செங்குன்றம் அருகே பாலத்தில் இருந்து கார் விழுந்து கணவன்-மனைவி, மகள் பலி
செங்குன்றம் அருகே பாலத்தில் இருந்து விழுந்து கார் மழை நீர் குட்டையில் மூழ்கியதால் கணவன் மனைவி, மகள் பலியானார்கள்.
பொன்னேரி,
காஞ்சீபுரம் அருகே உள்ள மணிமங்கலத்தைச் சேர்ந்தவர் பழனி (வயது65). இவரது மனைவி நவநீதம் (55). இவர்களது மகள் பவித்ரா (26). இவரது கணவர் அய்யப்பன். காங்கிரஸ் கட்சியில் காஞ்சீபுரம் மாவட்ட எஸ்.சி. எஸ்.டி. பிரிவு தலைவராக உள்ளார்.
நேற்று மாலை மீஞ்சூரில் இவர்களது உறவினர் திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொள்வதற்காக பழனி, நவநீதம், பவித்ரா, அய்யப்பன் ஆகியோர் காரில் சென்றனர். காரை டிரைவர் கந்தவேல் ஓட்டினார்.
நிச்சயதார்த்த நிகழ்ச்சி முடிந்து இரவு அனைவரும் காரில் திரும்பி வந்து கொண்டு இருந்தனர். இரவு 9 மணியளவில் மீஞ்சூர்-வண்டலூர் வெளிவட்ட சாலையில் கார் வந்தது.
செங்குன்றம் வட்டார போக்குவரத்து அலுவலகம் அருகே மேம்பாலம் கட்டுமான பணி முழுவதும் முடிவடையாமல் உள்ளது. பாதை மாறி வந்த கார் முடிவடையாத பாலத்தில் இருந்து தலைகுப்புற கீழே விழுந்தது. சுமார் 30 அடி உயரத்தில் இருந்து விழுந்ததால் கார் முழுவதும் நொறுங்கியது.
மேலும் கார் விழுந்த இடத்தில் மேம்பால பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் குட்டைபோல் மழை நீர் தேங்கி இருந்தது. இதில் கார் பாதி அளவு தண்ணீரில் மூழ்கியது.
கார் விழுந்ததில் காயம் அடைந்ததாலும், தண்ணீரில் மூழ்கியதாலும் அதில் இருந்த பழனி, அவரது மனைவி நவநீதம், அவர்களது மகள் பவித்ரா ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.காரில் சிக்கி இருந்த அய்யப்பனும், டிரைவர் கநதவேலும் உடைந்த கண்ணாடி வழியாக தப்பி வெளியே வந்தனர்.
அந்த நேரத்தில் பின்னால் மற்றொரு காரில் பழனியின் உறவினர்கள் வந்து கொண்டு இருந்தனர். பாலம் முடிவடையாமல் இருப்பதை கண்டு காரை அவர்கள் நிறுத்தி விட்டனர். இதனால் அவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
பாலத்தில் இருந்து கார் விழுந்ததில் பழனி உள்பட 3 பேர் பலியானதை கண்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உயிருக்கு போராடிய அய்யப்பன், கந்தவேலை அவர்கள் மீட்டு சென்னை யில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதுகுறித்து சோழவரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story