இலங்கையில் இருந்து ராமேசுவரத்திற்கு மீன்பிடி படகில் ரூ.2 கோடி தங்கக்கட்டிகள் கடத்தல்


இலங்கையில் இருந்து ராமேசுவரத்திற்கு மீன்பிடி படகில் ரூ.2 கோடி தங்கக்கட்டிகள் கடத்தல்
x
தினத்தந்தி 20 Nov 2017 10:15 PM GMT (Updated: 20 Nov 2017 9:19 PM GMT)

இலங்கையில் இருந்து ராமேசுவரத்திற்கு மீன்பிடி படகில் ரூ.2 கோடி மதிப்புள்ள தங்கக்கட்டிகள் கடத்திய ஒருவர் பிடிபட்டார். 3 பேர் தப்பி ஓடிவிட்டனர்.

ராமேசுவரம்,

இலங்கையில் இருந்து ராமேசுவரம் மண்டபம் பகுதிக்கு தங்கக்கட்டிகள் கடத்தி வருவதாக கியூபிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் மண்டபம் வடக்கு கடற்கரை பகுதியில் மறைந்து இருந்து கண்காணித்து வந்தனர். அப்போது ஒரு மீன்பிடி படகில் வந்த 2 பேர், கடற்கரையில் மோட்டார் சைக்கிளில் நின்ற 2 பேருடன் செல்ல முயன்றனர்.

இதனையடுத்து 4 பேரையும் பிடிக்க முயன்றபோது அவர்கள் தப்பி ஓடினார்கள். கீழக்கரை கிழக்கு தெருவை சேர்ந்த நசீர் கமால்பாட்சா (வயது 37) என்பவரை மட்டும் போலீசார் பிடித்தனர். மற்ற 3 பேரும் தப்பி ஓடிவிட்டனர்.

பிடிபட்டவரிடம் சோதனை செய்தபோது அவரது இடுப்பில் கட்டப்பட்டு இருந்த துணி பெல்ட்டில் 6 கிலோ 856 கிராம் எடையுள்ள 69 தங்க கட்டிகள் மறைத்து வைக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

நசீர் கமால்பாட்சாவை கைது செய்த போலீசார் அவரிடமிருந்து தங்கக்கட்டிகள், ஜி.பி.எஸ். கருவி, ஆதார் கார்டு உள்ளிட்டவற்றையும் பறிமுதல் செய்தனர். கடந்த 19-ந் தேதி அபுதாகிர் என்பவருடன் கச்சத்தீவு அருகே நடுக்கடலில் மீன்பிடிப்பது போல் படகில் காத்திருந்த போது இலங்கையில் இருந்து பிளாஸ்டிக் படகில் வந்த 2 பேர் எங்களிடம் தங்கக் கட்டிகளை கொடுத்தனர்.

அதனை மண்டபம் கடற்கரையில் நின்ற கீழக்கரையை சேர்ந்த அமீர், அன்வர் ஆகியோரிடம் ஒப்படைக்க இருந்தபோது பிடிபட்டேன் என போலீசாரிடம் நசீர் கமால்பாட்சா தெரிவித்தார்.

இதுபற்றி கியூ பிரிவு போலீசார் கூறியதாவது:-

நசீரும், அபுதாகிரும் இதுபோல் 5 முறைக்கு மேல் சுமார் 25 கிலோவுக்கு மேல் தங்கக் கட்டிகளை கடத்தி வந்துள்ளனர். தப்பி ஓடிய அன்வர், அமீர், அபுதாகீர் ஆகியோரை தேடி வருகிறோம். பறிமுதல் செய்யப்பட்ட தங்கக் கட்டிகளின் மதிப்பு ரூ.2 கோடி இருக்கும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள். 

Next Story