முதல்-அமைச்சர் தலைமையில் ஆலோசனை கூட்டம் தலைமை செயலகத்தில் இன்று நடக்கிறது


முதல்-அமைச்சர் தலைமையில் ஆலோசனை கூட்டம் தலைமை செயலகத்தில் இன்று நடக்கிறது
x
தினத்தந்தி 11 Nov 2017 3:15 AM IST (Updated: 11 Nov 2017 1:08 AM IST)
t-max-icont-min-icon

சென்னை மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் மழை பாதிப்புகளுக்கு தீர்வு காண்பது குறித்து தலைமை செயலகத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று ஆலோசனை கூட்டம் நடக்கிறது.

சென்னை,

கடந்த சில நாட்களாக சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் ஏராளமான இடங்களில் வெள்ளநீர் தேங்கி, மக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்துள்ளது. நீர்நிலை பகுதிகளில் செய்யப்பட்டுள்ள ஆக்கிரமிப்பும் இதற்கு ஒரு காரணமாக அமைந்துள்ளது. நீர் தேங்குவதற்கான அனைத்து காரணங்களை கண்டுபிடிக்கவும், அதற்கான நிரந்தர தீர்வை உருவாக்கவும், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஏற்கனவே அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். அதன் அடிப்படையில் களப்பணிகள் நடைபெற்று வருகின்றன.

மேலும், மழை வெள்ள பாதிப்புகளுக்கு நிரந்தர தீர்வு காணும் ஒருங்கிணைந்த திட்டத்துக்கான அறிக்கையை தாக்கல் செய்யவும் அதிகாரிகளுக்கு முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். இதுபற்றி சம்பந்தப்பட்ட அதிகாரிகளை தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் அழைத்து பேசினார்.

இந்தநிலையில், இதுதொடர்பான ஆலோசனைக் கூட்டம் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று(சனிக்கிழமை) காலை 11 மணியளவில் சென்னை தலைமை செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10-வது தளத்தில் நடைபெறுகிறது.

தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் மற்றும் வருவாய்த்துறை, நெடுஞ்சாலைகள் துறை, மின்சாரத்துறை உள்ளிட்ட துறைகளின் உயர் அதிகாரிகள், சென்னை மாவட்ட கலெக்டர் அன்புச்செல்வன், காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் பொன்னையா, திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் சுந்தரவல்லி ஆகியோரும் இந்த கூட்டத்தில் கலந்துகொள்கின்றனர்.

Next Story