தமிழகத்தில் புதிதாக மணல் குவாரிகளை திறக்கக் கூடாது தலைமைச் செயலாளருக்கு, டாக்டர் அன்புமணி ராமதாஸ் கடிதம்


தமிழகத்தில் புதிதாக மணல் குவாரிகளை திறக்கக் கூடாது தலைமைச் செயலாளருக்கு, டாக்டர் அன்புமணி ராமதாஸ் கடிதம்
x
தினத்தந்தி 25 Nov 2017 7:40 PM GMT (Updated: 25 Nov 2017 7:39 PM GMT)

தமிழகத்தில் புதிய மணல் குவாரிகள் திறப்பதை அரசு கைவிடவேண்டும் என்று தலைமைச்செயலாளருக்கு, டாக்டர் அன்புமணி ராமதாஸ் கடிதம் எழுதியுள்ளார்.

சென்னை,

தமிழக அரசின் தலைமைச்செயலாளர் கிரிஜா வைத்தியநாதனுக்கு, டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

தமிழகத்தில் மக்களின் மணல் தேவையை போக்குவதற்காக கூடுதலாக 70 மணல் குவாரிகளை தமிழக அரசு கண்டறிந்து திறக்கப்போவதாக பத்திரிகைகளில் செய்திகள் வெளியாகின. ஏற்கனவே உள்ள 19 மணல் குவாரிகளுக்கும் கூடுதலாக ராமநாதபுரம், தஞ்சாவூர், நாகப்பட்டினம், அரியலூர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் அவை திறக்கப்படும் என்றும் தெரியவருகிறது.

இதுசம்பந்தமாக ஏற்கனவே நான் ஐகோர்ட்டில் பொதுநலன் வழக்கு தாக்கல் செய்துள்ளேன். ஆறு மற்றும் நீர்நிலைகளைக் காப்பாற்றுவதற்காக மணல் குவாரிகளை மூட உத்தரவிடவேண்டும் என்று கோரியுள்ளேன். அந்த வழக்கில் அரசுக்கு நோட்டீஸ் பிறப்பித்து, விசாரணை நிலுவையில் உள்ளது.

இந்த விவகாரத்தில் கோர்ட்டில் அரசு பதிலளிக்க வேண்டிய சூழ்நிலையில், புதிய மணல் குவாரிகளை அடையாளம் காண்பதற்கு முடிவு எடுப்பது நேர்மையானதாக இருக்காது. ஆற்று மணலுக்கு பதிலாக கட்டுமானத்துக்கு மாற்று அம்சங்களை அறிமுகம் செய்வதுதான் சரியாக இருக்கும்.

எனவே, எனது வழக்கில் தீர்ப்பு வெளியாகும்வரை புதிய மணல் குவாரிகளை திறக்கும் அனைத்து நடவடிக்கைகளையும் அரசு நிறுத்தி வைக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story