மீனவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவத்தில் மன்னிப்பு கோரியது கடலோர காவல்படை


மீனவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவத்தில் மன்னிப்பு கோரியது  கடலோர காவல்படை
x
தினத்தந்தி 15 Nov 2017 5:31 PM IST (Updated: 15 Nov 2017 7:58 PM IST)
t-max-icont-min-icon

தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவத்தில் கடலோர காவல்படை மன்னிப்பு கேட்டது.

சென்னை,

ராமேசுவரத்தில் இருந்து நேற்று முன்தினம் 400-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் சுமார் 2 ஆயிரம் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.

நடுக்கடலில் மீன்பிடித்து கொண்டிருந்தபோது, இந்திய கடலோர காவல்படைக்கு சொந்தமான ராணி அபாதா-77 என்ற கப்பல் அந்த பகுதியில் ரோந்து வந்தது.

கடலோர காவல்படை கப்பலில் இருந்து 7 வீரர்கள் இறங்கி, ஒரு ரப்பர் படகு மூலம் அந்த பகுதியில் மீன்பிடித்து கொண்டிருந்த மீனவர்களை விரட்டியடித்ததோடு, மரிய ஜெபமாலை என்பவரது படகை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.

அதில் படகில் இருந்த பிச்சை ஆரோக்கியதாஸ் (வயது 37), ஜான்சன் (32) ஆகிய மீனவர்கள் மீது துப்பாக்கி குண்டு உரசிச் சென்றதில் அவர்கள் காயமடைந்தனர். மேலும் படகில் இருந்த குவிட்டோ (38), சாண்ட்ரோ (38), நிசாந்த் (21), ஜாக்சன் (32) ஆகிய மீனவர்களையும், கடலோர காவல் படையினர் தாக்கி விட்டுச் சென்றனர்.

தாக்கப்பட்ட மீனவர்கள் நேற்று காலை ராமேசுவரம் திரும்பினர். அவர்கள் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.

மீன்துறை உதவி இயக்குனர் ஐசக் ஜெயக்குமார், கியூ பிரிவு போலீசார், உளவுப்பிரிவு போலீசார், வருவாய்த்துறையினர் உள்பட போலீசார் ஆஸ்பத்திரிக்கு சென்று காயமடைந்த மீனவர்களிடம் விசாரணை நடத்தினர்.

துப்பாக்கி சூடு நடத்தப்பட்ட படகை அதிகாரிகள் பார்வையிட்டனர். அப்போது படகு எவ்வித சேதமும் அடையவில்லை என்பது தெரியவந்தது.

இந்த சம்பவம் குறித்து மீனவர் பிச்சை மண்டபம் கடலோர போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் இந்திய கடலோர காவல் படையினர் மீது கொலை முயற்சி உள்பட 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில்,  கடலோர காவல்படை அதிகாரிகளுக்கும், மீனவர்களுக்கும் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தை நடைபெற்றது.  தவறுதலாக நடைபெற்ற சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்துக்கொள்கிறோம்.  இதுபோன்ற சம்பவங்கள் இனி நடைபெறாது. துப்பாக்கி சூடு புகார் தொடர்பாக விசாரணை நடத்தப்படும். மீனவர்களுடன் நட்பை ஏற்படுத்த மாதந்தோறும் ஆய்வுக்கூட்டம் நடத்த கடலோர காவல்படை முடிவு செய்துள்ளது.  துப்பாக்கிச்சூட்டை மறுத்திருந்த நிலையில் கடலோர காவல்படை  மன்னிப்பு கோரியது. 

Next Story