மதுரை முப்பெரும் விழா எடப்பாடி பழனிசாமி கொடியேற்றினார் ஓ.பன்னீர்செல்வம் திட்டமிட்டே புறக்கணிப்பா?


மதுரை முப்பெரும் விழா எடப்பாடி பழனிசாமி கொடியேற்றினார் ஓ.பன்னீர்செல்வம்  திட்டமிட்டே புறக்கணிப்பா?
x
தினத்தந்தி 25 Nov 2017 12:51 PM IST (Updated: 25 Nov 2017 12:51 PM IST)
t-max-icont-min-icon

மதுரை முப்பெரும் விழா எடப்பாடி பழனிசாமி கொடியேற்றினார். இந்த நிகழ்ச்சியில் ஓ.பன்னீர்செல்வம் திட்டமிட்டே புறக்கணிக்கபட்டாதாக அவரது ஆதரவாளர்கள் குற்றம் சாட்டியுள்ளார்கள்.

மதுரை, 

முதலமைச்சர் பழனிசாமி மற்றும் டிடிவி தரப்பு இரட்டை இலை சின்னத்திற்கு உரிமை கோரிய நிலையில், முதலமைச்சர் பழனிசாமி அணிக்கே இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியது. 

இன்று மதுரை அருகே உள்ள தோப்பூரில் 100 அடி உயர கம்பத்தில் அ.தி.மு.க. கொடியை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை ஏற்றி 
வைத்தார். திருப்பரங்குன்றம் தொகுதி எம்.எல்.ஏ. ஏ.கே. போஸ் ஏற்பாடு செய்து இருந்தார்.

இந்த விழாவுக்கு ஓ.பன்னீர் செல்வம்  மற்றும் தலைவர்களுக்கு  அழைப்பு விடுக்கப்படவில்லை என ஓபிஎஸ் ஆதரவாளர் ஆஸ்பயர் சுவாமிநாதன் அதிருப்தி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக முகநூலில் பதிவிட்டுள்ள அவர், " இரட்டை இலை மீட்பு மாபெரும் கொண்டாட்டமாம். முப்பெரும் விழாவாம். கட்சி கொடி ஏற்றுவார்களாம். யாருக்கும் அழைப்பு இல்லை. தகவலும் இல்லை. தலைவர்கள் உட்பட. மனங்கள் உருண்டுகொண்டுதான் இருக்கும் போல" என கூறியுள்ளார். இது இரட்டை இலை சின்னம் கிடைத்திருந்தாலும் கூட அதிமுகவில் ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் தரப்பு இடையே மனக்கசப்பு இருப்பதை காட்டுவதாக உள்ளது.

அதிமுகவில் இரு அணிகளும் இணைந்து 3 மாதங்கள் ஓடிவிட்டாலும் இன்னும் மனங்கள் இணையவில்லை என ஓபிஎஸ் ஆதரவாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மைத்ரேயன் ஏற்கனவே கருத்து தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து தந்தி டிவிக்கு  அஸ்பயர் சுவாமிநாதன் கூறியதாவது:-

15 நாட்களுக்கு முன்னரே திட்டமிடப்பட்டு தான் விழா நடைபெற்றிருக்கும்; விழாவிற்கான கம்பமோ, கல்வெட்டோ ஒரே இரவில் தயார் செய்ய முடியாது.
ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வத்தை திட்டமிட்டே புறக்கணித்துள்ளனர். ஒருங்கிணைப்பாளருக்கு தெரியாமல் கட்சி விழாவை எப்படி நடத்தலாம்?  என கூறினார். 

இது குறித்து  முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் தந்தி டிவிக்கு அளித்த பேட்டியில் -  தோப்பூர் முப்பெரும் விழா திட்டமிடாமல் நடைபெற்றது. முதலமைச்சரே எதிர்பாராத வகையில் தான் கொடியேற்றி வைத்தார் என கூறினார்.

Next Story