ரூ.100 கோடியில் ஏரி, குளம் தூர்வாரும் பணி முடிந்துள்ளது மு.க.ஸ்டாலினுக்கு, முதல்-அமைச்சர் பதில்


ரூ.100 கோடியில் ஏரி, குளம் தூர்வாரும் பணி முடிந்துள்ளது மு.க.ஸ்டாலினுக்கு, முதல்-அமைச்சர் பதில்
x
தினத்தந்தி 10 Nov 2017 5:00 AM IST (Updated: 10 Nov 2017 12:56 AM IST)
t-max-icont-min-icon

ஏரி, குளம் தூர்வாரும் பணிக்காக ஒதுக்கப்பட்ட ரூ.400 கோடியில், ரூ.100 கோடி செலவிடப்பட்டுள்ளதாக மு.க.ஸ்டாலினுக்கு, முதல்-அமைச்சர் பதில் அளித்துள்ளார்.

தேனி

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா தேனியில் நேற்று நடந்தது. இந்த விழாவிற்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமை தாங்கினார். துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள், கட்சி நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

தேனி மாவட்டத்தை சார்ந்தவரும், நீதிக்கட்சி தலைவருமான பி.டி.ராஜன் சென்னை மாகாண முதல்-அமைச்சராக இருந்திருக்கிறார். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா இந்த தொகுதியில் சட்டமன்ற உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டு தமிழ்நாட்டின் முதல்-அமைச்சர்களாக பொறுப்பேற்றவர்கள்.

அதன் பிறகு இந்த தேனி மாவட்ட மண்ணின் மைந்தரும், தற்போதைய துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் தமிழ் நாட்டின் முதல்-அமைச்சராக பதவி வகித்திருக்கிறார். ஆக, நான்கு முதல்-அமைச்சர்களை கண்ட மாவட்டம் இந்த தேனி மாவட்டம் என்று பெருமையுடன் கூறிக்கொள்கிறேன்.

பொருள் இருப்பவர்களிடம் மனம் இல்லை, மனம் இருப்பவர்களிடம் பொருள் இருப்பதில்லை. இந்த இரண்டும் ஒரே மனிதனிடம் இருந்தது என்றால் அது எம்.ஜி.ஆரிடம் தான் இருந்தது. மக்கள் பிரச்சினைகளை, தன் சொந்த பிரச்சினையாக கருதி அதை தீர்த்து வைத்தவர் எம்.ஜி.ஆர்.

மக்களின் அடிப்படை பிரச்சினைகளை முடிவுக்கு கொண்டு வர ஏதாவது ஒரு திட்டத்தையாவது இதற்கு முன் ஆண்ட தி.மு.க.வினர் கொண்டு வந்தனரா?. தமிழ்நாட்டின் நலனுக்காக அவர்கள் மத்திய அரசிடம் வாதிட்டு பெற்று வந்த திட்டங்கள் என்ன என்பதை அவர்கள் கூற முடியுமா?.

அவர்களுடைய ஆட்சி அதிகாரங்கள் அனைத்தும் அவர்களையும் அவர்களுடைய குடும்பத்தாரையும் வளப்படுத்த மட்டுமே பயன்பட்டதே தவிர, ஏழைகளுக்கும், நாட்டு மக்களுக்கும் ஒரு காலமும் பயன்பட்டது கிடையாது.

நீங்கள் எத்தனை வேஷம் போட்டாலும், மக்களின் எக்ஸ்ரே கண்களுக்கு உங்களின் உண்மையான முகம் தெரியும். இனி ஒரு காலமும் உங்களால் (தி.மு.க.) மக்கள் மனதில் இடம் பிடித்து, ஆட்சி அமைக்க முடியாது என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் சென்னையிலே மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிடுகின்றேன் என்று சொல்லி ஒரு சில இடங்களுக்கு சென்று பார்த்துவிட்டு பேட்டி கொடுக்கிறார்.

அவர் தாழ்வான பகுதிகளிளெல்லாம் மழைநீர் தேங்கியிருக்கின்றது. இந்தத்தண்ணீரை அகற்ற முடியாத அரசு தேவைதானா? செயலிழந்த அரசு என்று அரசைப்பற்றி விமர்சனம் செய்கின்றார்.

நாங்கள் கேட்கின்றோம். இவர் 5 ஆண்டு காலம் சென்னையினுடைய மேயராகவும் இருந்தார், 5 ஆண்டு காலம் உள்ளாட்சித் துறை அமைச்சராகவும், துணை முதல்-அமைச்சராகவும், ஆக 10 ஆண்டுகாலம் சென்னை மாநகரத்தில் எதுவுமே செய்யவில்லை. ஆனால், இரண்டு பொறுப்புகளையுமே, பதவிகளையுமே உள்ளாட்சி அமைப்பின்கீழ் வருகின்ற பதவி. இந்த உள்ளாட்சி அமைப்பின் மூலம் நிறைய திட்டங்கள் நிறைவேற்றப்படும் என்று சொன்னால் இந்த இரண்டு பொறுப்புகளையும் அவர் வைத்திருந்தார். ஏன் அப்பொழுதெல்லாம் இந்த சென்னை மாநகரத்தைப் பற்றிச் சிந்திக்கவில்லையா? இப்பொழுதுதான் ஞானம் வந்துவிட்டதா?.

தமிழக அரசைப் பொறுத்தவரைக்கும், மழைக்காலங்களில் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் தேங்காமல் அகற்றப்படவேண்டுமென்பதற்காக, சென்னை மாநகர மக்களுக்கு பாதிப்பில்லாமல் உருவாக வேண்டுமென்பதற்காக, சட்டப்பேரவை விதி 110-ன் கீழ் கிட்டத்தட்ட ரூபாய் 4,034 கோடி ஒதுக்கீடு செய்து முதற்கட்டமாக ரூபாய் 1,101 கோடி மதிப்பீட்டிலே திட்டம் தீட்டப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டன. கிட்டத்தட்ட 386 கி.மீ. நீளத்திற்கு கால்வாய் அமைக்கும் பணி தொடங்கப்பட்டு, இப்போது 300 கி.மீ. வரை பணி முடிந்து, எஞ்சியுள்ள பணிகள் விரைவாக முடிக்கப்படும். கொசஸ்தலை ஆற்றில் வடிநில பகுதிகளில் வடிகால் வசதி செய்து கொடுக்கின்ற பணி மத்திய அரசின் அனுமதி கிடைத்தவுடன், ஆரம்பிக்கப்பட்டு அமல்படுத்தப்படும்.

இவர்களுடைய ஆட்சிகாலத்தில் எதுவுமே செய்யாமல் தவற விட்டுவிட்டார்கள். ஜெயலலிதாவின் ஆட்சியில் தான் திட்டம் தீட்டப்பட்டு செயலாக்கம் செய்யப்பட்டுக் கொண்டிருக்கின்றது.

உள்ளாட்சி மன்றத் தேர்தலை, அ.தி.மு.க. நடத்தவில்லை என்று சொல்கின்றார். ஜெயலலிதா இருக்கின்றபோது உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு வெளியிட்டார். மு.க.ஸ்டாலின் தான் நீதிமன்றத்திற்குச் சென்று தடையாணை பெற்றார். நாங்கள் தடுக்கவில்லை. தி.மு.க.வினர் தான் தடுத்தார்கள்.

நீதிமன்ற தீர்ப்பு வந்தவுடன் உள்ளாட்சி மன்றத் தேர்தல் நடைபெறும் என்பதையும் இந்த நேரத்திலே தெரிவித்துக்கொள்ளக் கடமைப்பட்டிருக்கின்றேன்.

துணை முதல்-அமைச்சரும், நானும் இரட்டைக்குழல் துப்பாக்கி போல் செயல்படுவோம், ஆட்சியிலும், கட்சியிலும். நீங்களும் எது, எதையோ நினைத்தீர்கள். ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு இந்த இயக்கம் இருக்காது என்று நினைத்தீர்கள். ஒரு தொண்டன் கூட இந்த இயக்கத்திலிருந்து விலகவில்லை, தொட்டுக்கூட யாராலும் பார்க்க முடியவில்லை.

ஆகவே அ.தி.மு.க. தொண்டனுடைய உடலிலே ஓடுகின்ற ரத்தம் விசுவாசமுள்ள ரத்தமாக இருக்கின்ற காரணத்தினாலே, ஒரு தொண்டனைக்கூடி, நீங்கள், எங்கள் இயக்கத்திலிருந்து விலக்க முடியாது. ஆகவே, விசுவாசமுள்ள தொண்டர்களும், பொதுமக்களும் இருக்கின்றவரை, இந்த இயக்கத்தை ஆட்டவோ, அசைக்கவோ முடியாது.

பல்வேறு திட்டங்களை நாம் நிறைவேற்றிக்கொண்டிருக்கின்றோம். குடிமராமத்துத் திட்டத்தை நாங்கள் உருவாக்கித் தந்திருக்கின்றோம். முதற்கட்டமாக, ரூபாய் 100 கோடி ஒதுக்கி, 519 ஏரிகளை தூர்வாரியிருக்கின்றோம். மேற்கொண்டு ரூபாய் 300 கோடி இத்திட்டத்திற்கு ஒதுக்கினோம், பருவமழை தொடங்கிய காரணத்தினாலே, நிறுத்தி வைத்திருக்கின்றோம். எதிர்க்கட்சித்தலைவர் எங்கே ரூபாய் 400 கோடி என்று கேட்கின்றார். நாங்கள் ரூபாய் 100 கோடிதான் செலவு செய்திருக்கின்றோம். ரூபாய் 300 கோடிக்கான பணி இன்னும் தொடங்கப்படவில்லை என்பதையும் உங்களிடத்திலே தெரிவித்துக் கொள்கின்றேன். அதுகூட தெரியாமல் அவர் சொல்லிக் கொண்டிருக்கின்றார்.

அதுமட்டுமல்ல, அவருடைய திட்டமெல்லாம், நம்மோடு இருக்கின்ற ஒருவரோடு சேர்ந்துகொண்டு, இந்த ஆட்சியை கலைக்கவேண்டும் என்பதுதான். இரட்டை இலையும் எங்களுக்குக் கிடைக்கும். ஆகவே, இரட்டை இலை கிடைக்கின்றபோது, இந்த நாட்டு மக்களிடையே, இருபெரும் தலைவர்கள் கண்ட கனவை நாங்கள் தொடர்ந்து நனவாக்குவோம்.

இவ்வாறு அவர் பேசினார்.

Next Story