போக்குவரத்துக் கழகங்களின் கடன் சுமையை அரசே ஏற்க வேண்டும் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை


போக்குவரத்துக் கழகங்களின் கடன் சுமையை அரசே ஏற்க வேண்டும் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை
x
தினத்தந்தி 12 Nov 2017 12:30 AM IST (Updated: 11 Nov 2017 10:51 PM IST)
t-max-icont-min-icon

போக்குவரத்துக் கழகங்களின் கடன் சுமையை அரசே ஏற்க வேண்டும் என்று டாக்டர் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

சென்னை, 

பா.ம.க. இளைஞரணித் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் பொருளாதார நிலை குறித்து தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் மூலம் பெறப்பட்ட தகவல்கள் மிகவும் அதிர்ச்சி அளிக்கின்றன. அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் 3 கோட்டங்களுக்கு சொந்தமான சொத்துகள் ரூ.2,494 கோடிக்கு நிதி நிறுவனங்களிடம் அடகு வைக்கப்பட்டிருக்கின்றன. மற்ற கோட்டங்களின் நிதிநிலையும் மிகவும் மோசமாகவே உள்ளது.

போக்குவரத்துக் கழகங்களின் கடன்சுமை குறைந்தபட்சம் ரூ.20 ஆயிரம் கோடியைத் தாண்டிவிட்ட நிலையில், அதற்கான வட்டி சுமையே ஆண்டுக்கு ரூ.2 ஆயிரம் கோடிக்கும் அதிகமாக இருக்கும். இதேநிலை நீடித்தால் அடுத்த சில ஆண்டுகளில் போக்குவரத்துக்கழகங்களின் கடன்கள் அடைக்க முடியாத அளவுக்கு அதிகரித்து விடும்.

அத்தகைய சூழலில் அரசுப் போக்குவரத்துக்கழக சொத்துக்களை ஏலத்தில் விற்பனை செய்து, கழகங்களை மூடுவதைத் தவிர வேறு வழியில்லை என்ற நிலை உருவாகிவிடும்.

அப்படி ஒரு நிலை ஏற்பட்டால் பொதுப்போக்குவரத்து என்பதே ஏழைகளுக்கு எட்டாத ஒன்றாகிவிடும். தனியார் போக்குவரத்து நிறுவனங்கள் வைத்தது தான் சட்டம் என்றாகிவிடும். அதைத் தடுக்கும் வகையில் மின்வாரியக் கடன்சுமையை குறைக்க உதய் திட்டத்தை செயல்படுத்தியது போன்று, அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் கடன் சுமையையும் அரசே ஏற்கும் வகையில் புதிய திட்டத்தை தமிழக அரசு உருவாக்கி செயல்படுத்த வேண்டும்.

போக்குவரத்துக் கழகங்களுக்கு அரசு வழங்க வேண்டிய அனைத்து நிலுவைகளையும் வழங்க வேண்டும். அத்துடன் அரசு போக்குவரத்துக்கழக நிர்வாகத்தை சீரமைத்து, அனைத்து போக்குவரத்துக் கழகங்களையும் லாபத்தில் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள மேலும் ஒரு அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

சரக்கு மற்றும் சேவை வரி விகிதங்களில் மத்திய அரசு ஏராளமான மாற்றங்களைச் செய்திருக்கிறது. 28 சதவீத வரிப் பிரிவில் இருந்த 178 பொருட்கள் மீதான வரி விகிதம் குறைக்கப்பட்டிருக்கின்றன. பல்வேறு பிரிவினருக்கு நன்மை பயக்கும் இந்த நடவடிக்கை வரவேற்கத்தக்கது. எனினும், இது போதுமானதல்ல.

18 சதவீத ஜி.எஸ்.டி. என்பதே மிகவும் அதிகமான வரி தான் என்பதால் 28 சதவீதம் என்ற வரிப் பிரிவே தேவையில்லை. அந்தப் பிரிவை உடனடியாக நீக்க வேண்டும். உடல் நலனுக்கு தீங்கு விளைவிக்கும் சிகரெட், பான்மசாலா, சுருட்டு, புகையிலைப் பொருட்கள் ஆகியவை 28 சதவீதம் வரிப் பிரிவில் தான் உள்ளன. இவற்றை தீமை பயக்கும் பொருட்கள் என்ற தனிப் பிரிவுக்கு கொண்டு சென்று 100 சதவீதம் கூட வரி விதிக்கலாம். வரி விதிப்பு என்பது மக்களுக்கு பாதிப்பு ஏற்படுவதைத் தடுக்கும் வகையில் இருந்தால் அதை வரவேற்கலாம். பெட்ரோல், டீசல் ஆகியவற்றையும் கூடுதல் தீர்வை இல்லாமல் சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பு முறையின் கீழ் கொண்டுவர வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story