மாணவிகள் தற்கொலை பள்ளி தலைமை ஆசிரியை பணியிடை நீக்கம்


மாணவிகள்  தற்கொலை  பள்ளி தலைமை ஆசிரியை பணியிடை நீக்கம்
x
தினத்தந்தி 25 Nov 2017 8:42 AM GMT (Updated: 25 Nov 2017 8:42 AM GMT)

பனப்பாக்கம் அரசு பள்ளி தலைமை ஆசிரியை ராமாபாய் மற்றும் வகுப்பு ஆசிரியை மீனாட்சி ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர்.


வேலூர் மாவட்டம் பனப்பாக்கத்தில் உள்ள காஞ்சீபுரம் ரோடு தெருவை சேர்ந்தவர் ரவி கூலித்தொழிலாளி. இவரது மகள் சங்கரி (வயது 16). அதே பகுதியை சேர்ந்தவர் பாலு. இவரது மகள் மனிஷா (16), பனப்பாக்கம் அண்ணாநகரை சேர்ந்த குமார் மகள் ரேவதி (16), அதே பகுதியை சேர்ந்த தர்மலிங்கம் என்பவரின் மகள் தீபா (16).

சங்கரி உள்ளிட்ட 4 மாணவிகளும் பனப்பாக்கம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்–1 படித்து வந்தனர். இவர்கள் 4 பேரும் சரியாக படிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் பள்ளியின் தலைமை ஆசிரியை ரமாமணி மற்றும் ஆசிரியர் ஆசிரியைகள் 4 மாணவிகளையும் நேற்று முன்தினம் வகுப்பில் கண்டித்ததாக கூறப்படுகிறது. மேலும் நாளை (அதாவது நேற்று) பள்ளிக்கு வரும்போது பெற்றோரையும் அழைத்து வர வேண்டும் என்று கூறியுள்ளனர். இதனால் 4 மாணவிகளும் பயந்துள்ளனர்.

 4 மாணவிகளும் நேற்று காலை 8 மணிக்கு வழக்கம்போல் பள்ளிக்கு சைக்கிளில் வந்துள்ளனர். தாங்கள் கொண்டு வந்த புத்தகப்பையை பள்ளியில் வைத்த அவர்கள் பெற்றோரை அழைத்து வராததால் தலைமை ஆசிரியை மற்றும் ஆசிரியர்கள் திட்டுவார்களோ என்று பயந்து பள்ளியை விட்டு வெளியே சைக்கிளில் சென்றனர்.

அவர்கள் 4 பேரும் பனப்பாக்கம் அடுத்த மேலபுலம்புதூர் அருகே நங்கமங்கலம் கிராமத்தில் உள்ள விவசாய நிலத்திற்கு சென்றனர். அங்குள்ள கிணற்றின் அருகே தங்களது சைக்கிள் மற்றும் காலணிகளை வைத்து விட்டு அமர்ந்து பேசினார்கள். இதையடுத்து அவர்கள் தற்கொலை செய்ய முடிவு செய்தனர். அதன்படி 4 பேரும் கிணற்றில் குதித்தனர். இதனால் தண்ணீரில் மூழ்கினர்.

 நங்கமங்கலம் கிராமத்தில் உள்ள கிணற்றின் அருகே மாணவிகள் 4 பேரின் சைக்கிள்கள் மற்றும் காலணிகள் இருப்பதை பார்த்த அந்த கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் மாணவிகளின் பெற்றோர் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியை மற்றும் ஆசிரியர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.

நடந்த விபரீதம் அறியாமல் என்னமோ.. ஏதோ என்ற பதறிய பெற்றோர் மற்றும் உறவினர்கள், ஆசிரியர்கள் அனைவரும் நங்கமங்கலம் கிராமத்தில் உள்ள கிணற்றுக்கு சென்றனர். அங்கு மாணவிகளின் 4 சைக்கிள்களையும், 3 மாணவிகளின் காலணிகளையும் பார்த்து பெற்றோர் கதறி அழுதனர்

 மாணவிகள் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று கருதிய போலீசார் அரக்கோணம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த வீரர்கள் ஒன்றன் பின் ஒன்றாக 4 மாணவிகளின் உடல்கள் மீட்ட்டனர்

 தலைமை ஆசிரியை திட்டியதால் தான் மாணவிகள் தற்கொலை செய்து கொண்டிருப்பது தெரிய வந்தது.  இந்நிலையில்,  பனப்பாக்கம் அரசு பள்ளி தலைமை ஆசிரியை ராமாபாய் மற்றும் வகுப்பு ஆசிரியை மீனாட்சி ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர்.

Next Story