கிருஷ்ணகிரி அணையில் உடைந்த மதகின் ‘ஷட்டரை’ அகற்றும் பணி தொடங்கியது


கிருஷ்ணகிரி அணையில் உடைந்த மதகின் ‘ஷட்டரை’ அகற்றும் பணி தொடங்கியது
x
தினத்தந்தி 5 Dec 2017 2:40 AM IST (Updated: 5 Dec 2017 2:40 AM IST)
t-max-icont-min-icon

கிருஷ்ணகிரி அணையில் உடைந்த மதகின் ‘ஷட்டரை’ அகற்றும் பணி நேற்று தொடங்கியது.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி அணையில் கடந்த 29-ந்தேதி மாலை பிரதான மதகின் ‘ஷட்டர்’ உடைந்தது. இதையடுத்து அதிகாரிகள் குழுவினர் அங்கு சென்று ஆய்வு செய்தனர். இதையடுத்து உடைந்த ‘ஷட்டரை’ அகற்றும் பணி நேற்று தொடங்கியது. இதை மாவட்ட கலெக்டர் கதிரவன் நேரில் சென்று பார்வையிட்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. அணையின் முதல் ஷட்டரில் உடைப்பு ஏற்பட்டதால் அணையில் இருந்து 10 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது. 51 அடியாக இருந்த கிருஷ்ணகிரி அணையின் நீர்மட்டம், ஷட்டரை சீர்செய்யும் பணிக்காக 33 அடியாக குறைக்கப்பட்டுள்ளது.

2 நாளில் அகற்றப்படும்

தற்போது இந்த பணி இன்று (அதாவது நேற்று) காலை தொடங்கப்பட்டுள்ளது. பொதுப்பணித்துறை அதிகாரிகளின் மேற்பார்வையில் தொழில்நுட்ப வல்லுனர்கள், 25-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் சுழற்சிமுறையில் 24 மணி நேரமும் இந்த பணியில் ஈடுபடுவார்கள். உடைந்த மதகின் ‘ஷட்டர்’ முழுவதுமாக 2 நாட்களில் அகற்றப்பட்டு விடும்.

இன்னும் ஒரு வாரத்திற்குள் புதிய மதகு ஷட்டர்கள் அமைக்கப்பட்டு தண்ணீர் சேமிக்கப்படும். ஏற்கனவே கிருஷ்ணகிரி அணையில் பாசன கால்வாய் மூலமாக வெளியேற்றப்பட்ட நீரின் மூலமாக பல ஏரிகள் நிரப்பப்பட்டுள்ளன. விவசாயிகளுக்கு எந்தவித பாதிப்புகளும் ஏற்படாத வகையில், அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறோம்.

கிருஷ்ணகிரி அணையில் இருந்து திறந்து விடப்பட்ட நீரின் மூலம், திருவண்ணாமலை மாவட்டம் சாத்த னூர் அணை நிரம்பி உள் ளது. மேலும் தென்பெண்ணை ஆற்றங்கரையோரங்களில் வசிக்கக்கூடிய மக்களின் பாதுகாப்பு கருதி, தென்பெண்ணை ஆற்றில் குறைவான அளவு தண்ணீர் திறந்து விடப்பட்டு, கண்காணித்து வந்தோம். இதனால் மதகு ஷட்டர் சீரமைக்கும் பணியில் தாமதம் ஏற்பட்டது.

இவ்வாறு அவர் கூறினார்.

குழுவினர் ஆய்வு

கிருஷ்ணகிரி அணையில் உடைந்த மதகு ஷட்டரை அகற்றும் பணியை சென்னை பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் முருகு சுப்பிரமணியன் தலைமையிலான குழுவினர் நேற்று மாலை நேரில் ஆய்வு செய்தனர். 

Next Story