3 ஆண்டுகளில் 66 போட்டித்தேர்வுகளில் தேர்வான 30 ஆயிரம் பேரில் 11 பேர் மட்டுமே வெளிமாநிலத்தவர்
கடந்த 3 ஆண்டுகளில் நடைபெற்ற 66 போட்டித்தேர்வுகளில் தேர்வான 30,098 பேரில் 11 பேர் மட்டுமே வெளிமாநிலத்தவர் என்று அரசு பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.
சென்னை,
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய செயலாளர் விஜயகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
உண்மைக்கு புறம்பானவை
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் ஒருங்கிணைந்த குடிமைப்பணிகளுக்கான குரூப்-4ல் அடங்கிய பதவிகளுக்கு பிற மாநிலத்தவரும் பங்கேற்கும் வகையில் அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது என்றும், பணியில் சேர்ந்த 2 வருடங்களில் தமிழ் மொழித்தேர்வில் தேர்ச்சி பெறவேண்டும் என்றும் விதிகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது என்றும், தமிழ்நாட்டை சார்ந்தவர்களுக்கே அரசுப்பணிகளில் முன்னுரிமை வழங்க வேண்டும் என்றும் சில நாளிதழ்கள் மற்றும் தொலைக்காட்சிகளில் செய்திகள் வெளிவந்துள்ளன.
இத்தகவல் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது மட்டுமின்றி தவறானதுமாகும். வெளிமாநிலத்தவர் விண்ணப்பிக்கும் விதியானது, தமிழ்நாடு மாநில மற்றும் சார்நிலைப் பணிகளுக்கான சிறப்பு விதிகளில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு 1955-ம் ஆண்டிலிருந்து அமலில் உள்ளது.
11 பேர் மட்டுமே
வெளிமாநில விண்ணப்பதாரர்கள் அனைவரும் பொதுப்பிரிவினராகவே கருதப்படுவதால் தமிழக மாநிலத்தில் உள்ளோருக்கான இடஒதுக்கீட்டில் எந்தவித பாதிப்பும் மாற்றமும் இல்லை. இவ்விதிகளில் குறிப்பிடப்பட்டுள்ளவற்றையே தேர்வாணையம் ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் குரூப்-4ல் அடங்கியுள்ள பதவிகளுக்கான கடந்த 14-ந்தேதி வெளியிட்ட அறிவிக்கையிலும் கடைபிடித்துள்ளது. தற்போது புதிதாக ஏதும் தேர்வாணையத்தால் சேர்க்கப்படவில்லை. பிற மாநிலங்களிலும் இவ்விதிமுறையே பின்பற்றப்பட்டு வருகிறது.
கடந்த 3 ஆண்டுகளில் 66 போட்டித்தேர்வுகள் தேர்வாணையத்தால் நடத்தப்பட்டு 30 ஆயிரத்து 98 விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட்டு பணிநியமனம் பெற்றுள்ளார்கள். இவற்றுள் 11 நபர்கள் மட்டுமே பிறமாநிலத்தைச் சார்ந்தவர்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story