வருமான வரி சோதனை வழக்கமாக நடைபெறுவதுதான் இதில் அரசியல் இல்லை -கிருஷ்ணபிரியா


வருமான வரி சோதனை வழக்கமாக நடைபெறுவதுதான் இதில் அரசியல் இல்லை -கிருஷ்ணபிரியா
x
தினத்தந்தி 15 Nov 2017 1:15 PM IST (Updated: 15 Nov 2017 1:15 PM IST)
t-max-icont-min-icon

வருமானவரி அலுவலகத்தில் ஆஜராக விவேக்கின் சகோதரி கிருஷ்ணபிரியா விசாரணைக்கு பின் வருமான வரி சோதனை வழக்கமாக நடைபெறுவதுதான் இதில் அரசியல் இல்லை என கூறினார்.

சென்னை,

சசிகலா உறவினர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்புடையவர்களின் இடங்களில் வருமான வரி அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டனர். கடந்த 5 நாட்களாக நடத்திய அதிரடி சோதனை நேற்றிரவு முடிவுக்கு வந்தது.

சென்னை, தஞ்சை, மன்னார்குடி, நாமக்கல், திருச்சி, கோவை, கோடநாடு உள்ளிட்ட இடங்களிலும் வெளிமாநிலங்களில் சில இடங்களிலும் அவர்கள் சோதனை நடத்தினார்கள். 187 இடங்களில் 1,600-க்கும் அதிகமான அதிகாரிகள் நடத்திய இந்த சோதனையில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள சொத்து ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. கணக்கில் வராத தங்கம் மற்றும் வைர நகைகளும் கண்டுபிடிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பிறகு பல போலி நிறுவனங்களை தொடங்கி அவற்றில் கருப்பு பணத்தை முதலீடு செய்து இருப்பதும் தெரியவந்து உள்ளது.

 ஜாஸ் சினிமாஸ் நிர்வாகிகளை விசாரணைக்கு வருமாறு வருமான வரித்துறை அதிகாரிகள் சம்மன் அனுப்பி இருந்தனர். இதையடுத்து வருமான வரித்துறை அதிகாரிகள் முன்பு ஜாஸ் சினிமாசின் மூன்று முக்கிய நிர்வாகிகள் இன்று ஆஜரானார்கள். அவர்களிடம் அதிகாரிகள் தனித்தனியாக விசாரணை நடத்தினார்கள்.

ஜாஸ் சினிமாஸ் காம்ப்ளக்ஸ் கை மாறியது தொடர்பான கேள்விகளை அவர்களிடம் அதிகாரிகள் கேட்டனர். அதற்கு மூன்று பேரும் சொன்ன பதில்கள் வீடியோவில் பதிவு செய்யப்பட்டது. இது தவிர அவர்கள் கொடுத்த வாக்குமூலம் எழுத்துப் பூர்வமாகவும் பெறப்பட்டது.

இவர்களைத்  தொடர்ந்து சசிகலாவின்  சகோதரர் திவாகரன், இளவரசி மகள் கிருஷ்ணபிரியா ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட உள்ளது. திவாகரனிடம் இன்று மாலை  விசாரணை நடைபெறும் என்று தெரிய வந்துள்ளது. சசிகலா குடும்பத்து உறவினர்களும் அடுத்தடுத்து விசாரணைக்கு வர உள்ளனர்.

இந்த நிலையில் திவாகரன் மற்றும் விவேக்கின் சகோதரி கிருஷ்ண பிரியா ஆகியோர் நேரில் ஆஜராகவும் தனித் தனியாக நோட்டீஸ் அனுப்பட்டு உள்ளது.

ஜெயா டி.வி முதன்மை செயல் அதிகாரி விவேக் நாளை  நேரில் ஆஜராக வருமான வரித் துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளது. திவாகரன் திருச்சியிலும், விவேக், கிருஷ்ண பிரியா ஆகியோர் சென்னையிலும் ஆஜராக உத்தரவிடப்பட்டு உள்ளது. 

ஜெயா டிவி பொதுமேலாளர் நடராஜன் சென்னை வருமானவரி அலுவலகத்தில் இன்று ஆஜரானார். ஜெயா டிவி வரவு, செலவு கணக்குகள் குறித்து நடராஜனிடம் வருமானவரித்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். 

நுங்கம்பாக்கம் வருமானவரி அலுவலகத்தில் விவேக்கின் சகோதரி கிருஷ்ணபிரியா தனது கணவர் கார்த்திகேயனுடன்  விசாரணைக்கு ஆஜரனார்.
விவேக்கின் மற்றொரு சகோதரி ஷகிலாவும், அவரது கணவர் ராஜ ராஜசோழனும் வருமான வரித்துறை அலுவலகத்தில்  ஆஜர்  ஆனார்கள்  வருமான வரித்துறை சோதனையில் கிடைத்த ஆவணங்கள் அடிப்படையில் அங்கு அதிகாரிகள் விசாரணை நடத்தியதாக  தகவல் வெளியாகி உள்ளது.

விசாரணைக்குப் பின் கிருஷ்ணபிரியா நிருபர்களிடம் கூறியதாவது:-

என்னுடைய சொத்துக்கணக்குகளை சமர்ப்பிக்க வருமானவரி அலுவலகம் வந்தேன். வருமானவரி அதிகாரிகளின் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளித்துள்ளேன். வருமான வரி சோதனையில் அரசியல் உள்ளதாக நினைக்கவில்லை, இது வழக்கமான பணிதான். விசாரணை இன்னும் முடியவில்லை, மீண்டும் விசாரணைக்கு அழைப்பதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.என் வீட்டில் நடந்த சோதனையில் எந்த ஆவணங்களும் கைப்பற்றப்படவில்லை  என கிருஷ்ணபிரியா கூறினார்.

Next Story