புயலில் சிக்கி மாயமான 2,384 மீனவர்கள் மீட்பு எடப்பாடி பழனிசாமி தகவல்


புயலில் சிக்கி மாயமான 2,384 மீனவர்கள் மீட்பு எடப்பாடி பழனிசாமி தகவல்
x
தினத்தந்தி 5 Dec 2017 5:00 AM IST (Updated: 5 Dec 2017 2:44 AM IST)
t-max-icont-min-icon

புயலில் சிக்கி மாயமானவர்களில் 2,384 மீனவர்கள் மீட்கப்பட்டுள்ளனர் என்று முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

சென்னை,

தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

‘ஒகி’ புயலினால் பாதிப்படைந்த கன்னியாகுமரி மாவட்டத்தில் உடனடியாக மேற்கொள்ளப்பட்ட மீட்பு, நிவாரணம் மற்றும் சீரமைப்புப் பணிகள் குறித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமைச் செயலகத்தில் காணொலிக் காட்சி மூலம் கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் சஜ்ஜன்சிங் ரா.சவான் மற்றும் கண்காணிப்பு அலுவலர்களாக நியமிக்கப்பட்ட டி.கே.ராமசந்திரன், ராஜேந்திரகுமார், ஜோதி நிர்மலாசாமி, டாக்டர் ஜி.எஸ்.சமீரன் ஆகியோரிடம் கேட்டுத் தெரிந்து கொண்டு, எடுக்க வேண்டிய அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்த உத்தரவுகளையும் வழங்கினார்.

பல துறைகளைச் சார்ந்த அரசு ஊழியர்கள் மற்றும் வாரியப் பணியாளர்கள் இரவு பகல் பாராமல் நிவாரணப் பணிகளில் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து தங்களை முழுமையாக ஈடுபடுத்தி வருகின்றனர். இதன் விளைவாக மக்கள் விரைவாக இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில், 29 நிவாரண முகாம்களில் 2,391 பேர் தங்க வைக்கப்பட்டிருந்தனர். இயல்பு வாழ்க்கை திரும்புகின்ற காரணத்தால், தற்போது 9 முகாம்களில், 891 பேர் மட்டுமே தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களும் வீடு திரும்பும் வரை போதிய உணவு, குடிநீர், மருத்துவம் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் தொடர்ந்து வழங்கப்பட வேண்டும் என முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து காணாமல் போன 294 மீனவர்களில், 220 மீனவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். மேலும், மாவட்ட நிர்வாகம், இந்திய கடற்படையின் 15 கப்பல்கள், இந்திய விமானப் படையின் 5 இலகுரக விமானங்கள், 5 ஹெலிகாப்டர்கள் மற்றும் கடலோர காவல் படையினருடன் இணைந்து தேடுதல் மற்றும் மீட்புப் பணியில் முழுவீச்சில் ஈடுபட்டு வருகிறது. இதுதவிர, மற்ற இடங்களில் இருந்தும் 284 படகுகளில் சென்ற 2570 மீனவர்களில், இதுவரை 205 படகுகளும், அதில் இருந்து 2,384 மீனவர்களும் மீட்கப்பட்டு சம்பந்தப்பட்ட மீனவர்களின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு வருகிறது.

மீதமிருக்கும் 79 படகுகள் மற்றும் 186 மீனவர்களையும், கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து சென்ற 74 மீனவர்களையும் அவர்களது படகுகளையும் மீட்கும் பணியில் கப்பல் படையும், விமானப் படையும், கடலோரக் காவல் படையும் தொடர்ந்து ஈடுபடும் என்றும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

விவசாய நிலங்களில் விழுந்துள்ள ரப்பர், தென்னை போன்ற மரங்களை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, தோட்டக்கலைத் துறை மற்றும் வனத்துறை அதிகாரிகள் ஒருங்கிணைந்து கணக்கீடு செய்யும் பணிகள் மேற்கொள்ள வேண்டும் என உத்தரவிட்டார்.

புயலால் சேதமடைந்த தேசிய நெடுஞ்சாலைகள் (60 கி.மீ.), மாநில நெடுஞ்சாலைகள் (40 கி.மீ.) மற்றும் ஊரக மற்றும் நகர்ப்புறச் சாலைகள் (சுமார் 100 கி.மீ.) ஆகியவற்றை விரைவில் சீரமைக்கும் பணிகளில் சம்பந்தப்பட்ட துறைகள் ஈடுபட வேண்டும் எனவும் ஆணையிட்டார்.

புயலால் சேதமடைந்த 4,157 குறைந்த அழுத்த மின் கம்பங்களில் 1,998 மின் கம்பங்களும், 2,426 உயரழுத்த மின் கம்பங்களில் 972 மின் கம்பங்களும் மாற்றப்பட்டுள்ளன.

மீதமுள்ள மின் கம்பங்களை போர்க்கால அடிப்படையில் மின்சாரத் துறை அலுவலர்கள் பழுது பார்க்கும் பணியை மேற்கொண்டு அனைத்து பகுதிகளுக்கும் அடுத்த 48 மணி நேரத்திற்குள் மின் விநியோகம் முழுவதுமாக வழங்கப்பட வேண்டும் எனவும், இப்பணிகளுக்கும் கூடுதலாக பணியாளர்கள் தேவைப்படின், பக்கத்து மாவட்டங்களில் இருந்து பணியமர்த்திக் கொள்ள வேண்டும் எனவும் ஆணையிட்டார்.

காணொலிக் காட்சி மூலமாக மாவட்ட கலெக்டர் மற்றும் அதிகாரிகளுடன் நடைபெற்ற ஆய்வுக் கூட்டம் முடிந்த பின்னர், துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், பி.தங்கமணி, டி.ஜெயக்குமார், டாக்டர் விஜயபாஸ்கர், துரைக்கண்ணு, ஆர்.பி.உதயகுமார், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் மற்றும் உயர் அதிகாரிகளுடன் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தொடர்ந்து ஒரு ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது.

இக்கூட்டத்தில், கன்னியாகுமரி மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள சேதங்களை கணக்கிடும் பணியை முடித்து 11-12-2017 தேதிக்குள் அரசிடம் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என ஆணையிட்டார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

Next Story