மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு: சரத்குமார் கண்டனம்
மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு சரத்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னை,
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் ஆர்.சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:–
ராமேசுவரம் கடல்பகுதியில் தமிழக மீனவர்கள் மீது இந்திய கடலோர காவல்படையினர் துப்பாக்கி சூடு நடத்திய சம்பவம் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்பட்டுவரும் நிலையில், பாதுகாப்பு தரவேண்டிய இந்திய கடலோர காவல்படையே தாக்குதல் நடத்தி இருப்பது மீனவர் சமூகத்தினரிடையே அச்ச உணர்வை ஏற்படுத்தி இருக்கும் என்பது நிச்சயம்.
இச்செய்தியை இந்திய கடலோர காவல்படை மறுத்து இருக்கிறது. இருப்பினும் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்திற்கு தமிழக அரசு கடிதம் அனுப்பி இருப்பதாக அமைச்சர் ஜெயக்குமார் தகவல் தெரிவித்து இருக்கிறார். இதுபோன்ற சம்பவங்கள் இனியும் தொடராது என்பதை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும்.
தமிழக மீனவர்கள் நமக்கு பாதுகாப்பாக இந்திய கடலோர காவல்படை இருக்கிறது என்ற நம்பிக்கையோடும், பாதுகாப்பு உணர்வோடும் மீன் பிடிக்க செல்லக்கூடிய சூழ்நிலை உருவாக மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story