2100-ம் ஆண்டுக்குள் கடல் நீர்மட்டம் ஒரு மீட்டர் உயர்ந்தால் சென்னை கடல் மூழ்கும்


2100-ம் ஆண்டுக்குள் கடல் நீர்மட்டம் ஒரு மீட்டர் உயர்ந்தால் சென்னை கடல் மூழ்கும்
x
தினத்தந்தி 17 Nov 2017 4:58 PM IST (Updated: 17 Nov 2017 4:58 PM IST)
t-max-icont-min-icon

2100-ம் ஆண்டுக்குள் கடல் நீர்மட்டம் ஒரு மீட்டர் உயர்ந்தால் சென்னை கடல் மூழ்கும். மொத்தம் 3 ஆயிரத்து 29 சதுர கிலோ மீட்டர் நில பரப்பு கடலால் விழுங்கப்படும்.

சென்னை,

2004-ல் வந்த சுனாமி, 2015-ல் சூழ்ந்த பெரு வெள்ளம், இவையெல்லாம் சென்னை என்னவாகுமோ என்ற பீதியை ஏற்படுத்தியது. உண்மையிலேயே சென்னை அழியப்போகிறது. கடல் கபளீகரம் செய்யப் போகிறது என்று  அதிர்ச்சி தகவல் வெளியாகி இருக்கிறது.

இதுபற்றி கடற்கரை வளமையத்தை சேர்ந்த பூஜா குமார் கூறியதாவது:-

ஆமதாபாத்தை தலைமையிடமாக கொண்டு செயல்படும் இஸ்ரோவின் துணை அமைப்பு ஒரு ஆய்வு நடத்தி 2012-ம் ஆண்டு அந்த அறிக்கையை மத்திய அரசிடம் வழங்கியது. இந்திய கடற்கரையோர மண்டலங்கள் என்ற தலைப்பில் அமைந்துள்ள அந்த ஆய்வு அறிக்கையில் சென்னை நகரை சூழ்ந்துள்ள அபாயம் பற்றி எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கையை அரசு மறைத்து விட்டது.

2100-ம் ஆண்டுக்குள் கடல் நீர்மட்டம் ஒரு மீட்டர் உயர்ந்தால் சென்னை கடலில் மூழ்கும். மொத்தம் 3 ஆயிரத்து 29 சதுர கிலோ மீட்டர் நில பரப்பு கடலால் விழுங்கப்படும். இந்த பகுதிக்குள் இருக்கும் குடியிருப்பு பகுதிகள், கட்டு மானங்கள் அனைத்தும் அழிந்து போகும்.

இதில் 218.54 கி.மீட்டர் மாநில நெடுஞ்சாலைகள், 85.66 சதுர கிலோ மீட்டர் ரெயில்வே கட்டமைப்புகள், 497.65 சதுர கிலோ மீட்டர் விளை நிலங்கள், 826 கிலோ மீட்டர் நிலத்தடி நீர்ப்படுகைகள் கடலுக்குள் மூழ்கி விடும்.

இஸ்ரோவின் இந்த அறிக்கை வெளியிடப்படவில்லை. அதே போல் இந்த அறிக்கை அடிப்படையில் சென்னை எம்.ஐ.டி. நிபுணர்களும் ஒரு ஆய்வு மேற்கொண்டு அரசிடம் அறிக்கை கொடுக்கப்பட்டது. அதையும் இதுவரை வெளியிடவில்லை.

வடசென்னையில் கடற்கரை ஓரமாக இருக்கும் மிகப்பெரிய நிறுவனங்கள் அனைத்துமே இந்த எச்சரிக்கை பகுதியில்தான் அமைந்துள்ளன. இந்த அறிக்கையின்படி சென்னையில் 3.11 சதுர கிலோ மீட்டர் தொழிற்சாலை கட்டமைப்புகள், எண்ணூர் முழுவதும் நீரில் மூழ்கி விடும். வல்லூரில் உள்ள டென்ஜிகோ, என்டெக்வின், எண்ணூரில் உள்ள மின் பகிர்மான நிலையங்கள், காமராஜர் துறைமுகம், எண்ணை உற்பத்தி நிலையங்கள், மீஞ்சூரில் உள்ள கடல் நீரை குடிநீராக்கும் நிலையம், மணலி பெட்ரோ கெமிக்கல் சுத்திகரிப்பு ஆலையின் பெரும்பகுதி கடலால் விழுங்கப்பட்டு விடும்.

தகவல் தொழில்நுட்ப நகரம் முற்றிலும் பாதிக்கும். பள்ளிக்கரணையில் தோன்றியிருக்கும் குடியிருப்புகள், செய்யூர் மின் உற்பத்தி ஆலை, கல்பாக்கம் அணுமின் நிலையம், கடலூரில் உள்ள ஐ.எல்., எப்.சி. ஆலைகள், அமையவிருக்கும் நாகார் ஜுனா பெட்ரோலிய சுத்தி கரிப்பு ஆலை, 
தூத்துக்குடியின் தொழிற்சாலைகள், உப்பு ஆலைகள், கூடங்குளம் அணுமின் நிலையம் ஆகியவை நீரில் மூழ்கி விட வாய்ப்பு உள்ளது.

கண் எதிரில் ஆபத்து தெரிகிறது. இனி அதில் இருந்து மக்களை பாதுகாப்பதற்கான திட்டங்கள் உருவாக்கப்பட வேண்டியது அவசியம். கடற்கரையோர மண்டல மேலாண்மை திட்டத்தை எதிர்நோக்கி   இருக்கும் ஆபத்தை உணர்ந்து செயல் படுத்த வேண்டும்.

கடற்கரை ஓரங்களில் பெருகி வரும்  நெரிசலை குறைக்க வேண்டும். உள் பகுதியை நோக்கி நகரத்தை விரிவு படுத்த வேண்டும். கடல் சீற்றங்களில் இருந்து பாதுகாக்க கூடிய இயற்கை பாதுகாப்பு கட்டமைப்புகளை மேம்படுத்தி ஆக வேண்டும்.

கடந்த ஆண்டு சென்னை ஐ.ஐ.டி. சார்பில் நடத்தப்பட்ட ஆய்வு அறிக்கை அரசிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கையையும் அரசு மறைத்து விட்டது.
இந்த அறிக்கையில் 2050-ம் ஆண்டிற்குள் சென்னையில் 10 லட்சம் மக்கள் பாதிக்கும் அபாயம் இருப்பதாக சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

அப்படியிருந்தும் கட்டு மானங்கள், தொழில் நிறு வனங்கள் கடற்கரையை ஒட்டி இருக்கும் எச்சரிக்கை பகுதியிலேயே அமைக்கப்படுகிறது. இது மிகப்பெரிய விளைவுகளுக்கு வழி வகுத்து விடும். இது இந்திய அளவில் ஏற்படக்கூடிய சர்வதேச பிரச்சினைகளில் ஒன்று.

எனவே, மீனவர்களின் வாழ்வாதாரம், உள்ளூர் மக்களின் வாழ்க்கையை பாதுகாக்கும் வகையில் கடற்கரையில் சுற்று சூழலை பாதுகாத்தல், இயற்கை சுழலை பார்த்தல்,  புவி வெப்பமாதல், கடல் மட்ட உயர்வு என அனைத்தையும் கருத்தில் கொண்டு பாதுகாப்பு திட்டங்களை வகுக்க வேண்டும் என்று அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளோம் இவ்வாறு அவர் கூறினார்.

Next Story