பல கோடி ரூபாய் சொத்து ஆவணங்களை 14 கார்களில் ஏற்றிச்சென்றனர் சசிகலா உறவினர்களுக்கு ‘சம்மன்’


பல கோடி ரூபாய் சொத்து ஆவணங்களை 14 கார்களில் ஏற்றிச்சென்றனர் சசிகலா உறவினர்களுக்கு ‘சம்மன்’
x
தினத்தந்தி 12 Nov 2017 5:45 AM IST (Updated: 12 Nov 2017 12:20 AM IST)
t-max-icont-min-icon

3-வது நாளாக நடைபெற்ற வருமான வரி சோதனையின் போது கைப்பற்றப்பட்ட பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்து ஆவணங்களை, அதிகாரிகள் 14 கார்களில் ஏற்றிச்சென்றனர்.

சென்னை,

சசிகலாவின் உறவினர்கள் மற்றும் அவரது குடும்பத்துடன் தொடர்புடையவர்களின் வீடுகள், அலுவலகங்கள், நிறுவனங்களில் வருமான வரி அதிகாரிகள் கடந்த வியாழக்கிழமை திடீரென்று அதிரடி சோதனை நடத்தினார்கள்.

சென்னை, தஞ்சை, மன்னார்குடி, திருச்சி, கோடநாடு, நாமக்கல், கர்நாடக மாநிலம் பெங்களூரு, தெலுங்கானா மாநிலம் ஐதராபாத், மற்றும் புதுச்சேரி, டெல்லி உள்ளிட்ட 187 இடங்களில் 1,600-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் நேற்று 3-வது நாளாக சுமார் 50 இடங்களில் சோதனை நீடித்தது.

இதுதொடர்பாக வருமான வரித்துறை வட்டாரங்கள் கூறியதாவது:-

சசிகலா உறவினர்களில் வீடுகளில் நடத்தப்பட்ட சோதனையில் போலி நிறுவனம் பெயரில் ரூ.150 கோடி மதிப்பிலான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டு உள்ளன. இந்த சோதனையில் அதிக எண்ணிக்கையில் ரூபாய் நோட்டுகளும், கிலோ கணக்கில் தங்க கட்டிகளும் சிக்கி உள்ளன.

மேலும் சோதனையின் போது சிலரது வங்கி கணக்குகள் சரிபார்க்கப்பட்டன. அப்போது அந்த வங்கி கணக்குகள் மூலம், செல்லாது என்று அறிவிக்கப்பட்ட ரூ.500, ரூ.1,000 நோட்டுகளை கோடிக்கணக்கில் பரிமாற்றம் செய்தது தெரியவந்தது. இது அதிர்ச்சி அளிக்கக்கூடிய வகையில் உள்ளது. விவேக் பெயரில் உள்ள அசையா சொத்துகளுக்கான ஆவணங்களை தீவிரமாக ஆய்வு செய்து வருகிறோம். சசிகலா குடும்பத்தை சேர்ந்த 8 பேரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ஒரு விடுதியில் நடந்த சோதனையில் வைரங்கள் அதிகம் கிடைத்து இருக்கிறது. சுமார் ஆயிரம் கோடி மதிப்பிலான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டு இருக்கின்றன.

இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

சோதனையின் போது சசிகலாவின் சகோதரர் திவாகரன், அண்ணி இளவரசி, விவேக் ஆகியோர் சம்பந்தப்பட்ட இடங்களில் இருந்துதான் அதிக ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

Next Story