ஜெயலலிதா இல்லமான போயஸ்கார்டனில் சோதனை நடத்தப்பட்டதில் சதி இருக்கிறது : டிடிவி தினகரன் பேட்டி


ஜெயலலிதா இல்லமான போயஸ்கார்டனில் சோதனை நடத்தப்பட்டதில் சதி இருக்கிறது : டிடிவி தினகரன் பேட்டி
x
தினத்தந்தி 18 Nov 2017 10:06 AM IST (Updated: 18 Nov 2017 10:06 AM IST)
t-max-icont-min-icon

ஜெயலலிதா இல்லமான போயஸ்கார்டனில் சோதனை நடத்தப்பட்டதில் சதி இருக்கிறது என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி,

போயஸ் கார்டனில் உள்ள மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா வாழ்ந்து வந்த வேதா இல்லத்தில் வருமான வரித்துறையினர் நேற்று திடீரென சோதனை நடத்தினர். வருமான வரித்துறை கூடுதல் இயக்குனர் தலைமையில் 10-க்கு மேற்பட்ட அதிகாரிகள் 4 மணிநேரத்திற்கும் மேலாக  சோதனையில் ஈடுபட்டனர்.  நள்ளிரவு இந்த சோதனை முடிவுக்கு வந்தது.  

இந்த வருமான வரித்துறை சோதனை குறித்து கடும் விமர்சனம் செய்துள்ள டிடிவி தினகரன், இந்த சோதனைக்கு பின்னால் நிச்சயமாக அரசியல் சதி உள்ளது என்று தெரிவித்துள்ளார். டிடிவி தினகரன் இன்று காலை அளித்த பேட்டி வருமாறு:- “ போயஸ் இல்லத்தில் உள்ள சசிகலாவின் அறையில் வருமான வரி சோதனை நடந்தது. சந்தேகத்தின் பேரில் சோதனை நடந்துள்ளது, சோதனை நடைபெறுவதால் தவறு நடந்துள்ளது என கூறிவிட முடியாது. போயஸ் இல்லத்தில் இருந்து பென் டிரைவ், லேப்டாப் மற்றும் சில கடிதங்களை வருமான வரித்துறை அதிகாரிகள் எடுத்து சென்றுள்ளனர்.

எப்படியாவது எங்களை அரசியலில் இல்லாமல் செய்ய வேண்டும் என்பதற்காகவே சோதனை. எந்த அச்சுறுத்தலுக்கும், நடவடிக்கைக்கும் பயப்பட மாட்டேன்; சோதனை நடப்பதால் குற்றவாளி என்று கூறிவிட முடியாது. உண்மையாக சோதனை நடத்தியிருக்க வேண்டும் என்றால் முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் வீடுகளில் நடத்தியிருக்க வேண்டும். பதவியையும், தங்களையும் காப்பாற்றிக்கொள்ள சிலர் முயற்சிக்கின்றனர்” இவ்வாறு அவர் தெரிவித்தார்.


Next Story