ஆர்.கே நகர் தேர்தல் வேட்பு மனு தாக்கல் செய்ய குவிந்த 42 சுயேட்சைகள்


ஆர்.கே நகர்  தேர்தல் வேட்பு மனு தாக்கல் செய்ய குவிந்த 42 சுயேட்சைகள்
x
தினத்தந்தி 4 Dec 2017 1:39 PM IST (Updated: 4 Dec 2017 1:38 PM IST)
t-max-icont-min-icon

ஆர்.கே நகர் தேர்தல் வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாளான இன்று 42 சுயேட்சைகள் குவிந்து உள்ளனர்.

சென்னை, 

ஆர்.கே.நகர் தொகுதிக்கு வருகிற 21-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் அ.தி. மு.க., தி.மு.க., டி.டி.வி. தினகரன் அணி, பா.ஜ.க., நடிகர் விஷால், நாம் தமிழர் கட்சி, ஜெ.தீபா ஆகியோருக்கு இடையே  7 முனைப் போட்டி ஏற்பட்டுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை வரை 30 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். கடைசி நாளான இன்றும் சிலர் மனுதாக்கல் செய்தனர். முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் அனைவரும் ஏற்கனவே வேட்புமனு தாக்கல் செய்து விட்டனர். பிரதான கட்சிகளில் பாரதீய ஜனதா கட்சியின் வேட்பாளர் கரு.நாகராஜன் இன்று மனுதாக்கல் செய்தார்.

சுயேட்சை வேட்பாளர்களாக களம் இறங்கும் நடிகர் விஷால், ஜெ.தீபா ஆகியோரும் இன்று தங்களது வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர். ஆர்.கே.நகர் தொகுதியை முன் மாதிரி தொகுதியாக மாற்றிக் காட்டுவேன் என்ற  கோஷத்துடன் நடிகர் விஷால் களம் இறங்கியுள்ளார்.

முன்னதாக இன்று காலை அவர் முன்னாள் முதல்வர் காமராஜர் நினைவு இல்லம் ,ராமாவரத்தில் உள்ள எம்.ஜி.ஆர். இல்லத்துக்கு சென்று மரியாதை செலுத்தினார். அடையாறு சிவாஜி மணிமண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கு, விஷால் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பிறகு அவர் மெரீனா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்துக்கு வந்தார். அங்கு அவர் மலர் அஞ்சலி செலுத்தினார்.

அதன் பிறகு அவர் ரசிகர்களுடன் தண்டயார்பேட்டையில் உள்ள மாநகராட்சி அலுவலகத்துக்கு சென்று வேட்புமனு தாக்கல் செய்ய வந்தார். 

3 மணிக்கு மனுதாக்கல் செய்ய அவகாசம் முடியும் நிலையில் வேட்பு மனு தாக்கல் செய்ய 42  சுயேட்சை வேட்பாளர்கள் அங்கு குவிந்து உள்ளனர்.  விஐபி  என்று பாகுபாடு இல்லாமல்   விஷால் , தீபா ஆகியோரும்  வரிசையில் நின்று வேட்புமனு தாக்கல் செய்ய வேண்டும் என அவர்கள் கோரிக்கை வைத்தனர். நடிகர் விஷால் மனு தாக்கல் செய்ய வரும் போது வரிசை படியே அனுமதிக்க வேண்டும்  என தேர்தல் அலுவலர் அலுவலகம் முன்பு சுயேட்சை வேட்பாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வேலூர் மாவட்டம் நாட்றம்பள்ளி தாலுகா அக்கிராக கிராமத்தை சேர்ந்த மணீதன் என்பவர் ஆர்.கே.நகர் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடுகிறார். அவர் இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வந்தார்.

மனுதாக்கல் செய்யும் இடத்துக்கு அவர் பின்னோக்கியே நடந்து வந்தார். வித்தியாசமான முறையில் மனுதாக்கல் செய்ய வந்த அவரிடம் நிருபர்கள் வயதை கேட்டனர். அதற்கு அவர் எனது வயது 2 கோடியே 14 லட்சத்து 49 ஆயிரத்து 668 நிமிடம் (48 வயது) என்றார். அவர் கடந்த 26 வருடமாக பின்னோக்கியே நடந்து வருகிறார்.

1991-ம் ஆண்டு முதல் 2007-ம் ஆண்டுவரை அவர் யாரிடமும் பேசாமல் மவுனவிரதம் கடை பிடித்தார். ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட மனு தாக்கல் செய்வதற்காக அவர் கடந்த 2007-ம் ஆண்டு மவுன விரதத்தை கலைத்தார்.

அவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்ற பிறகுதான் திருமணம் செய்வேன் என்கிறார். தற்போது ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சுயேட்சையாக போட்டியிடுகிறார்.

ஆர்.கே.நகர் தொகுதியில் கோவையை சேர்ந்த நூர்முகமது என்பவர் சுயேட்சையாக போட்டியிடுகிறார். அவர் இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வந்திருந்தார்.

குதிரையில் அமர்ந்தபடி வலம் வந்த அவர் அதே தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்யும் இடத்திற்கும் வந்தார். பின்னர் வேட்புமனு தாக்கல் செய்தார்.

ஆர்.கே.நகர் தொகுதியில் கோவையை சேர்ந்த தனலட்சுமி என்ற பெண்ணும் சுயேட்சையாக போட்டியிடுகிறார். அவர் இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வந்தார். அப்போது அவருடன் வந்தவர்கள் டெங்கு கொசு போலவும், டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை வேண்டுவது போலவும் வேடமணிந்தபடி குளுக்கோஸ் பாட்டிலை தூக்கியபடி நடித்துக் கொண்டே வந்தனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். பின்னர் தனலட்சுமியை மட்டும் வேட்புமனு தாக்கல் செய்ய அனுப்பி வைத்தனர். 

Next Story