மின்சார மீட்டர்கள் கொள்முதலில் குளறுபடி மின்சார வாரியம் மீது மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு
குறைந்த விலையில் டெண்டர் கொடுத்த நிறுவனத்திடம் வாங்கவில்லை: 29 லட்சம் மின்சார மீட்டர்கள் கொள்முதலில் குளறுபடி மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னை,
குறைந்த விலையில் டெண்டர் கொடுத்த நிறுவனத்திடம் மின்சார மீட்டர்கள் வாங்கப்படவில்லை என்றும், 29 லட்சம் மின்சார மீட்டர்கள் கொள்முதல் செய்யப்பட்டதில் குளறுபடி நடந்துள்ளதாகவும் மின்சார வாரியம் மீது மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
தி.மு.க. செயல் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
அ.தி.மு.க. ஆட்சியில் தமிழ்நாடு மின்சார உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்திற்கு 29 லட்சத்து 88 ஆயிரம் எலக்ட்ரானிக் மீட்டர்கள் கொள்முதல் செய்வதில் நடைபெற்றுள்ள முறைகேடு அதிர்ச்சியளிப்பதாக உள்ளது.
ஒருமுனை மின்சாரப் பயன்பாட்டினை அளவீடு செய்வதற்காக கொள்முதல் செய்யப்படும் இந்த மீட்டரை வழங்குவதற்கான இந்த டெண்டரில், உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த ‘கேபிட்டல் பவர் சிஸ்டம்ஸ்’ என்ற நிறுவனம் கலந்து கொண்டுள்ளது. 13 நிறுவனங்கள் பங்கேற்ற அந்த டெண்டரில் ஒரு மீட்டரை 453 ரூபாய்க்கு வழங்குவதற்கு தயார் என்று இந்த நிறுவனம் கூறியிருக்கிறது. ஆனால், இந்த குறைந்தபட்ச விலையை நிராகரித்த தமிழ்நாடு மின்சார உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம், 495 ரூபாய்க்கு மின்சார மீட்டரை வழங்க முன்வந்த ‘எச்.பி.எல்’ என்ற நிறுவனத்திற்கு ஒப்பந்தம் வழங்கியுள்ளது.
தமிழ்நாடு மின்சார உற்பத்தி மற்றும் மின் பகிர்மானக் கழகம் ஏற்கனவே ஒரு லட்சம் கோடிக்கு மேல் கடனில் மூழ்கியிருக்கிறது. அ.தி.மு.க. ஆட்சியில் அதிக விலை கொடுத்து மின் கொள்முதல் செய்ததே, இந்த கடன் சுமைக்கு முக்கிய காரணம். அதனைச் சமாளிக்க அப்பாவி மக்களின் தலையில் மின்கட்டண உயர்வைச் சுமத்தியிருப்பது, ஏற்கனவே தாங்க முடியாத துயரத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், 29 லட்சத்திற்கு மேற்பட்ட மின்சார மீட்டர்களை அதிக விலை கொடுத்து வாங்க தமிழ்நாடு மின்சார உற்பத்தி மற்றும் மின் பகிர்மானக் கழகம் டெண்டர் விட்டிருப்பது வியப்பளிக்கிறது.
‘குறைந்த விலைக்கு வழங்க முன்வரும் நிறுவனத்துக்கு ஒப்பந்தம் கொடுக்க வேண்டும்’ என்ற டெண்டர் சட்டத்தின் அடிப்படை நோக்கத்தை மீறும் அளவிற்கு இந்த டெண்டர் விஷயத்தில் அழுத்தம் கொடுத்தது யார்? என்ற கேள்வி எழுகிறது. குறிப்பாக, நஷ்டத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் மின் வாரியத்திற்கு மேலும் ஒரு நஷ்டத்தை ஏற்படுத்தும் விதத்திலும், இந்த அதிக விலையால் நுகர்வோருக்கும் நஷ்டத்தை ஏற்படுத்தும் விதத்திலும், அதிக விலையில் கொள்முதல் செய்ய முன்வந்திருப்பது கண்டனத்திற்குரியது.
இப்படி, மின் வாரியத்தின் நலனையோ, வாரியத்தின் நிதி நிலைமையையோ, நுகர்வோருக்கு ஏற்படும் நஷ்டத்தையோ கண்டுகொள்ளாமல் அதிக விலை கொடுத்து மின்சார மீட்டரை வாங்குவதால் யாருக்கு ஆதாயம் என்ற கேள்வி எழுகிறது. ஏற்கனவே, சூரியஒளி மின்சாரத்திற்கு அதிக விலை, மின் கொள்முதலுக்கு அதிக விலை என்று தத்தளித்துக் கொண்டிருக்கும் மின்வாரியத்தில், இப்போது மின்சார மீட்டர் வாங்குவதிலும் அதிக விலை கொடுப்பதன் மூலம் மின்துறை அமைச்சர் தமிழக நலனுக்காக செயல்படுகிறாரா அல்லது தன் சொந்த நலனுக்காக பாடுபடுகிறாரா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
ஆகவே, 29 லட்சம் மின்சார மீட்டர் கொள்முதலில் நடந்த குளறுபடிகள், அதிக விலைக்கு விற்க முன்வந்த கம்பெனிக்கு டெண்டர் கொடுத்தது போன்றவற்றில் மின்வாரியத்தை கட்டாயப்படுத்தியது யார்?. குறைந்த விலைக்கு மின்சார மீட்டர் கொடுக்க முன்வந்த கம்பெனியை நிராகரிக்க அழுத்தம் கொடுத்தது யார் என்ற விவரங்களை எல்லாம் தமிழ்நாடு மின்சார உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழக தலைவர் உடனடியாக வெளியிட வேண்டும் என்று கேட்டுக்கொள்வதோடு, அ.தி.மு.க. அரசின் இதுபோன்ற முறைகேடுகளுக்கு மின்பகிர்மானக் கழகத்தை பலி கொடுத்து விடக்கூடாது என்றும் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.