சென்னை நகர குடிநீர் தேவைக்காக வீராணம் ஏரியில் இருந்து தண்ணீர் திறப்பு


சென்னை நகர குடிநீர் தேவைக்காக வீராணம் ஏரியில் இருந்து தண்ணீர் திறப்பு
x
தினத்தந்தி 9 Nov 2017 3:30 AM IST (Updated: 9 Nov 2017 12:38 AM IST)
t-max-icont-min-icon

தொடர் மழை காரணமாக ஏரியின் நீர்மட்டம் உயர்ந்ததால் வீராணம் ஏரியில் இருந்து சென்னை நகர குடிநீர் தேவைக்காக தண்ணீர் திறந்துவிடப்பட்டது.

கடலூர்,

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே லால்பேட்டையில் உள்ளது வீராணம் ஏரி. கடலூர் மாவட்டத்தின் மிகப்பெரிய நீர்ஆதாரமாக விளங்கும் இந்த ஏரிக்கு சாதாரண காலங்களில் வடவாறு வழியாகவும், மழை காலங்களில் செங்கால் ஓடை, கருவாட்டு ஓடை, வெண்ணங்குழி ஓடை வழியாக தண்ணீர் வரும்.

இந்த ஏரியின் மொத்த கொள்ளளவு 47.50 அடியாகும். ஏரியின் மூலம் சுமார் 47 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது.

இது தவிர சென்னைக்கு குடிநீருக்காக வீராணம் ஏரியில் இருந்து தினமும் வினாடிக்கு 76 கன அடி தண்ணீர் அனுப்பி வைக்கப்படுகிறது. ஏரியின் நீர்மட்டத்தை பொறுத்து சென்னைக்கு அனுப்பும் தண்ணீரின் அளவு மாறுபடும்.

இந்த நிலையில் கடந்த ஆண்டு பருவமழை பொய்த்துபோனதால் ஏரி வறண்டது. இதனால் கடந்த பிப்ரவரி மாதம் 18-ந்தேதி சென்னைக்கு குடிநீர் அணுப்புவது நிறுத்தப்பட்டது.

தற்போது தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. அந்த வகையில் கடலூர் மாவட்டம் மற்றும் வீராணம் ஏரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் தொடர் மழை பெய்து வருகிறது.

இதன் காரணமாக வறண்டு கிடந்த வீராணம் ஏரிக்கு நீர்வர தொடங்கியது. கடந்த 4-ந்தேதி வீராணம் ஏரியின் நீர் மட்டம் 45 அடியாக உயர்ந்தது.

ஏரியின் பாதுகாப்பு கருதி சேத்தியாத்தோப்பில் உள்ள வி.என்.எஸ். மதகு வழியாக வினாடிக்கு 1,000 கனஅடி வீதம் உபரிநீர் வெள்ளாற்றில் திறந்து விடப்பட்டது. இந்த தண்ணீர் வெள்ளாற்று அணைக்கட்டில் சேமித்து வைக்கப்படுகிறது.

நேற்றைய நிலவரப்படி வீராணம் ஏரியின் நீர் மட்டம் 45.05 அடியாகும். ஏரிக்கு வடவாறு வழியாக வினாடிக்கு 160 கன அடி நீர் வந்து கொண்டு இருக்கிறது.

வறண்டு கிடந்த ஏரியின் நீர்மட்டம் உயர்ந்ததால் கடந்த 8 மாதங்களாக நிறுத்தப்பட்டிருந்த சென்னைக்கு குடிநீர் அனுப்பும் பணியை மீண்டும் தொடங்க பொதுப்பணித்துறை அதிகாரிகள் முயற்சிகளை மேற்கொண்டனர். அதன்படி, நேற்று முதல் வீராணம் ஏரியில் இருந்து சென்னைக்கு வினாடிக்கு 60 கன அடி தண்ணீர் அனுப்பப்படுகிறது.

Next Story