கோவையில் பயோ டாய்லட், தூய்மை இந்தியா திட்டப்பணிகள் குறித்து ஆளுநர் ஆய்வு
கோவையில் பயோ டாய்லட், தூய்மை இந்தியா திட்டப்பணிகள் குறித்து ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஆய்வு மேற்கொண்டது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை,
கோவையில் உள்ள பாரதியார் பல்கலைக்கழகத்தில் 34-வது பட்டமளிப்பு விழா நேற்று நடந்தது. இதில் பங்கேற்பதற்காக தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் சென்னையில் இருந்து விமானம் மூலம் நேற்று காலை 10.30 மணிக்கு கோவை வந்தார். பின்னர் பல்கலைக்கழகத்துக்கு சென்ற அவர் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்று மாணவ-மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார்.
அதன் பிறகு கோவை ரேஸ்கோர்சில் உள்ள அரசு விருந்தினர் மாளிகைக்கு சென்று ஓய்வு எடுத்தார். பிறகு திடீரென்று கோவை மாவட்ட கலெக்டர், மாநகராட்சி தனி அதிகாரி, மாநகர போலீஸ் கமிஷனர் உள்பட முக்கியமான உயர் அதிகாரிகள் அரசு விருந்தினர் மாளிகையில் உள்ள குமணன் இல்லத்துக்கு வரவழைக்கப்பட்டனர். அவர்கள் அனைவரும் பிற்பகல் 3 மணிக்கு வந்தனர். பின்னர் அவர்களுடன் 3.15 மணிக்கு கவர்னர் பன்வாரிலால் புரோகித் ஆலோசனை நடத்தினார்.
3 மணி நேரம் நடந்த இந்த ஆலோசனையில் கோவை மாவட்டத்தில் செய்துள்ள வளர்ச்சி பணிகள் தற்போது செய்து வரும் பணிகள், இனிமேல் செய்ய உள்ள பணிகள் குறித்து அதிகாரிகளிடம் தனித்தனியாக கேட்டறிந்தார். அத்துடன் கோவை மாநகரம் மற்றும் மாவட்டத்தில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் என்னென்ன பணிகள் செய்யப்பட்டு வருகின்றன? என்பது குறித்தும் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். அதுபோன்று டெங்கு காய்ச்சல், வைரஸ் காய்ச்சல் பரவுவதை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் அதிகாரிகளிடம் கேட்டார். அதற்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகள் கவர்னருக்கு தெரிவித்தனர்.
ஆளுநர் ஆய்வு நடத்தியதற்கு தமிழக அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தன. இந்த நிலையில், இன்று காலை கோவை காந்திபுரம் பேருந்து நிலையத்தில் தூய்மை இந்தியா திட்டப்பணிகள் குறித்து ஆளுநர் ஆய்வு செய்தார். கோவையில் துடைப்பத்துடன் குப்பைகளை அள்ளி தூய்மை பணியில் ஈடுபட்டார். ஆளுநர் ஆய்வு நடத்திய போது, உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி வேலுமணியும் உடன் இருந்தார். தொடர்ந்து, கோவை சவுரிபாளையத்தில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் பின்பற்றப்படும் திடக்கழிவு மேலாண்மை குறித்து ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஆய்வு செய்தார்.
Related Tags :
Next Story