நீட், ஐ.ஐ.டி. நுழைவு தேர்வுகளுக்கு இலவச பயிற்சி என்பது ஏமாற்றும் செயல் டாக்டர் ராமதாஸ் கண்டனம்
அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு நீட், ஐ.ஐ.டி. நுழைவு தேர்வுகளுக்கு இலவச பயிற்சி என்பது ஏமாற்றும் செயல் என்று டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
சென்னை,
தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு நீட், ஐ.ஐ.டி. நுழைவு தேர்வுகளுக்கு இலவசப் பயிற்சி அளிப்பதற்கான மையங்கள் இன்று தொடங்கப்பட உள்ளன. இது தமிழகத்தின் மீது நீட் தேர்வு திணிக்கப்படுவதை ஏற்றுக்கொள்ளும் செயல் என்பதுடன், மாணவர்களை ஏமாற்றும் செயலும் ஆகும்.
கற்பித்தல் என்பது மாணவர்களுக்கு ஆசிரியர் நேரடியாக பாடம் நடத்துவது ஆகும். ஆனால், தமிழக அரசின் இலவச நீட் மற்றும் ஐ.ஐ.டி. நுழைவுத் தேர்வு பயிற்சி என்பது அப்படிப்பட்டதல்ல. இது வீடியோ கான்பரன்சிங் மூலம் நடத்தப்படும் பயிற்சி ஆகும். வகுப்பறை போன்ற கட்டமைப்பில் மாணவர்களுக்கு ஆசிரியர்கள் பாடம் நடத்தினால் தான் மாணவர்களால் எளிதில் புரிந்துகொள்ள முடியும். அப்போது தான் மாணவர்கள் தங்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை ஆசிரியர்களிடம் கேட்டு தெளிவு பெற முடியும்.
வீடியோ கான்பரன்சிங் முறையில் இது சாத்தியமில்லை. இந்த முறையில் மாணவர்கள் ஆசிரியருடன் உரையாட முடியும் என்று அறிவிக்கப்பட்டிருந்தாலும் கூட 412 மையங்களின் மாணவ, மாணவியரும் தங்களின் சந்தேகங்களைக் கேட்டு தெளிவு பெற முடியாது.
விளம்பரத்திற்கு நீட் பயிற்சி மையங்களைத் தொடங்கி தமிழ்நாட்டு மக்களையும், மாணவர்களையும் தமிழக அரசு ஏமாற்றுவது கண்டிக்கத்தக்கது. நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு பெறுவது தான் இந்த சிக்கலுக்கு நிரந்தரத் தீர்வாகும். அதற்கான சட்டப்போராட்டம் இன்னும் முடியாத நிலையில், அதை முழுவீச்சில் தமிழக அரசு நடத்த வேண்டும். இடைக்கால ஏற்பாடாக நீட் தேர்வுக்கு பயிற்சி அளிப்பதாக இருந்தால், நன்றாக பயிற்சி பெற்ற ஆசிரியர்களைக் கொண்டு நேரடியாக மாணவர்களுக்கு பயிற்சியளிக்க அரசு முன்வர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.