அடிப்படை கட்டமைப்புகள் தாங்குவதில்லை.

இன்னும் ஒருவாரம் மழை இருப்பதாக தெரிய வருகிறது. உள்ளாட்சி, மாவட்ட பேரிடர் மேலாண்மை குழு எதிர்வரும் கன மழையையும் எதிர்கொள்ள அனைத்து முன்எச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்துள்ளது.

இவ்வளவு மழை பெய்தும் சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகள் எதுவும் நிரம்பவில்லை. இதற்கு நீர்வழித் தடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளே காரணம். இதே போன்று தமிழகம் முழுவதும் காணப்படுகிறது. இந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது.

இதன் மூலம் ஏரி, குளம் மற்றும் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழை நீர் சேமித்து வைக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அமைச்சருடன் முன்னாள் எம்.எல்.ஏ. குப்பன், தனரமேஷ், அஜாக்ஸ் பரமசிவம், சிவில் முருகேசன் மற்றும் அதிகாரிகள் உடன் சென்றனர்.

Next Story