வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் நவம்பர் இறுதி வரை நீட்டிப்பு தேர்தல் கமிஷன் தகவல்


வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் நவம்பர் இறுதி வரை நீட்டிப்பு தேர்தல் கமிஷன் தகவல்
x
தினத்தந்தி 9 Nov 2017 4:15 AM IST (Updated: 9 Nov 2017 12:32 AM IST)
t-max-icont-min-icon

வாக்காளர் பட்டியல் சுருக்க முறை திருத்தப் பணிகள் இந்த மாதம் இறுதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

ஒவ்வொரு ஆண்டும் வாக்காளர் பட்டியலை இந்திய தேர்தல் ஆணையம் திருத்தம் செய்து வருகிறது. இதற்கான சுருக்க திருத்தப் பணி ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் நடைபெறும். முதலில் அதற்காக வரைவு வாக்காளர் பட்டியலை தேர்தல் கமிஷன் வெளியிடும். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான வாக்காளர் பட்டியல் சுருக்க திருத்தப் பணிக்கு முன்பாக அக்டோபர் 3-ந் தேதியன்று வரைவு வாக்காளர் பட்டியலை தேர்தல் கமிஷன் வெளியிட்டது.

தமிழகத்தில் 5 கோடியே 93 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டதும் ஒவ்வொரு வாக்காளரும் அதில் தங்களின் பெயர் உள்ளதா?, அதிலுள்ள விபரங்கள் சரியாக உள்ளதா? என்பதை கவனித்து, அதில் திருத்தங்கள் இருந்தால் அதற்காக இந்த காலகட்டத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.

அதற்கு வசதியாக இந்த காலகட்டத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும். அப்போது பெயர் சேர்க்கை, இடம் மாறும் பட்சத்தில் பெயர் நீக்கம், திருத்தங்கள் ஆகியவை தொடர்பாக விண்ணப்பிக்கலாம்.

அந்த வகையில் கடந்த அக்டோபர் மாதம் இறுதிவரை பெறப்பட்ட விண்ணப்பங்கள் (சிறப்பு முகாம்களில் பெறப்பட்டவை உள்பட) பற்றிய விவரங்கள் மாவட்ட அளவில் வெளியிடப்பட்டுள்ளன. அதில், பெயர் சேர்ப்புக்காக தமிழகம் முழுவதும் மொத்தம் 4 லட்சத்து 60 ஆயிரத்து 47 விண்ணப்பங்களும், பெயர் நீக்கத்துக்காக ஒரு லட்சத்து 58 ஆயிரத்து 364 விண்ணப்பங்களும் கொடுக்கப்பட்டுள்ளன.

இவற்றோடு, முகவரி மாற்றம், பிழை திருத்தம் ஆகிய அனைத்து வகை விண்ணப்பங்களையும் சேர்த்து கடந்த அக்டோபர் மாதம் மொத்தம் 7 லட்சத்து 69 ஆயிரத்து 532 விண்ணப்பங்களை இந்திய தேர்தல் கமிஷன் பெற்றுள்ளது.

இதில், பெயர் சேர்ப்புக்காக அதிகபட்சமாக காஞ்சீபுரம் மாவட்டத்தில் 34 ஆயிரத்து 505 விண்ணப்பங்களும், குறைந்தபட்சமாக நீலகிரி மாவட்டத்தில் 3 ஆயிரத்து 836 விண்ணப்பங்களும் அளிக்கப்பட்டுள்ளன.

அனைத்து வகை விண்ணப்பங்களையும் கணக்கிட்டால், அதிகபட்சமாக சேலம் மாவட்டத்தில் 49 ஆயிரத்து 323 விண்ணப்பங்களும், குறைந்தபட்சமாக அரியலூர் மாவட்டத்தில் 5 ஆயிரத்து 303 விண்ணப்பங்களும் கொடுக்கப்பட்டுள்ளன.

சென்னை மாவட்டத்தில் 36 ஆயிரத்து 671 மனுக்களும், திருவள்ளூர் மாவட்டத்தில் 35 ஆயிரத்து 154 மனுக்களும், காஞ்சீபுரம் மாவட்டத்தில் 42 ஆயிரத்து 198 மனுக்களும் அளிக்கப்பட்டுள்ளன.

வாக்காளர் பட்டியல் சுருக்க திருத்தப் பணிகள் பொதுவாக அக்டோபர் மாதத்துக்குள் நிறைவு பெற்றுவிடும். ஆனால் இந்த முறை இந்த பணிகள் மேலும் ஒரு மாதத்துக்கு அதாவது நவம்பர் இறுதிவரை நீட்டிக்கப்பட்டு இருப்பதாக இந்திய தேர்தல் கமிஷன் வட்டாரம் தெரிவித்தது. இந்த பணிகள் நிறைவு பெற்றதும், வரும் ஜனவரி முதல் வாரத்தில் புதிய வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்.

Next Story