டி.டி.வி.தினகரன் மீதான தேச துரோக வழக்கை ரத்து செய்ய ஐகோர்ட்டு மறுப்பு


டி.டி.வி.தினகரன் மீதான தேச துரோக வழக்கை ரத்து செய்ய ஐகோர்ட்டு மறுப்பு
x
தினத்தந்தி 10 Nov 2017 3:15 AM IST (Updated: 10 Nov 2017 1:12 AM IST)
t-max-icont-min-icon

டி.டி.வி. தினகரன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது போலீசார் பதிவு செய்துள்ள தேச துரோக வழக்கை ரத்து செய்ய மறுத்து ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

‘நீட்’ தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு பெற உரிய நடவடிக்கை எடுக்காத மத்திய, மாநில அரசுகளை கண்டித்து, சேலம் மாவட்டத்தில் துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன. அதில், அ.தி.மு.க. அம்மா அணி துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன், கர்நாடக மாநில செயலாளர் புகழேந்தி, எம்.எல்.ஏ. வெற்றிவேல் உள்ளிட்டோரது பெயர் இருந்தது.

இதுகுறித்து அ.தி.மு.க. கிளைச்செயலாளர் சரவணன் என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில், டி.டி.வி.தினகரன், புகழேந்தி, வெற்றிவேல் உள்பட 17 பேர் மீது தேச துரோகம், கிரிமினல் அவதூறு ஆகிய சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இதையடுத்து இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி ஐகோர்ட்டில், புகழேந்தி மனு தாக்கல் செய்தார். அதில், அரசியல் காழ்ப்புணர்ச்சியின் காரணமாக இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்று அவர் கூறியிருந்தார். இந்த மனுவை நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் விசாரித்தார்.

அப்போது, போலீஸ் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த பதில் மனுவில், ‘மக்கள் மத்தியில் வினியோகம் செய்யப்பட்ட துண்டு பிரசுரத்தில், கொலையாளிகளின் ஆட்சி தொடரலாமா?, காவிக்கு துணை போகும் எட்டப்பன் அரசு. படிக்க எண்ணியவரை பாடையில் ஏற்றிய பாவிகளே என்று மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கடுமையான வாசகங்கள் அச்சிடப்பட்டிருந்தது. இதுகுறித்து விசாரித்தபோது, டி.டி.வி.தினகரனின் தூண்டுதலின் பேரில்தான் துண்டு பிரசுரம் அச்சடிக்கப்பட்டது என கலைவாணி என்பவர் வாக்குமூலம் அளித்துள்ளார். அதனால் இந்த வழக்குப்பதிவு செய்யப்பட்டது’ என்று கூறப்பட்டிருந்தது.

இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து மனுதாரர் வக்கீல் என்.ஜி.ஆர். பிரசாத் வாதம் செய்தார். தமிழக அரசு சார்பில் ஆஜரான அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயண், ‘நீட்’ தேர்வுக்கு எதிராக, பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படும் விதமாக ‘பந்த்’ போன்ற போராட்டங்களில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்’ என்று வாதிட்டார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் பிறப்பித்த உத்தரவில், ‘மனுதாரர் புகழேந்திக்கு எதிராக கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு முகாந்திரம் உள்ளதா?, இல்லையா? என்பது குறித்து போலீசாரின் புலன் விசாரணையில்தான் தெரியவரும். எனவே, இந்த சூழ்நிலையில், அந்த புலன்விசாரணையில் இந்த ஐகோர்ட்டு தலையிட முடியாது. இந்த மனுவை தள்ளுபடி செய்கிறேன்’ என்று கூறியுள்ளார்.

Next Story