சென்னை எழிலக வளாகத்தில் மேற்கூரை இடிந்தது, அண்ணாசாலையில் பள்ளி கட்டிடம் இடிந்து விழுந்தது


சென்னை எழிலக வளாகத்தில் மேற்கூரை இடிந்தது, அண்ணாசாலையில் பள்ளி கட்டிடம் இடிந்து விழுந்தது
x
தினத்தந்தி 14 Nov 2017 4:00 AM IST (Updated: 14 Nov 2017 1:55 AM IST)
t-max-icont-min-icon

சென்னை எழிலக வளாகத்தில் 200 ஆண்டுகள் பழமையான கட்டிடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்தது. அண்ணாசாலையில் உள்ள பள்ளிக்கட்டிடமும் இடிந்து விழுந்தது.

சென்னை,

சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எழிலகத்தில், கட்டிட கலையை பறைசாற்றும் வகையில் பழமையான கட்டிடங்கள் உள்ளன. தமிழக அரசின் பல்வேறு துறை அலுவலகங்கள் எழிலக வளாகத்தில் இயங்கி வருகின்றன.

எழிலக வளாகத்தில் இயங்கி வந்த 200 ஆண்டுகள் பழமையான கொதிகலன் அலுவலக கட்டிடம் உறுதித்தன்மையை இழந்தது. அவ்வப்போது கட்டிடத்தின் மேற்கூரை துகள்கள் விழுந்தன. எப்போது வேண்டுமானாலும் அந்த கட்டிடம் இடிந்து விழும் அபாயத்தில் காணப்பட்டது.

இதையடுத்து அங்கு பணியாற்றிய ஊழியர்கள் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு பொதுபணித்துறை கட்டிட அலுவலகத்துக்கு இடம் பெயர்ந்தனர். வடகிழக்கு பருவமழையின் தாக்கத்தால், கொதிகலன் அலுவலக கட்டிடத்தின் மேற்கூரை மிகவும் பலவீனமாக காட்சி அளித்தது. இந்த நிலையில் நேற்று பெய்த கனமழையின் போது கட்டிடத்தின் மேற்கூரை பயங்கர சத்தத்துடன் இடிந்து விழுந்தது.

அப்போது அந்த கட்டிடத்தின் அருகில் யாரும் இல்லாததால் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.

கொதிகலன் அலுவலக கட்டிடத்தை புனரமைக்க ரூ.2 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வந்தது. பருவமழையால் பணிகள் நிறுத்தப்பட்டிந்த வேளையில் தற்போது இந்த விபத்து நடந்துள்ளது.

எழிலக வளாகத்தில் கடந்த 2013–ம் ஆண்டு ‘ஹூமாயின்’ மஹாலில், செயல்பட்டு வந்த மகளிர் ஆணையத்தின் கட்டிடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்தது குறிப்பிடத்தக்கது.

சென்னை, அண்ணாசாலையில் உள்ள அரசு மதரசா மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. சென்னையின் பழமையான பள்ளிகளில் ஒன்றான மதரசா மேல்நிலைப்பள்ளி 168 வயதுடையதாகும். இந்த பள்ளியின் பழைய கட்டிடம் பாரம்பரிய கட்டிடமாக கருதப்படுகிறது. பள்ளியின் வகுப்புகள் புதிய கட்டிடத்தில் இயங்கிவருகிறது. பாழடைந்து காணப்பட்ட பள்ளியின் பழைய கட்டிடத்தை அரசு பராமரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்னாள் மாணவர்கள் கொடுத்து வந்தனர்.

இந்த நிலையில் நேற்று பெய்த கனமழையில் இந்த பள்ளியின் கட்டிடம் திடீரென பலத்த சத்ததுடன் இடிந்து விழுந்தது. சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் உடனே திரண்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இச்சம்பவம் குறித்து முன்னாள் மாணவர் ஒருவர் கூறுகையில், ‘இந்த பள்ளியின் கட்டிடம் இடிந்து விழுவது இது முதல் முறை அல்ல. பாரம்பரிய கட்டிடமான இந்த பள்ளியை பராமரிக்க அரசு முன்வர வேண்டும். இதற்கான நடவடிக்கையை தமிழக அரசு உடனே எடுக்க வேண்டும்’, என்றார்.

மதரசா பள்ளி கடந்த வெள்ளம் மற்றும் புயல் தாக்குதலின் போதும் இடிந்து சேதம் அடைந்தது குறிப்பிடத்தக்கது.


Next Story