ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சமத்துவ மக்கள் கட்சி போட்டியா? சரத்குமார் பதில்


ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சமத்துவ மக்கள் கட்சி போட்டியா? சரத்குமார் பதில்
x
தினத்தந்தி 26 Nov 2017 1:28 AM IST (Updated: 26 Nov 2017 1:28 AM IST)
t-max-icont-min-icon

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சமத்துவ மக்கள் கட்சி போட்டியிடுமா? என்பதற்கு சரத்குமார் பதில் அளித்தார்.

சென்னை,

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார், சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் உயர்மட்டக்குழு மற்றும் மாவட்ட செயலாளர் கூட்டம் வருகிற 29-ந்தேதி மதுரையில் நடக்கிறது. அக்கூட்டத்தில் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் எங்கள் நிலைப்பாடு என்ன? என்பதை அறிவிப்போம். தற்போது அ.தி.மு.க.வுக்கு இரட்டை சிலை சின்னம் கிடைத்திருப்பதால், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அவர்களுக்கு வெற்றி வாய்ப்பு உள்ளது.

தி.மு.க. தலைவர் கருணாநிதியை நான் சந்தித்து உடல்நலம் விசாரித்தேன். அதற்காக ‘தி.மு.க.வுடன் இணைகிறேனா?, இடைத்தேர்தலில் தி.மு.க.வுக்கு ஆதரவா?’, என்று கேட்கவேண்டாம். அதற்கு வாய்ப்பு இல்லை.

தயாரிப்பாளர் அசோக்குமார் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் இந்த நேரத்தில், எல்லா பைனான்சியர்களுமே கந்துவட்டி தான் தருகிறார்கள் என்ற குற்றச்சாட்டை நான் மறுக்கிறேன். ஏனென்றால் நானே பல பைனான்சியர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சில நடிகர்களுக்கு தவணை காலங்களை பெற்று தந்திருக்கிறேன். உரிய பேச்சுவார்த்தை நடத்தப்பட்டிருந்தால் இப்படி ஒரு அசம்பாவிதம் ஏற்பட்டிருக்காது.

‘குற்றவாளிகள் நாட்டை ஆளக்கூடாது’, என்று கமல்ஹாசன் கூறியது நல்ல கருத்துதான். அ.தி.மு.க.வை குறிவைத்து சொன்னாரா? என்று எனக்கு தெரியாது. அ.தி.மு.க.வை, பா.ஜ.க. இயக்குவதாக உறுதியாக கூறமுடியாது, அப்படித்தான் தெரிகிறது என்றே சொல்லமுடியும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மாற்று கட்சியினர் இணைந்தனர்

முன்னதாக மாற்று கட்சிகளில் இருந்து பெண்கள் உள்பட 200-க்கும் மேற்பட்டோர் சரத்குமார் முன்னிலையில் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியில் இணைந்தனர்.

Next Story