ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்: ஒருங்கிணைப்புக்குழு ஆலோசனை கூட்டம்
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலையொட்டி ஒருங்கிணைப்புக்குழு ஆலோசனை கூட்டம் ரிப்பன் மாளிகையில் நடந்தது.
சென்னை,
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலையொட்டி பொது பார்வையாளர்கள், காவல் பார்வையாளர்கள் மற்றும் மாவட்ட கூடுதல் தேர்தல் பார்வையாளர்கள் பங்கேற்ற ஒருங்கிணைப்புக்குழு ஆலோசனை கூட்டம் சென்னை பெருநகர மாநகராட்சியின் தலைமை அலுவலகமான ரிப்பன் மாளிகையில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு, மாவட்ட தேர்தல் அதிகாரி தா.கார்த்திகேயன் தலைமை தாங்கினார்.
தேர்தல் பொதுப்பார்வையாளர்கள் கம்லேஷ் குமார் பந்த், அல்கா ஸ்ரீவஸ்தவா, காவல் பார்வையாளர்கள் இம்மானுவேல் முய்வா, குர்ஷீத் அகமது, சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன், மாவட்ட கூடுதல் தேர்தல் அலுவலர்கள் மற்றும் பிற துறை தேர்தல் அதிகாரிகள் பங்கேற்றனர்.
கூட்டத்தில், தேர்தல் பிரசாரத்தின் போது ஒற்றைச்சாளர முறையில் அனுமதி அளிப்பது குறித்தும், அவற்றை தொடர்ந்து வீடியோ மற்றும் பறக்கும் படைகள் மூலம் கண்காணிப்பது குறித்தும், வேட்பாளர்கள் பிரசாரம் மேற்கொள்ளும் போது பிற நபர்களால் இடையூறு ஏற்படாத வண்ணம் பாதுகாப்பு அளிப்பது குறித்தும், தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு சின்னம் ஒதுக்கீடு செய்வது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
இதேபோல, வாக்குப்பதிவு அலுவலர்களுக்கு பயிற்சி அளிப்பது குறித்தும், வாக்குப்பதிவு இடங்களை கணினி முறையில் ஒதுக்கீடு செய்தல், வாக்குச்சாவடிகளுக்கு வாக்குப்பதிவு எந்திரங்களை ஒதுக்கீடு செய்தல், வாக்குப்பதிவு எந்திரங்களை சரிபார்த்து தயார்படுத்தி, தேவையான பொருட்களை கையிருப்பில் வைக்கவும், அதற்கு தேவையான பொறியாளர்களை தயார்படுத்துதல் குறித்தும், தேர்தல் நடத்தை விதிகளை முறையாக வேட்பாளர்கள் பின்பற்றிட விளக்கிடவும், வேட்பாளர்களின் செலவு கணக்குகளை பராமரித்தல் குறித்தும், பொதுமக்கள் 100 சதவீதம் வாக்குப்பதிவு செய்திடும் வகையில் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்வது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
மேலும் வாக்குப்பதிவு தினத்தன்று வாக்குச்சாவடியில் நுண்பார்வையாளர்கள் மூலம் வாக்குப்பதிவினை கண்காணித்திடவும், வாக்குப்பதிவு எந்திரங்களை வாக்குப்பதிவு மையத்திற்கு எடுத்துச்சென்று, வாக்குப்பதிவு நிறைவுற்றவுடன் பாதுகாப்பாக வாக்கு எண்ணும் மையத்துக்கு கொண்டு செல்வது குறித்தும், தேர்தல் கட்டுப்பாட்டு அறையில் பெறப்படும் புகார்களுக்கு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளுதல் குறித்தும்,
பத்திரிகை மற்றும் தொலைக்காட்சிகளில் அனுமதி பெறாமல் வெளியிடப்பப்படும் தேர்தல் விளம்பரங்கள், தேர்தல் விதிமீறல்கள் மற்றும் தகவல்களை கண்காணித்து நடவடிக்கை மேற்கொள்வது குறித்தும், அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வாக்காளர்களுக்கு தேவையான குடிநீர் வசதி, மின்வசதி, கழிப்பிட வசதி, சாய்தள வசதி மற்றும் பிற அடிப்படை தேவைகளை செய்வது குறித்தும், இப்பணிகளை அனைத்து துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து மேற்கொள்வது குறித்தும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
மேற்கண்ட தகவல் சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி தா.கார்த்திகேயன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story