‘சந்திரயான்-2’ மார்ச் மாதம் விண்ணில் செலுத்த திட்டம் இஸ்ரோ விஞ்ஞானிகள் தகவல்


‘சந்திரயான்-2’ மார்ச் மாதம் விண்ணில் செலுத்த திட்டம் இஸ்ரோ விஞ்ஞானிகள் தகவல்
x
தினத்தந்தி 24 Nov 2017 1:35 AM IST (Updated: 24 Nov 2017 1:35 AM IST)
t-max-icont-min-icon

‘சந்திரயான்-2’, அடுத்த ஆண்டு (2018) மார்ச் மாதம் விண்ணில் செலுத்த திட்டமிடப்பட்டு உள்ளதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

சென்னை,

சந்திரனின் மேற்பரப்பில் உள்ள கனிம மற்றும் அடிப்படை ஆய்வுக்காக ரூ.450 கோடி மதிப்பில் வடிவமைக்கப்பட்ட ‘சந்திரயான்-2’, அடுத்த ஆண்டு (2018) மார்ச் மாதம் விண்ணில் செலுத்த திட்டமிடப்பட்டு உள்ளதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

சந்திரனின் மேற்பரப்பில் உள்ள கனிம மற்றும் அடிப்படை ஆய்வுக்காக ‘சந்திரயான்-2’ என்ற செயற்கைகோள் தயாரிக்கப்பட்டு உள்ளது. 1,380 கிலோ எடை கொண்ட ‘சந்திரயான்-1’ செயற்கைகோள் பி.எஸ்.எல்.வி., ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட்டது. தொடர்ந்து அடுத்த ஆண்டு (2018) மார்ச் மாதம் 2,650 கிலோ எடை கொண்ட ‘சந்திரயான்-2’ செயற்கைகோளை அதிக எடையை தாங்கி செல்லும் ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தும் பணியில் இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

சந்திரனின் மேற்பரப்புக்கு மேலே 100 கிலோ மீட்டர் உயரத்தில் ஒரு சுற்றுப்பாதை அமைக்கப்படும். அதில் இருந்து பல்வேறு சவால்களை சமாளித்துவிட்டு, சந்திரனின் மென்மையான பகுதியில் தரையிறக்க முயற்சிக்கப்படும். அவ்வாறு வெற்றிகரமாக தரையிறக்கப்பட்ட உடன் 6 சக்கரங்களை கொண்ட ரோவர் விண்கலம் நிலவின் மேற்பரப்பில் தனது ஆராய்ச்சியை தொடங்கும். இந்த திட்டத்தின் மொத்த செலவு சுமார் ரூ.450 கோடியாகும்.

புவி கண்காணிப்பு, செயற்கைகோள் தொடர்பு, பேரழிவு மேலாண்மை, செயற்கைகோள் வழிசெலுத்தல், காலநிலை மாற்றம் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக இஸ்ரோ செயற்கைகோள்களை விண்ணில் செலுத்தி வருகிறது. அந்தவகையில் இஸ்ரோ நிறுவனத்துக்கு அடுத்த 4 ஆண்டுகளுக்கு விண்ணில் செலுத்த 75 புதிய செயற்கைகோள்கள் தேவைப்படுகிறது.

நானோ வகை செயற்கைகோள்களை அதிகம் தயாரித்து விண்ணுக்கு செலுத்தும் திறன் கொண்டிருக்கிறோம். இதனால் பெரிய செயற்கைகோள்கள் அளிக்கும் பலனை சிறிய வகை நானோ வகை செயற்கைகோள்களும் அளிப்பதால் பெரிய செயற்கைகோள்களின் தேவை குறைக்கப்படுகிறது.

மேற்கண்ட தகவலை இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

Next Story