பா.ஜனதா கூட்டணி அமைப்பதற்காக எடப்பாடி பழனிசாமி அணிக்கு இரட்டை இலை சின்னம் வழங்கப்பட்டு உள்ளது திருநாவுக்கரசர் பேட்டி
அ.தி.மு.க.வுடன், பா.ஜனதா கூட்டணி அமைப்பதற்காக எடப்பாடி பழனிசாமி அணிக்கு இரட்டை இலை சின்னம் வழங்கப்பட்டு உள்ளது என்று திருநாவுக்கரசர் கூறினார்.
தூத்துக்குடி
நெல்லை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் நேற்று விமானம் மூலம் தூத்துக்குடிக்கு வந்தார். அங்கு அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–
இரட்டை இலை சம்பந்தமான வழக்கு எப்போது தேர்தல் ஆணையத்துக்கு சென்றதோ அப்போது இருந்து நான் கூறி வருவது, அ.தி.மு.க.வை உடைத்ததே பா.ஜனதா கட்சியும், மத்திய அரசும்தான். கட்சியை உடைத்ததும், அதற்கு பிறகு எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வத்தை இணைத்ததும் அவர்கள் தான். அவர்களுக்குதான் இரட்டை இலையை கொடுப்பார்கள் என்று கூறி வந்தேன்.
நான் கூறியபடியே எடப்பாடி பழனிசாமி அணிக்கு இரட்டை இலை சின்னம் கொடுக்கப்பட்டு உள்ளது. இது மட்டுமல்ல, எதிர்காலத்தில் உள்ளாட்சி தேர்தல், பாராளுமன்ற தேர்தலிலும் இந்த அணியுடன்தான் கூட்டணி அமைக்க உள்ளனர். இதில் உடன்பாடு ஏற்பட்ட பிறகுதான் அந்த அணிக்கு இரட்டை இலை தரப்பட்டு உள்ளது.
கந்து வட்டி தடை சட்டம் உள்ளது. கந்து வட்டி பிரச்சினை வரும்போது, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்தால் தற்கொலை வரை செல்லும் நிர்பந்தம் ஏற்படாது. தற்கொலைக்கு தூண்டுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தற்போது நடத்தபட்ட வருமான வரி சோதனையை தவறு என்று கூறவில்லை. நாங்களும் ஜெயலலிதா அறையில் சோதனை செய்யுங்கள் என்றுதான் கூறுகிறோம். அவரும் தண்டிக்கப்பட்ட குற்றவாளிதான். மரணம் அடைந்து விட்டதால் அவர் தப்பி உள்ளார். கோடநாட்டிலும் சோதனை நடத்த வேண்டும். ஜெயலலிதா அமைச்சரவையில் இருந்த அமைச்சர்கள் வீட்டிலும் சோதனை நடத்த வேண்டும். ஒருபுறம் மட்டும் சோதனை என்பதுதான் பிரச்சினை.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story