ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி முழுமை அடையவில்லை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி


ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி முழுமை அடையவில்லை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி
x
தினத்தந்தி 13 Nov 2017 3:30 AM IST (Updated: 13 Nov 2017 12:14 AM IST)
t-max-icont-min-icon

நீர்நிலை பகுதிகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி இன்னும் முழுமை அடையவில்லை என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார்.

சென்னை,

வடகிழக்கு பருவமழை தொடங்கியதும், சென்னை எழிலகத்தில் கட்டுப்பாட்டு அறை தொடங்கப்பட்டது. இந்த கட்டுப்பாட்டு அறையை தமிழக வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நேற்று பார்வையிட்டார். வெள்ள பாதிப்பு குறித்த மக்கள் புகார்களுக்கு உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கவும் அங்குள்ள அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.

அதனைத்தொடர்ந்து அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

காஞ்சீபுரம் மாவட்டம் நல்லூரில் உள்ள ஏரியில் 2 மதகுகளில் ஒன்றில் இருந்து வெள்ள நீர் வெளியேறுகிறது. அந்த மதகு நீர் விவசாய நிலங்கள் வழியாக செல்வதால், அந்த நீரை முறைப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. மற்றபடி எந்த உடைப்பும் அந்த மதகில் ஏற்படவில்லை.

சாதாரண மழை, கனமழை, பெருமழை, தொடர் மழை, புயல், வெள்ளம் வந்தாலும் அதனை எதிர்கொள்ள தமிழக அரசு தயாராகவே இருக்கிறது. மீட்பு-நிவாரண பணிகள் குறித்து மாவட்ட கலெக்டர்கள் மற்றும் கள அதிகாரிகளுடன் வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆலோசனை நடத்தி வருகிறோம். எந்த மழை வந்தாலும் மக்கள் பாதுகாப்பு பணியில் தமிழக அரசு வெற்றி கண்டிருக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

இதனைத்தொடர்ந்து அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரிடம் நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

கேள்வி:- சென்னை ராஜாஜி சாலையில் பழமை வாய்ந்த கட்டிடம் இடிந்து விழுந்துள்ளதே?

பதில்:- அந்த கட்டிடம் உள்பட ஏற்கனவே 17 கட்டிடங்களுக்கு எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கப்பட்டு உள்ளது. இந்தநிலையில் தான் 150 வருடங்கள் பழமை வாய்ந்த அந்த கட்டிடம் இடிந்திருக்கிறது. இதில் உயிர்சேதம் கிடையாது. இதையடுத்து அருகில் உள்ள கட்டிடங்களுக்கு உறுதித்தன்மைக் கான சோதனை மேற்கொள்ளப்பட இருக்கிறது.

கேள்வி:- நீர்நிலை பகுதிகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி முழுமை பெற்றுள்ளதா?

பதில்:- இன்னும் முழுமை அடையவில்லை. முதல்-அமைச்சர் உத்தரவின்பேரிலும், ஐகோர்ட்டு வழிகாட்டுதலின்படியும் நீர்நிலை பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருகின்றன.

கேள்வி:- மழைநீரை சேகரிக்கும் பணிகள் எப்படி நடக்கிறது?

பதில்:- ஒரு வருடத்தின் 48 சதவீத நீர்த்தேவை, வடகிழக்கு பருவமழையே பூர்த்தி செய்கிறது. எனவே இப்பருவ மழைநீரை சேகரிக்க அனைத்து ஏற்பாடுகளும் தீவிரமாக்கப்பட்டு வருகின்றன. 1,199 நீர்நிலைகளை தூர்வாருவதில் முதற்கட்ட பணிகள் முடிந்துவிட்டன. இதற்காக ரூ.100 கோடி ஒதுக்கப்பட்டது. தற்போது ரூ.300 கோடி மதிப்பீட்டில் 2-ம் கட்ட தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இப்பணிகள் வடகிழக்கு பருவமழை முடிந்தவுடன் தொடங்கும்.

மழை வெள்ளம் குறித்து மக்கள் எவ்வித அச்சமும் கொள்ள தேவையில்லை. எல்லா கட்டங்களில் தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. எஞ்சியுள்ள 50 நாட்களும், அதாவது வடகிழக்கு பருவமழை முடியும் வரை இக்கட்டுப்பாட்டு அறை செயல்படும். பொதுமக்களின் புகார்கள் உடனுக்குடன் தீர்வு செய்யப்படும்.

கேள்வி:- நீர்நிலைகளை தூர்வாருவதில் தமிழக அரசு தோல்வியை சந்தித்து வருவதாக மு.க.ஸ்டாலின் கூறியுள்ளாரே?

பதில்:- பொதுப்பணித்துறை மற்றும் கலெக்டர் அலுவலக மதிப்பீட்டு விவரங்களின் முழு விவரமும் தெரியாமல் மு.க.ஸ்டாலின் பேசுகிறார். ஏரிகள் உள்பட நீர்நிலைகளை தூர்வாருவது மக்கள் பணிதான். அதில் மு.க.ஸ்டாலின் ஈடுபடட்டும். அதனை வரவேற்கிறோம். அதற்காக எல்லா ஏரிகளை நாங்கள் தான் தூர்வாரி வருகிறோம் என்ற ரீதியில் அவர் பேசுவது தவறு. மக்கள் பணிகளில் ஈடுபடுவதை அவர் விளம்பரமாக்க பார்க்கிறார். அப்படி செய்யும்போது விமர்சனங்கள் தான் வரும் என்பதை அவர் புரிந்துகொள்ள வேண்டும்.

மேற்கண்டவாறு அவர் பதில் அளித்தார்.

Next Story