இரட்டை இலை சின்னம் வழங்கப்பட்டதில் பா.ஜனதாவுக்கு எந்த சம்பந்தமும் இல்லை மத்திய இணை மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி
இரட்டை இலை சின்னம் வழங்கப்பட்டதில் பாரதீய ஜனதாவுக்கு எந்த சம்பந்தமும் இல்லை என்று மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.
தூத்துக்குடி
தூத்துக்குடி விமான நிலையத்தில் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது;–
சென்னை ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் பா.ஜனதா போட்டியிடுவது குறித்து கட்சி தலைமை முடிவு செய்யும். இரட்டை இலை சின்னம் முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு வழங்கப்பட்டு உள்ளது. நீண்ட நாள் போராடி சின்னத்தை வாங்கி உள்ளனர். இதில் விசேஷமாக ஒன்றும் இல்லை.
முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வத்துக்கு இரட்டை இலையை பெற்றுக் கொடுப்பதில் பா.ஜனதா பின்னணியில் இருந்து செயல்பட்டு இருப்பதாக தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கூறி இருக்கிறார். அப்படி கூறுவதற்குதான் காங்கிரஸ் இருக்கிறது. அவர்கள் ஆட்சியில் செய்த விஷயங்களை தற்போது கூறி வருகிறார்கள். இரட்டை இலை சின்னம் வழங்கப்பட்டதில் பா.ஜனதாவுக்கு எந்த சம்பந்தமும் இல்லை. இது தேர்தல் ஆணையத்தின் முடிவு.
தி.மு.க. தலைவர் கலைஞரை மரியாதை நிமித்தமாக பிரதமர் மோடி பார்த்ததால் காங்கிரசார் பயத்துடன் உள்ளனர். ஒட்டுன்னி போன்று பல கட்சிகள் தி.மு.க.வுடன் ஒட்டிக் கொண்டு இருக்கிறார்கள். அவர்களுக்கு ஆபத்து வருமோ என்ற அச்சத்தில் பேசுகிறார்கள்.
இரட்டை இலை சின்னம் பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள். கழகங்கள் இல்லாத தமிழகம் உருவாகும் வாய்ப்பு உள்ளது என்று நம்புகிறேன். எங்கள் இறுதி இலக்கு அது. அதற்கு என்ன செய்ய வேண்டுமோ, அதனை செய்வோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story