மனைவியிடம் ரூ.5 லட்சம் பறிக்க திட்டம்: பெற்ற குழந்தையை கடத்தி நாடகம் ஆடிய தந்தை கைது


மனைவியிடம் ரூ.5 லட்சம் பறிக்க திட்டம்: பெற்ற குழந்தையை கடத்தி நாடகம் ஆடிய தந்தை கைது
x
தினத்தந்தி 9 Nov 2017 3:15 AM IST (Updated: 9 Nov 2017 12:35 AM IST)
t-max-icont-min-icon

சென்னையில் பணத்துக்காக பெற்ற குழந்தையை கடத்தி நாடகம் ஆடிய தந்தை கைது செய்யப்பட்டார்.

சென்னை,

சென்னை கெல்லீஸ் பாரக்கா சாலையை சேர்ந்தவர் ரவிக்குமார்(வயது 32). போரூரில் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார். இவருடைய மனைவி தமிழ் இலக்கியா(28). இவர்களது 3 வயது ஆண் குழந்தை கனீஷ்.

சென்னை அயனாவரம் மார்க்கெட் அருகே உள்ள தனியார் மழலையர் பள்ளியில் கனீசை சேர்த்து இருந்தனர். கனீசை தினமும் மோட்டார் சைக்கிள் மூலம் ரவிக்குமார் பள்ளியில் விடுவது வழக்கம்.

நேற்றுமுன்தினம் காலை ரவிக்குமார் தனது குழந்தை கனீசை மோட்டார் சைக்கிளில் பள்ளிக்கு அழைத்து சென்றார்.

காலை 10 மணியளவில் தனது தந்தை பரமசிவத்தை ரவிகுமார் செல்போன் மூலம் தொடர்பு கொண்டு பேசினார்.

அப்போது ரவிக்குமார் பதறியபடி, தன்னை 4 பேர் கொண்ட கும்பல் தாக்கிவிட்டு, குழந்தை கனீசை கடத்திச் சென்றுவிட்டதாக கூறினார். தனது பேரன் கடத்தப்பட்ட தகவல் கேட்டு பரமசிவம் அதிர்ச்சி அடைந்தார்.

ரூ.5 லட்சம்

பகல் 11 மணியளவில் ரவிக்குமார் மீண்டும் பரமசிவத்தை தொடர்புகொண்டு, ரூ.5 லட்சத்தை கொடுத்தால் குழந்தை கனீசை கடத்தல்காரர்கள் பத்திரமாக ஒப்படைத்து விடுவதாக கூறுகிறார்கள் என்று தெரிவித்தார்.

இதைகேட்டு சற்று ஆறுதல் அடைந்த பரமசிவம், ‘நானும், உனது மனைவி தமிழ் இலக்கியாவும் பணத்துக்கு ஏற்பாடு செய்கிறோம் என்று கூறினார்.

குழந்தை மாயமான சோகத்தில் இருந்த தமிழ் இலக்கியா தன்னுடைய குழந்தையை பத்திரமாக மீட்க வேண்டும் என்பதற்காக அடகுகடைக்கு சென்று தனது நகைகளை அடகு வைத்தார். பரமசிவமும் அக்கம் பக்கத்தினரிடம் கடன் பெற்றார். இருவரும் சேர்ந்து ரூ.5 லட்சத்தை திரட்டினர்.

இந்தநிலையில் ரவிக்குமார் வீட்டுக்கு வந்து ரூ.5 லட்சத்தை வாங்கிக்கொண்டு காரில் புறப்பட்டார். பரமசிவம், தமிழ் இலக்கியாவும் காரில் ஏறிக்கொண்டனர்.

அயனாவரம் சிக்னல் அருகே கார் வந்த போது ரவிக்குமார், ‘கடத்தல்காரர்கள் என்னை மட்டும் தனியாக வர சொன்னார்கள். ஆட்களை அழைத்து வந்தால் குழந்தையை கொன்று விடுவதாக மிரட்டினார்கள். எனவே காரில் இருந்து நீங்கள் இருவரும் இறங்கிக் கொள்ளுங்கள். நானே குழந்தையை பத்திரமாக மீட்டு வருகிறேன் என்று தனது தந்தை பரமசிவம் மற்றும் மனைவி தமிழ் இலக்கியாவிடம் தெரிவித்தார்.

இதையடுத்து அவர்கள் இருவரும் காரில் இருந்து இறங்கி விட்டனர். அப்போது ரவிக்குமாரிடம் இருந்து கடத்தல்காரர்கள் செல்போன் எண்ணை பரமசிவம் வாங்கிக் கொண்டார்.

போலீசில் புகார்

ரவிக்குமார் காரில் தனியாக புறப்பட்டு சென்றுவிட்டார். பரமசிவமும், தமிழ் இலக்கியாவும் ஆட்டோ மூலம் அயனாவரம் போலீஸ் நிலையத்துக்கு சென்றனர். குழந்தை கனீஷ் கடத்தப்பட்ட சம்பவம் குறித்து போலீசாரிடம் புகார் அளித்தனர்.

ரவிக்குமார் கொடுத்த கடத்தல்காரர்கள் செல்போன் எண்ணையும் போலீசாரிடம் பரமசிவம் தெரிவித்தார். இதையடுத்து அந்த செல்போன் எண்ணை போலீசார் தொடர்பு கொண்டு பேசினர்.

மறுமுனையில் பேசிய நபர், ‘போலீசார் கூறிய தகவலை கேட்டு அதிர்ச்சி அடைந்தார். நான் எந்த குழந்தையையும் கடத்தவில்லை. தனியார் வங்கி ஒன்றில் ‘கிரெடிட் கார்டு’ பிரிவில் பணியாற்றி வருகிறேன் என்று தெரிவித்தார். ரவிக்குமார் ‘கிரெடிட் கார்டு’ மூலம் பெற்ற தொகையை திரும்ப செலுத்தவில்லை. எனவே அவருக்கு இந்த செல்போன் எண் மூலம் அவ்வப்போது எச்சரிக்கை விடுக்கப்பட்டு வந்தது.’ என்றும் அவர் கூறினார்.

ஜி.பி.எஸ்.கருவி

இதையடுத்து போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. ரவிக்குமார் ஓட்டிச் சென்ற காரில் ஜி.பி.எஸ். கருவி பொருத்தப்பட்டிருந்ததால், அவருடைய கார் எங்கு செல்கிறது என்று போலீசார் கண்காணித்தனர். ரவிக்குமாரின் கார் போரூர், குன்றத்தூர் சென்று பெரவள்ளூரை நோக்கிச் செல்வது தெரிய வந்தது.

அதன்பின்னர் போலீசார் ரவிக்குமாரின் காரை பின் தொடர்ந்தனர். ரவிக்குமாரை செல்போனில் தொடர்புகொண்டு, நாங்கள் பாதுகாப்புக்காக பின் தொடர்ந்து வருகிறோம். எனவே நீங்கள் பயப்பட தேவை இல்லை என்றனர்.

சிறிது நேரத்தில் ரவிக்குமார் போலீசாரை தொடர்புகொண்டு, கடத்தல்காரர்களிடம் இருந்து குழந்தை கனீசை பத்திரமாக மீட்டு விட்டேன். போலீஸ்நிலையத்துக்கு குழந்தையுடன் வருகிறேன் என்று கூறினார்.

அதன்படி குழந்தையுடன் போலீஸ்நிலையத்துக்கு ரவிக்குமார் வந்தார்.

தந்தை கைது

எனினும் ரவிக்குமாரின் செய்கையில் சந்தேகம் அடைந்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர். விசாரனையில் ரவிக்குமார் முன்னுக்குப் பின் முரணாக தகவல் தெரிவித்தார். இதையடுத்து போலீசார் தங்கள் பாணியில் விசாரித்தபோது, பணத்துக்காக ரவிக்குமார் தன்னுடைய குழந்தையை தானே கடத்தி நாடகம் ஆடியது அம்பலம் ஆனது.

ரவிக்குமார் பெரவள்ளூரில் உள்ள தன்னுடைய நண்பர் வேணுகோபால் வீட்டில் குழந்தை கனீசை ஒப்படைத்துள்ளார். அவரிடம் தன்னுடைய மனைவி தமிழ் இலக்கியா ஊருக்கு சென்றிருப்பதாகவும், எனவே ஒரு நாள் குழந்தையை பார்த்துக் கொள்ளும்படியும் கூறியுள்ளார்.

போலீசார் தன்னை பின் தொடர்வதை அறிந்தவுடன் வேணுகோபால் வீட்டில் இருந்து குழந்தை கனீசை அழைத்து வந்தது போலீசார் விசாரணையில் தெரிய வந்தது.

பின்னர் ரவிக்குமாரை போலீசார் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இந்த சம்பவத்தில் வேணுகோபாலுக்கு தொடர்பு இருக்கலாமா? என்ற சந்தேகத்தில் அவரிடமும் போலீசார் விசாரணை நடத்தினர்.

பரபரப்பு வாக்குமூலம்

பெற்ற குழந்தையையே கடத்தி நாடகம் ஆடியது ஏன்? என்பது குறித்து ரவிக்குமார் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-

ஆடம்பரமாக வாழ வேண்டும் என்ற ஆசையில் பல வங்கிகளிடம் ‘கிரெடிட் கார்டு’ பெற்றேன். அதன் மூலம் நட்சத்திர ஓட்டலில் உணவு அருந்துவது என உல்லாசமாக வாழ்க்கையை கழித்து வந்தேன். கிரெடிட் கார்டில் பணம் காலியாகி விட்டதால், வங்கி தரப்பில் இருந்து பணத்தை செலுத்தும்படி தினமும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

லட்சக்கணக்கில் பணம் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது. நான் ஏற்கனவே பலரிடம் கடன் பெற்றிருந்தேன். இதனால் யாரும் எனக்கு பணம் கொடுத்து உதவ முன்வரவில்லை. இதனால் வேறு வழியின்றி மனைவியிடமே பணம் பறிக்க முடிவு செய்தேன். அதற்காக கடத்தல் நாடகத்தை அரங்கேற்றினேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

பெற்ற குழந்தையையே தந்தை ஒருவர் கடத்திய சம்பவம் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்பட்டுள்ளது.


Next Story