‘இயக்கத்தை உடைக்க நினைத்தவர்களுக்கு சம்மட்டி அடி’ எடப்பாடி பழனிசாமி பேட்டி


‘இயக்கத்தை உடைக்க நினைத்தவர்களுக்கு சம்மட்டி அடி’ எடப்பாடி பழனிசாமி பேட்டி
x
தினத்தந்தி 24 Nov 2017 5:15 AM IST (Updated: 24 Nov 2017 12:53 AM IST)
t-max-icont-min-icon

இயக்கத்தை உடைக்க நினைத்தவர்களுக்கு சம்மட்டி அடி கிடைத்து இருக்கிறது என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

சென்னை,

தேர்தல் ஆணையம் இரட்டை இலை சின்னம், எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் அணிக்கே சொந்தம் என்று அறிவித்த நிலையில், நேற்று மாலை இருவரும் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமைக்கழகத்துக்கு வந்தனர்.

பின்னர், உள்ளே சென்ற அவர்கள் அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கினார்கள். அதைத்தொடர்ந்து அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோரின் ஒப்புதலுடன் அவர்கள் கையெழுத்திட்ட அறிக்கை ஒன்றை அமைச்சர் ஜெயக்குமார் வாசித்தார்.

அதன்பின்னர் எடப்பாடி பழனிசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

தர்மம், நீதி இன்று நிலைநாட்டப்பட்டு இருக்கிறது. தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பு ஒட்டுமொத்த தமிழக மக்களுக்கே கிடைத்த வெற்றியாக நாங்கள் கருதுகிறோம்.

எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் நல்ல திட்டங்களை தீட்டி நல்லாட்சி புரிந்தார்கள். அவர்கள் விட்டுச்சென்ற பணியை தொடர்ந்து செய்து வருகிறோம். இரண்டு தலைவர்களும் தொண்டர்களை கண் இமை போல் காத்து வந்தார்கள்.

அதை நாங்களும் மேற்கொள்வோம். சிலர் இந்த இயக்கத்தை உடைத்துவிடலாம், ஆட்சியை கவிழ்த்துவிடலாம் என்று நினைத்தார்கள். அவர்களுக்கு இன்று சம்மட்டி அடி கிடைத்து இருக்கிறது. ஒட்டுமொத்த அ.தி.மு.க. தொண்டர்களும், நிர்வாகிகளும் மகிழ்ச்சியோடு இருக்கிறார்கள்.

எதிர்க்கட்சிகள், ஆட்சியை கலைக்க நினைத்தவர்களுடன் சேர்ந்து நடத்திய கூட்டு சதிக்கெல்லாம் ஆண்டவன் நல்ல தீர்ப்பு வழங்கி இருக்கிறார். தர்மம், நீதி வெல்லும் என்பதை தேர்தல் ஆணையம் நிரூபித்து இருக்கிறது. தேர்தல் ஆணையம் தெளிவாக சொல்லிவிட்டது. 5.12.2016 வரை யார்? யாரெல்லாம் நிர்வாகிகளாக இருந்தார்களோ? அவர்கள் தான் தகுதியானவர்கள். 5.12.2016 வரை டி.டி.வி.தினகரன் அ.தி.மு.க. உறுப்பினர் கூட கிடையாது.

இவ்வாறு அவர் கூறினார்.

இதனைத்தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், கட்சி அவைத்தலைவர் இ.மதுசூதனன் மற்றும் அமைச்சர்கள் மெரினாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

அதனைத்தொடர்ந்து எம்.ஜி.ஆர். மற்றும் அண்ணா நினைவிடங்களிலும் மரியாதை செலுத்தினர். இதனையடுத்து அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

Next Story