எங்கள் குடும்பத்தினர் மீது நடந்த வருமான வரிசோதனை தோல்வியில் முடிந்தது - திவாகரன்


எங்கள் குடும்பத்தினர் மீது நடந்த வருமான வரிசோதனை தோல்வியில் முடிந்தது - திவாகரன்
x
தினத்தந்தி 16 Nov 2017 1:48 PM IST (Updated: 16 Nov 2017 1:48 PM IST)
t-max-icont-min-icon

இந்தியாவிலேயே மிகப்பெரிய வருமான வரிசோதனை எங்கள் குடும்பத்தினர் மீது நடந்தது. ஆனால் அது தோல்வியில் முடிந்து விட்டது என தினகரன் கூறினார்

மயிலாடுதுறை,

மயிலாடுதுறை மாயூரநாதர் சுவாமி கோவிலில் இன்று துலா உற்சவத்தை முன்னிட்டு கடைமுக தீர்த்தவாரி நடைபெறுகிறது.

இதில் கலந்து கொள்வதற்காக சசிகலாவின் தம்பி திவாகரன் நேற்று மயிலாடுதுறை மாயூரநாதர் கோவிலில் தரிசனம் செய்தார்.

அதன்பின்னர் நிருபர்களுக்கு அவர் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மயிலாடுதுறையில் நடைபெறும் துலா உற்சவ விழாவில் காவிரியில் தண்ணீர் விடாமல் உள்ளனர்.

கோவையில் கவர்னர் பன்வாரிலால் அதிகாரிகளுடன் கூட்டம் நடத்தி உள்ளார். இதை அமைச்சர்கள் வரவேற்றுள்ளதை ஏற்றுக்கொள்ள முடியாது. இதை            பார்க்கும் போது ஆர்.கே. நகர் இடைத் தேர்தலில் தமிழிசையை நிறுத்தி முதல்வராக்கும் ஒத்திகை நிகழ்ச்சி போல் தெரிகிறது.

முதல்-அமைச்சர் எடப்பாடியும், மற்றும் ஓ.பன்னீர்செல்வமும் விட்டு கொடுத்து விடுவார்கள் போல் தெரிகிறது. தமிழகத்தின் உரிமைகளை மத்திய அரசிடம் கேட்டு பெற 2 பேருக்கும் திராணி இல்லை.

இந்தியாவிலேயே மிகப்பெரிய வருமான வரிசோதனை எங்கள் குடும்பத்தினர் மீது நடந்தது.  ஆனால் அது தோல்வியில் முடிந்து விட்டது. சுமார் 187 இடங்களில், 400 வாகனங்கள், 1800 அதிகாரிகள் என்று சோதனை நடத்தப்பட்டது. இதில் ஈடுபட்ட அதிகாரிகளுக்கு ஒரு நாள் மட்டுமே அரசாங்கம் சார்பில்  உணவு வழங்கப்பட்டது. மீத நாட்களில் அந்தந்த வீடுகளிலேயே சாப்பாடு வழங்கப்பட்டது.

அகில இந்திய மெடிக்கல் கவுன்சில் தலைவர் வீட்டில் 1500 கோடி பணம், 1 டன் நகைகள் வருமான வரி சோதனையில் சிக்கியது. அதன்பிறகு இதுபற்றி எந்த  தகவலும் இல்லை.

எங்களை மிரட்டி அடிபணிய வைக்கவே இந்த சோதனை நடந்துள்ளது. சமூக வலைதளங்களில் வருவது எல்லாம் பொய். எங்கள் அணியை சேர்ந்த 18 எம்.எல்.ஏ.க்களும் இன்று வரை எங்களிடம் தான் உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

இதையடுத்து நேற்று இரவு திவாகரன், மயிலாடுதுறையில் உள்ள தனியார் விடுதியில் தங்கினார். இன்று காலை 8 மணியளவில் மீண்டும் மாயூரநாதர் சுவாமி கோவிலில் திவாகரன் தரிசனம் செய்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

அதிமுக தற்போதும் எங்களிடம்தான் உள்ளது. சோதனைகள் மூலம் எங்களை பணிய வைக்க முடியாது என கூறினார். சட்டமன்ற உறுப்பினர்கள், எம்.பிக்கள்தான் அதிமுக என நினைத்தால் அது தவறு. தமிழகத்தில் ஆட்சி உள்ள வரை மட்டும்தான் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் எல்லாம் அதிமுகவில் இருப்பார்கள். ஆட்சி முடிந்த பிறகு அவர்கள் பாஜகவில் இணைந்துவிடுவார்கள் என கூறினார்.

Next Story